Published:Updated:

`நால்வரும் தமிழர்கள்?' - கேரள மாவோயிஸ்ட் என்கவுன்டர் வழக்கில் திடீர் திருப்பம்

கடந்த அக்டோபர் 30 -ம் தேதியன்று, கேரளாவில் தண்டர்போல்ட் படையினரால் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கேரள அரசு அறிவித்தது. மற்ற இருவரின் அடையாளம் வெளியிடப்படாத நிலையில், தற்போது அவர்களும் தமிழர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மாவோயிஸ்ட் என்கவுன்டர்
மாவோயிஸ்ட் என்கவுன்டர்

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கிராமத்திலுள்ள மஞ்சக்கண்டி வனப்பகுதியில், கடந்த அக்டோபர் 30 -ம் தேதியன்று கேரளக் காவல்துறையின் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவான தண்டர்போல்ட் படையினரால் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

`போலீஸ் சுட்டதில் இறந்த பெண்மாவோயிஸ்ட், உங்கள் மகள் அஜிதா!' - தாயைப் பதறவைத்த அழைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில், இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சென்னையைச் சேர்ந்த கார்த்தி, சேலத்தைச் சேர்ந்த மணிவாசகம் ஆகியோர் என அறிவிக்கப்பட்டது. மற்ற இருவரில், ஒருவர் அரவிந்த் எனவும் மற்றொரு பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீநிதி எனவும் யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்டது.

Attappadi encounter
Attappadi encounter
Mathrubhumi

தற்போது அடையாளம் தெரியாத மற்ற இரண்டு மாவோயிஸ்ட்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா எனவும் மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் எனவும் தெரிய வந்துள்ளது. சீனிவாசனின் சகோதரர் திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலைப் பார்த்து அடையாளம் கண்டுள்ளார்.

தற்போதைய மாவோயிஸ்ட் என்கவுன்டர் கேரள அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, என்கவுன்டர் பற்றிய நீதி விசாரணை நடைபெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவியேற்றது முதல், தற்போது வரை, தண்டர்போல்ட் படையினரால் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எழுவரில் அஜிதா, குப்புராஜ், கார்த்தி, மணிவாசகம், ரமா, சீனிவாசன் ஆகிய 6 பேர் தமிழர்கள்; மற்றொருவரான ஜலீல் கேரளாவைச் சேர்ந்தவர்.