Published:Updated:

`40 வருடங்களுக்குப் பின் வைகையிலிருந்து தண்ணீர்!' - புதுப்பொலிவு பெறும் மாரியம்மன் தெப்பக்குளம்

தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் கிரிக்கெட் மைதானமாகிப் போனது. தெப்பத் திருவிழாவுக்கு மட்டும் தண்ணீர் நிரப்பும் நிலை இருந்து வந்தது.

தெப்பக்குளம்
தெப்பக்குளம் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரை மாநகரின் ஓர் அடையாளமான மாரியம்மன் தெப்பக்குளத்தில் 40 வருடங்களுக்குப் பிறகு மதுரை வைகை ஆற்றிலிருந்து பழங்காலத்தில் இருந்ததுபோல இன்று முதல் நேரடியாக தண்ணீர் வந்தது. இதைக்காண மதுரை மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர்.

தெப்பக்குளம்
தெப்பக்குளம்
ஈ.ஜெ.நந்தகுமார்

நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் கட்டுமானத்துக்கு மணல் எடுக்கப்பட்டு பள்ளமான பகுதியை அழகான தெப்பக்குளமாக ஆக்கினார்கள். 300 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தின் மையத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றும், 15 அடி உயரத்துக்குச் சுவரும், நீளமான படிக்கட்டுகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன.

மதுரை நகரைக் கடந்து ராமநாதபுரம் செல்லும் வைகை நதியிலிருந்து வண்டியூரில் வாய்க்கால் ஏற்படுத்தி அங்கிருந்து சுரங்கம் வழியாக தெப்பக்குளத்துக்குத் தண்ணீர் வரும் வகையில் நுணுக்கமான தொழில் நுட்பத்துடன் அமைத்திருந்தனர். ஆண்டுக்கொருமுறை தெப்பத்திருவிழா சிறப்பாக நடக்கும்.

தெப்பக்குளம்
தெப்பக்குளம்
ஈ.ஜெ.நந்தகுமார்

ஆனால், கடந்த காலங்களில் ஆக்கிரமிப்புகளினால் தெப்பக்குளத்துக்குத் தண்ணீர் வரும் பாதை தூர்ந்து போனதால், தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் கிரிக்கெட் மைதானமாகிப் போனது. தெப்பத் திருவிழாவுக்கு மட்டும் தண்ணீர் நிரப்பும் நிலை இருந்து வந்தது.

தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யும்படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில் சில நாள்களுக்கு முன் இதற்காக நிதி திட்டமிடப்பட்டு முன்பு எப்படி தண்ணீர் சென்றதோ அதுபோலவே செல்லும் வகையில் மாநகராட்சி மூலம் வேலை நடந்தது. இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தெப்பக்குளம்
தெப்பக்குளம்
ஈ.ஜெ.நந்தகுமார்

நாற்பது வருடங்களுக்குப் பிறகு பழங்கால முறைப்படி தெப்பக்குளம் நிரம்பியதைக் காண மக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.