Published:Updated:

`தவறாப் பேசுன வாயெல்லாம் வாழ்த்துது' - அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கும் திருநங்கை!

வீட்டை விட்டு ஒதுக்கப்பட்டாலும் சுயமாக சம்பாதித்து, 3 ஜல்லிக்கட்டுக் காளைகளைச் சொந்த உறவு போல் வளர்த்துவருகிறார்.

வினோத் தனது காளையுடன்
வினோத் தனது காளையுடன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் திருநங்கை ஒருவர் அசத்திவருகிறார். திருநங்கைகள் தற்போது பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ரியா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட 2வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ரியா
ரியா

இப்படி திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தங்களின் தடங்களைப் பதித்துவருகின்றனர்.

இந்த வரிசையில், மதுரை அலங்காநல்லூர் கல்லணைப் பகுதியைச் சேர்ந்த திருநங்கை வினோத் என்ற சிந்தாமணியும் இடம்பெறுகிறார். வீட்டைவிட்டு ஒதுக்கப்பட்டாலும் சுயமாக சம்பாதித்து 3 ஜல்லிக்கட்டுக் காளைகளைச் சொந்த உறவுபோல் வளர்த்துவருகிறார். ``சின்ன வயசுலயே நான் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டேன். பிழைக்க வழி தெரியாமல் சுற்றித்திரிந்த எனக்குப் பல இடங்களில் சாப்பாடுதான் சம்பளமாக இருந்தது. ஆதரவு இல்லாத நான், அலங்காநல்லூரிலேயே தங்கிவிட்டேன்.

வினோத் என்ற சிந்தாமணி
வினோத் என்ற சிந்தாமணி

அதிகமாகப் படிக்காததால் அரசு போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க முடியவில்லை. காலப்போக்கில், போதுமான சம்பளம் கிடைத்தாலும் ஆதரவுக்கு ஆள் இல்லை. அதனால் ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க ஆரம்பித்தேன். இதனால் கடந்த 5 வருடமாக என்னை வீர தமிழச்சி என்றே அழைக்கின்றனர். திருநங்கை என்று ஒதுக்கியவர்கள் இப்போது என்னை மரியாதையாக பார்க்கின்றனர். தவறாகப் பேசிய வாய்கள் வாழ்த்து தெரிவிக்கின்றன.

பல இடங்களிலும் எனது 3 காளைகளும் வெற்றி வாகை சூடுகின்றன. இதனால் அலங்காநல்லூர் சுற்று வட்டார மக்கள் பெருமையாகப் பார்க்கின்றனர். தற்போது கறுப்பு, ராமு, லெட்சுமி என்று மூன்று காளைகள் உள்ளன. உடன் ஒரு பசுமாடும் வளர்க்கிறேன். 100-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் என் காளைகள் களம் கண்டுவிட்டன. சுத்துப்பட்டு பகுதிகளில் எங்கே ஜல்லிக்கட்டு நடந்தாலும் காளைகளைக் கொண்டு செல்வேன். தற்போது பொங்கல் நெருங்குவதால் காளைகளுக்குத் தீவிரமாகப் பயிற்சி கொடுத்துவருகிறேன்.

வினோத்
வினோத்

எனக்குத் தெரிந்து திருநங்கைகளில் நான்மட்டும்தான் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்கிறேன். எல்லாத்துறையிலும் திருநங்கைகள் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். திருநங்கையாகப் பிறப்பது தவறில்லை. சமூகம் ஒதுக்குகிறது என்று முடங்குவதுதான் தவறு. நமக்கு அங்கீகாரம் கிடைக்கும்வரை போராடி ஜெயிக்க வேண்டும்" என்றார். திருநங்கை சிந்தாமணி தினமும் 300 ரூபாய் சம்பளத்துக்கு கடை ஒன்றில் வேலை செய்து ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்துவருகிறார்.