Published:Updated:

திருப்பூர்: ` முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு; மருத்துவத்திற்கு பணம் எடுக்க முடியாமல் பலியான விவசாயி!'

உயிரிழந்த விவசாயி கனகராஜ்
உயிரிழந்த விவசாயி கனகராஜ்

தந்தை பெற்ற பயிர்கடனுக்காக மகனுடைய வங்கி சேமிப்புக் கணக்கை முடக்கியதால், மருத்துவ செலவுகக்காக பணம் எடுக்க முடியாமல் விவசாயி கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் (53). இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு தாரணி (14), பிரகதி (12) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் கனகராஜிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனையடுத்து தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையெடுத்து வந்திருக்கிறார். அந்தவகையில், ஜூன் மாத தொடக்கத்தில் மருத்துவ செலவுக்கு பணம் எடுப்பதற்காக, தான் கணக்கு வைத்துள்ள கேத்தனூர் 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா'விற்கு கனகராஜ் சென்றிருக்கிறார். அப்போது, "உங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. அதனால் உங்களுடைய கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது" என அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.6 லட்சம் வட்டி; பறிபோன நிலம்; கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!

கனகராஜின் தந்தை ரெங்கசாமி இதே வங்கியில் 75 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடன் வாங்கியுள்ளார். 2017-ல் அவர் காலமாகிவிட, அந்தக் கடனுக்கு சாட்சிக் கையெழுத்து போட்டிருந்த கனகராஜை கடனை கட்டச் சொல்லியிருக்கின்றனர். கனகராஜூம் அந்தக் கடனை கட்டிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து நிலத்தில் விளைச்சல் இல்லாதது, உடல்நலக்குறைவு போன்ற சிலபல காரணங்களால், தந்தை வாங்கிய 75 ஆயிர ரூபாய் கடனை குறிப்பிட்ட நேரத்திற்குள் கனகராஜால் அடைக்க முடியாமல் போயிருக்கிறது. இந்த விவகாரத்தினால் தான் கனகராஜின் வங்கிக் கணக்கை முடக்கியிருப்பதாக வங்கித் தரப்பில் சொல்லியிருக்கின்றனர். அதனையடுத்து வங்கி கிளை மேலாளரான சுந்தரமூர்த்தியிடம் கனகராஜ் தன் உடல்நிலையை எடுத்துக்கூறி பணத்தை விடுவிக்குமாறு கெஞ்சியிருக்கிறார். கிட்டத்தட்ட 15 நாட்களாக கெஞ்சிக் களைத்துப்போன கனகராஜ் உடல்நிலை சரியில்லாமல், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி ஜூன் 25-ம் தேதி இறந்து போனார்.

என்.எஸ்.பி.வெற்றி
என்.எஸ்.பி.வெற்றி

இதுசம்பந்தமாக கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றியிடம் பேசினோம். “வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதையடுத்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், விவசாயிகள் போன்றோரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி தான் கனகராஜூக்கு சிகிச்சையளித்துள்ளனர். இருந்தும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். எவ்வளோ கெஞ்சியும் வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி கடைசி வரை பணத்தை விடுவிக்கவேயில்லை. உரிய நேரத்தில் பணம் கிடைத்து மருத்துவமனையில் சேர்த்திருந்தால், கனகராஜை காப்பாற்றியிருக்கலாம்” என்றார்.

இறக்கும் முன் கனகராஜ் எழுதிய கடிதம்
இறக்கும் முன் கனகராஜ் எழுதிய கடிதம்

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மருத்துவமனையில் இருந்தபடியே கனகராஜ், வங்கி மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கேத்தனூரிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். விவசாயி உயிரிழக்கக் காரணமாக இருந்த வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கனகராஜினுடைய இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு