Published:Updated:

`அதிகாரிகள் நேர்மையுடன் இருக்க வேண்டும்'- கீழடிக்காக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கனிமொழி மதி!

`நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, அதிகாரிகள் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதுவரை கண்டுபிடித்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.'

வழக்கறிஞர் கனிமொழி மதி
வழக்கறிஞர் கனிமொழி மதி

'கீழடி' தமிழகத்தின் தென்கோடியிலிருக்கும் இந்த ஊரின் பெயர், இன்று ஒரு வரலாற்றின் அடையாளமாக உள்ளது. கீழடியில் கிடைத்த ஆய்வின் முடிவுகள், தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது . 2015-ல் தொடங்கிய இந்த ஆய்வில், நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பானைகள், செப்பேடுகள் என கிடைக்கும் பொருளுக்குப் பின்னால் பல ஆச்சர்யத் தகவல்கள் கிடைக்கின்றன.

கீழடி
கீழடி

கீழடி ஆய்வுக்காக இடம் கொடுத்தவர்கள் தொடங்கி, பணியாற்றியவர்கள் வரை இதற்குப்பின் பலரது உழைப்பு உள்ளது. கீழடியில் ஆய்வுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, அதற்கெதிராக வழக்குத் தொடர்ந்து, பணிகள் மீண்டும் தொடங்க முக்கியக் காரணமாக இருந்தவர், வழக்கறிஞர் கனிமொழி மதி. தற்போது, பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ள இந்த ஆய்வின் முடிவு குறித்தும், ஆய்வின் ஆரம்பநிலை குறித்தும் வழக்கறிஞர் கனிமொழி மதியிடம் பேசினோம்.

" கீழடி ஆய்வைத் தொடர்வதன்மூலம் கூடுதலான பொருள்கள் கிடைக்கும் என்பது என்னுடைய யூகமாக இருந்தது. நிறைய பொருகள் ஏற்கெனவே அகழ்வாராய்ச்சியில் நமக்கு கிடைத்திருந்தன. பானை ஓடுகள் கிடைப்பது அகழ்வாராய்ச்சியில் முக்கியமானது. மனித நாகரிகம் அங்கிருந்ததை முடிவுசெய்வது இந்தப் பானை ஓடுகள்தாம். ஓர் இடத்தில் பானை ஓடுகள் கிடைத்தாலே ஆராய்ச்சியைத் தொடர வேண்டும்.

நான், பொதுநல வழக்கு போடுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, மூன்று கட்ட அறிக்கைகள் வெளியிடவில்லை என்பதும்தான். வழக்கு போட்டதற்குப் பின் தொல்லியலாளர்கள் என்னை அழைத்து, 'ஆதிச்சநல்லூர் விஷயங்களையும் கொஞ்சம் கேளுங்கள்' என்றனர்.

கீழடி ஆய்வு
கீழடி ஆய்வு

ஆதிச்சநல்லூர் விஷயங்களையும் ஆர்.டி.ஐ-யில் கேட்டேன். நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சிகளில் பல ஆய்வு முடிவுகள் ஆவணப்படுத்தப்படவில்லை. இது, 'அரசியலா!' என்று கேட்கின்றனர். அதிகாரிகள் முடிவு அறிவிப்பது முக்கியத்துவமானது இல்லை என நினைத்திருக்கலாம். தொல்லியல் துறை அதிகாரிகாரிகளுக்குத்தான் உண்மை தெரியும். அரசியல்வாதிகளைவிட இவர்களுக்குமே அதிகாரம் உண்டுதான். அதிகாரிகளிடம் நேர்மைத்தன்மை இருக்க வேண்டும்.

நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, அதிகாரிகள் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதுவரை கண்டுபிடித்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. தொடர்ந்து பல இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும்போதுதான் முழுமையான வரலாற்றுப் பின்புலத்தை அறிய முடியும். ஐந்தாவது கட்டம், ஆறாவது கட்டம் என்றெல்லாம் நிறுத்த முடியாது.

கீழடி ஆய்வுப் பணி
கீழடி ஆய்வுப் பணி

மனித இனம் வாழும் வரை ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டியதுதான். தமிழகத்திற்கு மட்டுமல்ல, மற்ற மொழி மற்றும் இனம் சார்ந்த வரலாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகள் எல்லாம் இனக்குழு பற்றி அவர்களுடைய வரலாறைத் தேடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதனால்தான், தொல்லியல்துறை என்ற ஒன்று இருக்கிறது. அந்தத் துறையின் வேலையே தொடர்ந்து ஆய்வுகளைச் செய்வதுதான். ஆய்வில் கிடைக்கும் தகவல்களை வைத்து வரலாறைத் தெரிந்துகொள்ளவேண்டியதுதான்" என்று ஆதங்கத்தோடு பேசினார் கனிமொழி மதி.