திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக தேனி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் காரில் மதியம் செம்பட்டி வழியாக திண்டுக்கல் வந்தார். அப்போது செம்பட்டி ரவுண்டான பகுதியில் முதல்வரை வரவேற்க தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக செம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வேன்கள், மினி சரக்கு வேன்களில் மக்களை ஏற்றி வந்தனர். குறிப்பாக நிலக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் செளந்தரபாண்டியன் குல்லல்குண்டு அருகே கல்லடிபட்டியைச் சேர்ந்த மக்களை வாகனங்களில் அழைத்து வந்திருந்தார்.

காலை 10 மணி முதலே செம்பட்டி ரவுண்டானா பகுதியில் தி.மு.க-வினர் வாகனங்களில் ஆட்களை ஏற்றி வரத் தொடங்கியிருந்தனர். இதனால் ஆண்களும், பெண்களும் கொழுத்தும் வெயிலில் காத்திருந்தனர். ஆனால் முதல்வர் மதியம் 1 மணியளவில்தான் அப்பகுதியை கடந்தார். அவரை தி.மு.க நிர்வாகிகள் தாங்கள் அழைத்து வந்திருந்த 700 பேருடன் சேர்ந்து வரவேற்றனர். முதல்வர் வந்தவுடன் அப்பகுதியில் மக்கள் முண்டியத்துக் கொண்டு காரை நோக்கி சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் அப்பகுதியை கடந்தவுடன் கூட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்கூட்டத்திற்கு கல்லடிபட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழியாளியான 65 வயது முதியவர் ஆரோக்கியசாமியும், 60 வயது நிரம்பிய அவர் மனைவி ஆரோக்கியமேரியும் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஏற்கெனவே கொழுத்தும் வெயிலில் வாடி கூட்ட நெரிசலில் சிக்கி மயக்க நிலையில் இருந்த ஆரோக்கியசாமி ரவுண்டானா பகுதியில் இருந்து செம்பட்டி காவல் நிலையம் தாண்டி நடந்துசென்று தாங்கள் அழைத்துவரப்பட்ட வாகனத்திற்காக காத்திருந்தார். அப்போது வாந்தி எடுத்து மயங்கிய ஆரோக்கியசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து, அவர் மனைவி ஆரோக்கியமேரி செய்வதறியாது கணவரின் உடலை வேட்டியால் போர்த்தி அழுத காட்சி அப்பகுதியினரை கலங்கச் செய்தது.

இதுகுறித்து செம்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். ``செம்பட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து தி.மு.க-வினர் மக்களை பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளனர். காலை முதல் வெயில் அதிகமாக இருந்ததால் சாதாரணமாகவே எல்லோருக்கும் சோர்வு ஏற்படும். இந்நிலையில் முதியவர்கள் வெயிலில் கால் கடுக்க காத்திருத்தால் மயக்கம் வரத்தான் செய்யும். முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்தபிறகுதான் முதியவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.