Published:Updated:

`3 கோடி மதிப்புள்ள 2.5 ஏக்கர் அரசுப் பள்ளி நிலம்!' -மீட்டெடுத்த மாணவர்கள்; ஆச்சர்யம் அளித்த வைகோ

அரசு மேல்நிலைப் பள்ளி
அரசு மேல்நிலைப் பள்ளி

அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டுத் திடல், நெடுஞ்சாலை அருகில் இருந்ததால், அது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமம், திருமலாபுரம். அங்கு, அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுற்றுப்புறங்களில் உள்ள 15-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் பள்ளியில் படித்துவருகிறார்கள்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

அரசுப் பள்ளியின் விளையாட்டுத் திடல் நெல்லை-சங்கரன்கோவில் சாலையின் அருகில் உள்ளது. இரண்டரை ஏக்கர் உள்ள விளையாட்டுத் திடல், இன்றைய மதிப்பில் மூன்று கோடி ரூபாய் இருக்கும் என்பதால், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருந்தது.

திருமலாபுரம் அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களில் சுமார் 800 பேர் காவல்துறையில் பணியாற்றிவருகின்றனர். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களில் 200-க்கும் அதிகமானோர் ராணுவத்தில் பணியாற்றிவருகிறார்கள். 

விளையாட்டு மைதானத்துக்கான இடம்
விளையாட்டு மைதானத்துக்கான இடம்

அதனால் இந்தப் பள்ளியின் விளையாட்டுத் திடலைப் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் முடிவு செய்தார்கள். அதற்காக, முன்னாள் மாணவரான தி.மு.ராசேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய முன்னாள் மாணவரான தி.மு.ராசேந்திரன், ``முக்கிய சாலையில் இருக்கும் விளையாட்டுத் திடலைப் பாதுகாக்க சுற்றுச் சுவர் அவசியம் என முடிவெடுத்தோம். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பாக பொறியாளர்களிடம் ஆலோசனை கேட்டபோது, 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்கள்.

முன்னாள் மாணவர் தி.மு.ராசேந்திரன்
முன்னாள் மாணவர் தி.மு.ராசேந்திரன்

அந்த அளவுக்கு பணத்தைத் திரட்ட கால அவகாசம் இல்லாததால், ராஜ்யசபா எம்.பி-யான வைகோவிடம் நிதி கேட்க முடிவெடுத்தோம். அதனால் அவரிடம் இரு தவணையாக 20 லட்சம் கொடுக்குமாறு கேட்டோம். அவர், ஒரேநேரத்தில் மொத்தத் தொகையையும் வழங்குவதாகத் தெரிவித்துவிட்டார்.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால், உடனடியாகப் பணிகள் தொடங்க இருக்கிறது. அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான மணிகண்டன் என்பவர் அதற்கான ஒப்பந்தத்தை எடுத்ததுடன், தரமான முறையில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து விளையாட்டுத் திடலைப் பாதுகாக்க முன்னாள் மாணவர்கள் நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
கிராம மக்கள்

பள்ளியின் விளையாட்டுத் திடல் பாதுகாக்கப்பட்டதன் மூலம் ராணுவத்துக்கும் காவல்துறைக்கும் மேலும் பலர் பணிக்குச் செல்லும் அளவுக்குப் பயிற்சி எடுத்துக்கொள்ள முடியும்” என்றார்.

முன்னாள் மாணவர்களின் இந்த முயற்சியை கிராம மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு