Published:Updated:

`அரசுதான் முடிவு செய்யணும்' -`கீழடி சான்றுகளை' வரலாற்றோடு ஒப்பிடும் அழகப்பா பல்கலைக்கழகம்!

கீழடி அகழாய்வுச் சான்றுகளை வரலாற்றுடன் ஒப்பிட்டு ஆவணப்படுத்தும் பணியில் அழகப்பா பல்கலைக்கழகம் ஈடுபட்டுவருகிறது.

அழகப்பா பல்கலைகழகம்
அழகப்பா பல்கலைகழகம்

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல்துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ம் தேதி நிறைவுபெறும் எனக் கூறப்பட்டநிலையில் தற்போது 15 நாள்கள் கூடுதலாக அகழாய்வு செய்ய உள்ளனர்.

கீழடி
கீழடி

இந்நிலையில், கீழடிக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களும் தொல்லியல் ஆர்வலர்களும், மாணவர்களும் பார்வையிட்டுச் செல்கின்றனர். கீழடியில் கிடைத்த தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் 1 கோடி ரூபாயில் மியூசியம் அமையும் என்று தெரிவித்திருந்தார்.

தொல்லியல் ஆர்வலர்கள் கீழடிக்கு அதிகப்படியான பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியைத் தொடர்ந்து 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களும் அதிகளவு ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கீழடி
கீழடி

இந்நிலையில் அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்.ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பில், "இலக்கியம் மற்றும் தொல்லியல் சான்றுகளால் தமிழக வரலாறுகள் பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. தற்போது கீழடி அகழாய்வு மூலம் பல்வேறு புதிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துவருகின்றன.

இச்சான்றுகள் தமிழக வரலாறுகளை கி.மு 6-ம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்கின்றன. இதன் மூலம் தமிழக நகர நாகரிகம் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி செல்கிறது. இதன் அடிப்படையில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை சார்பாக கீழடி அகழாய்வு தொடர்பாக ஆய்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது.

அழகப்பா பல்கலைக்கழகம்!
அழகப்பா பல்கலைக்கழகம்!

இதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் `ரூசா- 2.0' கொடுத்த நிதியின் கீழ் பல்கலைக்கழகத்தில் கீழடி அகழாய்வு தொடர்பாக ஆராய்ச்சிகள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் சங்க கால வரலாற்றையும், கீழடி அகழாய்வில் கிடைக்கும் சான்றுகளையும் ஒப்பிட்டு ஆவணங்களைத் தயார் செய்ய உள்ளது.

இதை கோப்பஸ் இன்டஸ் என்று சொல்லக்கூடிய உலகத் தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிட உள்ளோம். தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் கீழடி தொடர்பாக வகுப்புகளும் கருத்தரங்கம் நடத்தி வருகிறோம். வரும் அக்டோபர் 30-ம் தேதி தேசிய அளவிலான கருத்தரங்கை போல் நடத்த உள்ளோம். பல்கலைக்கழகத்தில் ரூசா திட்டத்தின் கீழ் இணைந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்த அரசுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பு குறிப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.

கீழடி
கீழடி

இந்தத் திட்டம் நிறைவேறினால் கீழடி உள்ளிட்ட தழிழக தொல்லியல் சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்து ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆய்வுநிலையம் அமைக்கலாம். இதனால் எல்லா மாணவர்கள் பயன்பெறும் அளவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், இதை அரசுமுடிவு செய்த பின்தான் சாத்தியமடையும்" என்றார்.