மதுரை: `என் குடும்பத்தில் இருப்பவங்களா நினைக்கிறேன்!’ - டீ விற்று உதவும் ஆதரவற்ற இளைஞர்

தினமும் டீ விற்கும் பணத்தில் ஒரு பகுதியை எடுத்து, அதில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கி வருகிறார் இளைஞர் ஒருவர்.
கொரோனா ஊரடங்கு ஆரம்பித்தது முதல், சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றோர்களை அரவணைக்க, அவர்களுக்கு உதவி செய்ய பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் முன்வந்தாலும், தனி மனிதர்களாகத் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருபவர்களும் உள்ளனர். அதில் ஒருவர்தான் தமிழரசன். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வசிக்கும் தமிழரசனை நேரில் சந்தித்தோம். அவரது வாழ்க்கைப் பயணம் நம் மனதை நெகிழ வைப்பதாக இருக்கிறது.

``என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். 2 வயதில், அம்மா மூளைக் காய்ச்சலாலும், அப்பா விபத்திலும் உயிரிழந்துவிட்டனர். ஆதரவு இல்லாமல் இருந்த என்னை, என்னுடைய அப்பாவின் நண்பர், விருதுநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார். அங்கேயே தங்கி பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்தேன். பி.எஸ்ஸி படித்திருக்கிறேன். பின்னர், வேலை தேடி சென்னை புறப்பட்டுப் போனேன். நிறைய இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை.
ஒருநாள் மெரினா கடற்கரையில் படுத்திருந்தபோது, என்னுடைய உடமைகள் திருடப்பட்டன. அதில், என்னுடைய சான்றிதழ்கள் மொத்தமும் காணாமல் போனது. சென்னையில் யாரும் எனக்கு தெரியாது. ஒரு கட்டத்தில் பசியால், பிச்சை எடுக்க ஆரம்பித்தேன். சென்ட்ரல், கோயம்பேடு, மெட்ரோ, எக்மோர், மெரினா, நுங்கம்பாக்கம் எனச் சென்னை முழுவதும் பிச்சை எடுப்பதும், கிடைக்கும் இடத்தில் தூங்குவதுமாக இருந்தேன். பின்னர், ஊர் ஊராகப் பிச்சை எடுக்க ஆரம்பித்து மதுரை ரயில்நிலையத்துக்கு வந்தேன். அங்கே தங்கி ஏழு மாதமாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து மதுரை கிராமங்களில் பிச்சை எடுத்துவந்தபோதுதான் அலங்காநல்லூருக்கு வந்தேன். கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. பிச்சை எடுக்க வழி இல்லை. சரி, இனியும் பிச்சை எடுக்காமல், சொந்தமாக ஏதாவது செய்யலாம் என நினைத்தேன்.

பிச்சை எடுத்தால் எனக்கு தினமும் ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கும். அதில், சாப்பாட்டுக்கு ரூ.50 செலவு செய்துவிட்டு, மீதி பணத்தை சேமித்து வைத்திருந்தேன். அப்படி சேமித்த பணம் ரூ.7,000 என்னிடம் இருந்தது. அதில் 5,000 ரூபாய்க்கு வீடு வாடகைக்கு எடுத்துவிட்டு, 2,000 ரூபாயை டீ விற்க முதலீடு செய்தேன். காலை, மாலை என இரண்டு நேரமும் டீ விற்பேன். அலங்காநல்லூர், மேட்டுப்பட்டி, புதுப்பட்டி எனச் சுற்றுவட்டார கிராமங்களில் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருக்கிறேன். நல்ல வருமானம் கிடைக்கிறது.
டீ விற்கும் போதெல்லாம், சாலையோரம், கோயில் வாசலில் உள்ள என்னைப் போன்ற ஆதரவற்றோர்களுக்கு இலவசமாக டீ கொடுப்பேன். அப்போதுதான், இவர்களுக்கு உணவு கொடுத்தால் என்ன என்று தோன்றியது. காலை, மாலை, இரவு என மூன்று வேளையும், உணவு மற்றும் தண்ணீர் பட்டில்களைக் கொடுத்து வருகிறேன். டீ விற்கும் பணத்தில் ஒரு பகுதியை இதற்காகச் செலவு செய்கிறேன். உணவுகளைக் கடையில் வாங்காமல், நானே அரிசி, பருப்பு வாங்கிவந்து வீட்டில் சமைத்து அவர்களுக்கு தருகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நிச்சயம் அசைவம் இருக்கும். அவர்களுக்கு சமைப்பதைத்தான் நானும் சாப்பிடுவேன். என் குடும்பத்தில் இருப்பவர்கள் என நினைத்துதான் தினமும் சமைக்கிறேன்” என்றார்.

உங்கள் ஆசை என்ன எனக் கேட்டோம். ``ஒரு கடை வைத்து தொழில் செய்ய வேண்டும். என்னைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும். இதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்பதால், வங்கியில் லோன் கேட்டேன். நான் ஆதரவற்றவன் என்பதால் எனக்கு லோன் கிடைக்கவில்லை. அதனால், அரசு கடன் வசதி செய்துகொடுக்கும் படி முதல்வர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பினேன். அந்த மனு, மதுரை மாவட்ட தொழில் மையத்தில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, எனக்கு அரசு கடன் கொடுத்தால், தவணைகளை சரியாக கட்டி, விரைவில் கடனை அடைத்துவிடுவேன். என்னைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வேன்” என்றார் நம்பிக்கையோடு.
உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் தமிழரசன்!