Published:Updated:

பொக்கே கொடுக்கும் வி.ஐ.பி-க்களே... நீங்க ஏன் இந்தப் பரிசுகளை பரிசீலிக்கக் கூடாது?

ஸ்டாலினுக்கு பொக்கே வழங்கும் அதிகாரி
ஸ்டாலினுக்கு பொக்கே வழங்கும் அதிகாரி

பொக்கே கொடுப்பது தமிழ்நாட்டின் பாரம்பர்ய வழக்கமல்ல. ஜெயலலிதாவின் அரசியல் வருகைக்குப் பிறகுதான், தமிழ்நாட்டில் பொக்கே கொடுக்கம் வழக்கம் தொடங்கியது. இதன் விலை மிக அதிகம். ஒரு நல்ல தரமான பொக்கேவின் விலை சுமார் ரூ.5,000.

தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினை, திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே பொக்கேவைத்தான் அன்பளிப்பாக வழங்கி வருகிறார்கள். பொக்கே கொடுப்பது தமிழ்நாட்டின் பாரம்பர்ய வழக்கமல்ல. ஜெயலலிதாவின் அரசியல் வருகைக்குப் பிறகுதான், தமிழ்நாட்டில் பொக்கே கொடுக்கம் வழக்கம் தொடங்கியது. இதன் விலை மிக அதிகம். ஒரு நல்ல தரமான பொக்கேவின் விலை சுமார் ரூ.5,000.

பொக்கேவுடன் ஸ்டாலின்
பொக்கேவுடன் ஸ்டாலின்

இப்படி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பவர்கள், பொக்கேவுக்குப் பதிலாக, வேறு பயனுள்ள பொருள்களை வழங்கலாம். பெரியார், அண்ணா காலத்தில் மரியாதை நிமித்தமாக, கட்சியினருக்கு கைத்தறி மற்றும் கதர் ஆடைகள் போர்த்தும் வழக்கம் இருந்தது. இதனால் நெசவாளர்கள் பயனடைந்தார்கள். தலைவர்களுக்கு போர்த்தப்படும் கைத்தறி, கதர் ஆடைகள் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கப்பட்டன.

இவை அளவுக்கு அதிமாக குவியத் தொடங்கிய சமயத்தில், இவை மீண்டும் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, கட்சிகள் வருமானம் ஈட்டின. இதையடுத்து காலப்போக்கில், மரியாதை நிமித்தமாக, மலர் மாலைகள் போடும் வழக்கம் தொடங்கின. இதனால் தமிழ்நாட்டில் உள்ள மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பலனடைந்தார்கள். இதற்கிடையே புத்தகங்கள் கொடுக்கும் வழக்கத்தை கருணாநிதி உருவாக்கினார்.

மு.க.ஸ்டாலினும் இதைத் தனது கட்சிக்காரர்களிடம் ஊக்கப்படுத்தி வந்தார். ஆனால், தற்போது புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினை சந்திப்பவர்கள் அனைவருமே மரியாதை நிமித்தமாக, விலையுயர்ந்த பொக்கேவைத்தான் வழங்குறார்கள். இதனால் ஏராளமான பொக்கேக்கள் குவிகின்றன. இதனால் எந்தப் பலனும் இல்லை. இதற்கு மாற்றாக, புத்தகங்கள் வழங்கலாம். இதனால் எழுத்தாளர்கள், அச்சுத் தொழிலாளர்கள், வெளியீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பயனடைவார்கள். அதிகளவில் குவியும் புத்தகங்களை நூலகங்களுக்கும் வழங்கலாம். பள்ளி, கல்லூரிகளுக்கும் வழங்கலாம்.

இந்த பொக்கே, அப்போதே ரூ. 7,000
இந்த பொக்கே, அப்போதே ரூ. 7,000

அல்லது முதலமைச்சரை சந்திப்பவர்கள், மரக்கன்றுகளை வழங்கலாம். இதனால் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயனடைவார்கள். சுற்றுச்சூழலும் மேம்படும். ஒருவேளை, விலையுயர்ந்த பொருள்களைக் கொடுப்பதுதான் தங்களுக்கு கௌரவம் என நினைத்தால், கைவினைப் பொருள்கள், அழகிய ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு உள்ளிட்டவற்றை முதல்வருக்கு வழங்கலாம்.

இது தொடர்பாக, புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியினரிடம் அன்பான வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவரைச் சந்திப்பவர்கள் மட்டுமல்ல, மற்ற அமைச்சர்களைச் சந்திப்பவர்களும்கூட, பொக்கேவுக்கு மாற்றாக, மரக்கன்று, புத்தகம், கைத்தறி ஆடை, பனை, மூங்கில், சணல் போன்ற பொருள்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு... இவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கினால் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும். தமிழ் மக்களும் பயனடைவார்கள்.

அடுத்த கட்டுரைக்கு