Published:Updated:

`13.5 மீட்டர் நீளம்... 1.6 டன் எடை!' புதுச்சேரி மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம்

புதுச்சேரி மீனவர்கள் வலையில் 13.5 மீட்டர் நீளமும், 1.6 டன் எடையும் கொண்ட பொருள் ஒன்று சிக்கியது. இது ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் மோட்டார் என்று தெரிகிறது.

ராக்கெட் மோட்டார்
ராக்கெட் மோட்டார்

புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். கரையிலிருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்களின் வலையில் கனமாக ஏதோ ஒரு பொருள் சிக்கியது. திமிங்கிலம் ஏதும் சிக்கிவிட்டதா என்று அதிர்ச்சியடைந்த மீனவர்கள், அதை இழுக்க முடியாமல், கரையில் இருந்த மேலும் சில மீனவர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்களை உதவிக்கு அழைத்தனர்.

ராக்கெட் மோட்டார்
ராக்கெட் மோட்டார்

அதையடுத்து 2 படகுகளில் சென்ற மீனவர்கள் அந்த மர்மப் பொருளை கரைக்கு இழுக்க முயன்றனர். அவர்களாலும் இழுக்க முடியாததால் மேலும் 4 பேர் சென்று முயற்சி செய்தனர். அப்படியும் முடியாமல் போனதால் ஊர் பஞ்சாயத்தார் கூடி பெரிய படகுகளை அனுப்பி கரைக்குக் கொண்டு வரும் பணியில் இறங்கினர். அனைவரும் போராடி ஒரு வழியாக மாலை சுமார் 3.30 மணிக்கு வலையில் சிக்கிய அந்த மர்மப் பொருளை புதிய கலங்கரை விளக்கம் பகுதியையொட்டிய கரைக்கு இழுத்துவந்தனர்.

`சோதனை ஓட்டத்தில் ககன்யான்’ - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

செயற்கைக்கோளின் உதிரிபாகம் போல் இருந்த அந்தப் பொருளைப் பார்த்து அச்சமடைந்த மீனவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மோட்டாரில் 2019 மார்ச் 22 என என்றும் PSOM XL என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரோ இணையதளத்தில் PSOM XL என்றால் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் மோட்டார் என்பது தெரிய வந்தது.

ராக்கெட் மோட்டார்
ராக்கெட் மோட்டார்

மேலும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் வாகனமான பி.எஸ்.எல்.விக்குள் (Polar Satellite Launch Vehicle) இத்தகைய மோட்டார்கள் சுமார் 6 இருக்கும் என்கிறார்கள். தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் PSMO XL என்ற மோட்டர் அந்த வகையைச் சேர்ந்தது. 13.5 மீட்டர் நீளமும், 1.6 டன் எடையும் கொண்ட இந்த மோட்டார், அதிகபட்சமாக 12.4 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படக் கூடியது.