Published:Updated:

தூத்துக்குடி: கைவிடப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை?! - வேதாந்தா விளம்பரத்தின் பின்னணி என்ன?

சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை
சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

காப்பர் உற்பத்தி, ஏற்றுமதியில் தனி முத்திரை பதித்த வேந்தாந்தா நிறுவனம், உற்பத்தியை அதிகப்படுத்திட வேறு மாநிலங்களில் காப்பர் யூனிட்டுகளை அமைக்க விருப்பம் தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் அளித்துள்ளது

’தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சாலையால் நிலமும், நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது’ என ஆலையைச் சுற்றியுள்ள சுமார் 20-க்கும்மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 2018-ல் 100 நாட்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டத்தின் 100வது நாளான கடந்த 2018, மே 22-ம் தேதி மக்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து பேரணியாகச் சென்றனர். அப்போது திடீரென கலவரம் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூட்டினால் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அடுத்த சில நாட்களில் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. தொடர்ந்து ஆலைத்தரப்பு ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது. இதற்கிடையில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் என பல தரப்பினரும் போராட்டம் நடத்தியும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதேபோல, ’ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்ககூடாது, ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்’ என ஆலைக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்த எதிர்ப்பாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீதிமன்றத்தில் மாநில அரசும் ஆலைக்கு எதிரான நிலைப்பாட்டில் நிற்க வழக்கும் ஒரு புறம் நடந்து வருகிறது.

இதற்கிடையில், ஆலைத்தரப்பும் குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்தது. ’ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை. வேறு வேலையைத் தேடிக் கொள்வோம்’ என முடிவெடுத்து ஆலையில் பணிபுரிந்த ஊழியர்களில் பலர், தானாகவே வேலையை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்த தொழில்நுட்ப ரீதியான ஊழியர்கள், வேதாந்தாவின் மற்ற சில கம்பெனிகளுக்கு பணிமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலக பணியில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ”எங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறோம்” என்ற தலைப்பில் வேந்தாந்தா நிறுவனம் விளம்பரம் ஒன்றை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

வேதாந்தா வெளியிட்டுள்ள விளம்பரம்
வேதாந்தா வெளியிட்டுள்ள விளம்பரம்

அந்த விளம்பரத்தில், “வேதாந்தா நிறுவனமானது இயற்கை வளத்தைப் பயன்படுத்தி உற்பத்தியில் சாதித்து வரும் ஒரு முன்னணி நிறுவனம். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எங்களது உற்பத்தி நிறுவனங்கள் எண்ணெய், சில்வர், ஜிங்க், இரும்புத்தாது, காப்பர், அலுமினியம் இதுதவிர மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக செயல்பட்டு வருகின்றன. எங்களுடன் இணைந்து ’காப்பர்’ உற்பத்தி செய்திட கடற்கரை வளம் மற்றும் துறைமுகம், சாலை வசதிகள் இருந்தால் நல்லது.

இந்த வளங்களைக் கொண்ட மாநிலங்களை வரவேற்கிறோம். சுமார் 10,000 கோடியில் ஆலை அமைக்கப்பட்டு, தினமும் சராசரியாக 500 டன் காப்பர் உற்பத்தி செய்திட திட்டமிட்டுள்ளோம். இந்த ஆலையை அமைக்க சுமார் 1,000 ஏக்கர் நிலமும் தேவைப்படுகிறது. இதன் மூலம் நேர்முக மற்றும் மறைமுகமாக சுமார் 10,000 தொழிலாளர்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும். விருப்பமுள்ள மாநிலங்கள் எங்கள் நிறுவனத்தை அணுகலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியிலும் ஆலை எப்போதாவது நிச்சயம் திறக்கும் என்ற நினைப்பில் இருக்கும் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

அதே நேரத்தில், ”ஸ்டெர்லைட் ஆலை இடம் மாறப்போகிறது” என எதிர்ப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”தூத்துக்குடியில் நடந்தது போல இந்த ஆலை, எந்த மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தாலும், அந்த மாநிலத்தில் வாழும் எங்களைப் போன்ற அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள், எனவே இந்த காப்பர் உருக்காலைக்கு எங்குமே அனுமதி அளிக்கக்கூடாது” என ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பைக் காட்டுகின்றனர் எதிர்ப்பாளர்கள்.

ஆலைத்தரப்பினரிடம் பேசினோம், ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், காப்பர் ஏற்றுமதி பெரிய அளவில் இல்லாமல், இறக்குமதிதான் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை, மத்திய மாநில அரசுகளும் அறிவார்கள். ஒரு நிறுவனத்தின் கிளைகள் அடுத்தடுத்த பகுதிகளில் துவங்குவதில்லையா? அதைப்போல காப்பர் உற்பத்தியை விரிவுபடுத்திடவே அப்படியொரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

அதே நேரத்தில், பல ஆயிரம் கோடி முதலீட்டில் துவக்கிய இந்த ஆலையை தூத்துக்குடியிலிருந்து இடம்மாற்றிச் செல்லும் திட்டம் என எதுமில்லை. நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம். சட்டரீதியாகப் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றனர். கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுரங்க, நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, ”கடந்த 2017-18 மற்றும் 2019-20-க்கு இடையில், இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் இறக்குமதி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி 90 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட காப்பர் இறக்குமதி 2017-18 ஆம் ஆண்டில் 44,245 டன்னிலிருந்து 2018-19 ஆம் ஆண்டில் 92,990 டன்னாகவும், 2019-20ல் 1.52 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டில் 3.78 லட்சம் டன்னிலிலிருந்து 2018-19 ஆம் ஆண்டில் 47,917 டன்னாகவும், 2019-20ல் 36,959 டன்னாகவும் குறைந்தது. தூத்துக்குடியை அடித்தளமாக கொண்ட வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை கடந்த 2018 முதல் மூடப்பட்டிருப்பது தான் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் உள்நாட்டு உற்பத்தியை பாதித்தது. நான்கு லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அந்த காப்பர் நிறுவனம் மூடப்பட்டதால் இந்தியாவில் காப்பர் உற்பத்தி, 2017-18 ஆம் ஆண்டில் 8.3 lt (Long ton)லிருந்து 2019-20ல் 4.1 ltயாகக் குறைந்தது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இந்தியாவின் காப்பர் இறக்குமதி 2 ஆண்டுகளில் 3.5 மடங்கு உயர்ந்துள்ளது. காப்பர் உற்பத்தியில் 40% கொண்டிருந்த ஆலையில் மூடல் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனப் பேசினார். நாட்டின் காப்பர் தேவையை பூர்த்தி செய்ய புதிய யுக்திகளை கையாண்டுதான் ஆக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், ஆலைத்தரப்பு இந்தியாவில் எந்த மாநிலம் முன்வருகிறதோ அந்த மாநிலத்தில் சுயசார்பு திட்டத்தின் கீழ் தொடங்குவதற்கு தயாராகி அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு