Published:Updated:

தூத்துக்குடி: `ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பேசினாலே குற்றவாளியா?’- கொதிக்கும் போராட்டக் குழுவினர்

ஸ்டெர்லைட் போராளிகள்
ஸ்டெர்லைட் போராளிகள்

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பேசுபவர்கள் குற்றவாளிகள்‌ என்றால் தூத்துக்குடியில் உள்ள அனைவருமே குற்றவாளிகள்தான்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் 100-வது நாளான மே-22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. `ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்’ என அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. ஆலை தரப்பும், மீண்டும் ஆலையைத் திறக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆலை மூடப்பட்ட நாள் முதல் தற்போது வரை, ஆலைக்கு எதிராகப் போராடிய போராளிகள் மீது போலீஸார் பொய்வழக்குகள் போடுவதாகவும், தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் போராட்ட குழுவினர் தொடர்ந்து கூறி வந்தனர்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில், கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வினை நடத்தியதற்காக, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களை முன்நின்று நடத்திய பாத்திமா நகரைச் சேர்ந்த கெபிஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு சார் ஆட்சியரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.

`போலீஸாரைக் குவித்து பீதியை ஏற்படுத்துகிறார்கள்' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, ``ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கொள்கை முடிவு எடுத்து, மூடி சீல் வைத்துள்ளது. இந்தநிலையில், ஆலைக்கு எதிரான போராட்டங்களை முன்நின்று நடத்தியவர்கள், களப்பணியாற்றியவர்கள் ஆகியோர் மீதான போலீஸாரின் அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது தற்போதும்கூட பொய்யான பல வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட கெபிஸ்டன்
விசாரணைக்கு அழைக்கப்பட்ட கெபிஸ்டன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஒருங்கிணைத்தது பெரிய தேசத்துரோகம் என்பதுபோல நினைத்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி எதுவும் பேசக்கூடாது, உயிரோடு இருந்தாலும் உரிமைகளை பற்றியும் பேசக்கூடாது என்பது போலத்தான் உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பேசுபவர்கள் குற்றவாளிகள்‌ என்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவருமே குற்றவாளிகள்தான்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு