Election bannerElection banner
Published:Updated:

`தொற்றுபாதித்த முதல் பெண்ணும் கொரோனாவை வென்றார்!’- இரண்டாவது முறையாக மீண்ட நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

கொரோனா அறிகுறிகளுடன் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊட்டியைச் சேர்ந்த பெண்ணும் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் நீலகிரி இரண்டாவது முறையாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலிருந்து டெல்லி சென்று வந்த 7 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் 9 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று கடந்த மாத இறுதியில் குணமடைந்து வீடு திரும்பினர்.

ooty
ooty

இந்த இடைப்பட்ட காலத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீலகிரி இருந்துவந்தது. பின்னர் கடந்த 5ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டத்திலிருந்து சென்னை கோயம்பேடு சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்கள் 4 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓட்டுநரின் சகோதரிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவரே நீலகிரி மாவட்டத்தில் தொற்று கண்டறியப்பட்ட முதல் பெண்ணாவார். 5 பேரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர்கள் 4 பேரும் படிப்படியாகக் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு பெண் மட்டும் சிகிச்சை பெற்று வந்தார்.

ooty
ooty

ஊட்டி நஞ்சநாடு அருகில் உள்ள கீழ்கோழிக்கரை பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் தற்போது குணமடைந்து வீடு தி்ரும்பினார். கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த நீலகிரியைச் சேர்ந்த 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் நீலகிரி மாவட்டம் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் யாரும் இல்லை. கீழ் கோழிக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மட்டும் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது.

ooty
ooty

சென்னையிலிருந்து இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வந்த இருவரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்குக் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,"என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு