Published:Updated:

கோவை: அன்று ஹெலிகாப்டரில் சென்று யாகம் நடத்திய அதிமுக விசுவாசி இன்று திமுக-வில் இணைந்தார்!

விஷ்ணுபிரபு
விஷ்ணுபிரபு

அ.தி.மு.க ஆட்சியமைக்க ஹெலிகாப்டரில் சென்று யாகம் நடத்திய கோவை விஷ்ணுபிரபு தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

ஆட்சியை இழந்தாலும், அ.தி.மு.க கொங்கு மண்டலத்தில் மீண்டும் தடம் பதித்து வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ளது. ஆனாலும், அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களின் ஆதிக்கத்தால் ஓரங்கட்டப்பட்ட பலர் அதிருப்தியில் இருக்கின்றனர். அ.தி.மு.க இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில துணைத் தலைவராக இருந்தவர் விஷ்ணுபிரபு.

ஜெயலலிதாவுடன் விஷ்ணுபிரபு
ஜெயலலிதாவுடன் விஷ்ணுபிரபு

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இவர், ஜெயலலிதா காலம் முதல் கட்சியில் ஆக்டிவாக இருந்தார். கடந்த ஆண்டுகூட அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என கோவையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று யாகம் நடத்தினார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சீட் மறுக்கப்பட்டது. தொடர்ந்து புறக்கணிக்கப்படவே அ.தி.மு.க-விலிருந்து விலகி மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, தற்போது தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். இது குறித்து விஷ்ணுபிரபு கூறுகையில், ``அ.தி.மு.க எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அம்மா மறைவுக்குப் பிறகு அதிலிருந்து திசை மாறிவிட்டது.

விஷ்ணுபிரபு
விஷ்ணுபிரபு

இப்போது கட்சி அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. தலைமையும் இதில் நடவடிக்கை எடுப்பதில்லை. எனக்கு நேரடியாக எந்த சிபாரிசும் இல்லாமல் அம்மா கொடுத்த பதவி அது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி பொறுப்பாளராக நியமித்திருந்தனர். அம்மா இருந்தபோது, தூங்கி எழும்போது அடுத்த நாள் பதவி இருக்குமா என்ற பயத்தில்தான் எல்லோரும் இருப்பார்கள். அந்த அளவுக்கு, தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். இப்போது அந்தச் சூழ்நிலை இல்லாததால், எல்லோரும் தொடர்ந்து தவறு செய்கின்றனர்.

அமைச்சர்களின் காலுக்குக் கீழ் கிடந்து விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். முதல்வரையே பார்த்தாலும், அந்தந்த அமைச்சர் மனது வைப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை. தேர்தல் முடிந்தும் அவர்கள் திருந்தவில்லை. இது எப்போதும் மாறாது என்பதால் விலகி, தி.மு.க-வில் இணைந்துவிட்டேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு