Published:Updated:

`37 நாள்களுக்குப் பிறகு ஊட்டியில் மீண்டும் கொரோனா!’ -அச்சத்தில் மலைக்கிராமங்கள்

ooty
ooty

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத நிலையில் 37 நாள்களுக்குப் பிறகு புதிதாக 3 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் கோயம்பேடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தற்போது வரை நீலகிரி மாவட்டத்தில் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

ooty botanical garden
ooty botanical garden

அதன் பின்னர் சென்னையிலிருந்து இ- பாஸ் விண்ணப்பித்து வந்தவர்களுக்கு மட்டும் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த நபர் உட்பட 6 பேர் குணமடைந்தனர். இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் நீலகிரி கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்துவந்ததது.

இந்நிலையில் ஊட்டி அருகில் உள்ள குளிச்சோலை பகுதியைச் சேர்ந்த 22 வயது ஆண், தும்மனட்டி கப்பச்சி பகுதியைச் சேர்ந்த 52 வயதுப் பெண், மேலூர் ஊராட்சிக்குட்பட்ட தைமலை பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண் என இந்த 3 நபர்களுக்குக் கொரோனா அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலருக்குத் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Ooty, A.T.C
Ooty, A.T.C

தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் கடந்த 37 நாள்களுக்குப் பிறகு நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நோய்த் தொற்று ஏதும் இல்லை. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வருகைபுரிபவர்கள் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்த பின்பே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ooty entrance
ooty entrance

தற்போது நீலகிரி மாவட்டத்தில் குளிச்சோலை, கப்பச்சி, தைமலை, பிக்கட்டி பாரதிபுதூர், ஊட்டி நொண்டிமேடு, ராஜ்பவன் ஆகிய 6 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன" எனத்‌ தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு