Published:Updated:

``கொரோனா நேரத்துல ஆம்புலன்ஸ் ஓட்டினேன்; சம்பளம் தராம ஏமாத்துறார்!" - ரெட் கிராஸ் நிர்வாகிமீது புகார்

ஆம்புலன்ஸ் டிரைவர் அந்தோணிராஜ்
News
ஆம்புலன்ஸ் டிரைவர் அந்தோணிராஜ்

`ஆம்புலன்ஸ் ஓட்டியதற்காக ஊக்கத்தொகையாக அரசு வழங்கிய சம்பளப் பணத்தை ரெட் கிராஸ் அமைப்பின் துணைத் தலைவரான முத்துக்குமார் என்பவர் தரவில்லை’ என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்.

``கொரோனா நேரத்துல ஆம்புலன்ஸ் ஓட்டினேன்; சம்பளம் தராம ஏமாத்துறார்!" - ரெட் கிராஸ் நிர்வாகிமீது புகார்

`ஆம்புலன்ஸ் ஓட்டியதற்காக ஊக்கத்தொகையாக அரசு வழங்கிய சம்பளப் பணத்தை ரெட் கிராஸ் அமைப்பின் துணைத் தலைவரான முத்துக்குமார் என்பவர் தரவில்லை’ என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்.

Published:Updated:
ஆம்புலன்ஸ் டிரைவர் அந்தோணிராஜ்
News
ஆம்புலன்ஸ் டிரைவர் அந்தோணிராஜ்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரின் மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு பெண், ஓர் ஆண் என மூன்று சிறு குழந்தைகள் இருக்கின்றனர். அந்தோணிராஜ் தஞ்சாவூர் ரெட் கிராஸில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார். கொரோனா காலத்தில் முழு நேரமும் அவசரத் தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டிவந்திருக்கிறார்.

ரெட் கிராஸ் நிர்வாகி முத்துக்குமார்
ரெட் கிராஸ் நிர்வாகி முத்துக்குமார்

இந்த நிலையில், `ஆம்புலன்ஸ் ஓட்டியதற்காக ஊக்கத்தொகையாக அரசு வழங்கிய சம்பளப் பணத்தை ரெட் கிராஸ் அமைப்பின் துணைத் தலைவரான முத்துக்குமார் என்பவர் தரவில்லை’ என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார் அந்தோணிராஜ். இதையடுத்து, ``யார்கிட்ட போனாலும் பணம் வாங்க முடியாது" எனத் தன்னை முத்துக்குமார் மிரட்டியதாகச் சொல்கிறார் அந்தோணிராஜ். இது குறித்த ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ் டிரைவர்
ஆம்புலன்ஸ் டிரைவர்

இது குறித்து அந்தோணிராஜிடம் பேசினோம். ``நான் ரெட் கிராஸில் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரிந்தேன். 2020-ம் ஆண்டு கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அந்தச் சமயத்தில் 108, ரெட் கிராஸ் ஆம்புலன்ஸுகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. தனியார் ஆம்புலன்ஸ் எதுவும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தினமும் ரூ.600 சம்பளம் என அரசு கூறியதன் அடிப்படையில் கொரோனா சமயத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டிவந்தேன். என் மூன்று பிள்ளைகளும் அந்தச் சமயத்தில் கைக்குழந்தைகளாக இருந்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தைக்கூட பெரிதாகக் கருதாமல், துயர் சூழ்ந்த நேரத்தில் சமூகத்துக்கு என்னாலான சேவையைச் செய்ய வேண்டும் என உயிரைப் பணயம்வைத்து ஆம்புலன்ஸ் ஓட்டினேன்.

2021-ல் மொத்தம் ஏழு டிரைவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டிவந்தோம். 2020-ல் இரண்டு மாதங்களுக்கும், 2021-ம் ஆண்டுக்கான சம்பளமும் எங்களுக்கு வரவேண்டியிருந்தது. எனக்கு மட்டும் ரூ.92,000 வர வேண்டும். இந்த நிலையில், மின்வாரியத்தில் உதவி மின் செயற்பொறியாளராகப் பணிபுரியும் ரெட் கிராஸின் துணைத் தலைவரான முத்துக்குமார் எங்களுக்கு வந்த சம்பளப் பணத்தைத் தராமல், அவரே வைத்துக்கொண்டார். நானும் மற்ற டிரைவர்களும் பணம் கேட்டு நடையாக நடந்தோம்.

அவர்கிட்ட `என்ன சார், உயிரைப் பணயம்வெச்சு வேலை செஞ்ச பணத்தைத் தராமல் நீங்க வெச்சிருக்கீங்க. ஏழைங்க வயித்துல அடிக்குறீங்களே... இது நியாயமா?’னு கேட்டும் பலனில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் சென்று மனு கொடுத்தேன். இதையடுத்து என்னை அழைத்த முத்துக்குமார், `நீ கலெக்டரைப் பார்த்தாலும் சரி, யார்கிட்ட போனாலும் சரி... எப்படிப் பணம் வாங்குறேனு பார்த்துடுறேன். நான் சொல்றதைத்தான் கலெக்டர் செய்வார்' எனத் திட்டினார்.

கொரோனா சம்பளம் கேட்டு புகார் அளித்த ஆம்புலன்ஸ்  டிரைவர்
கொரோனா சம்பளம் கேட்டு புகார் அளித்த ஆம்புலன்ஸ் டிரைவர்

இந்த நிலையில், ரூ.80,000 தரவேண்டிய ஒரு டிரைவரை அழைத்து ரூ.50,000 மட்டும் கொடுத்தார். `என்ன சார் குறைத்துத் தருகிறீர்கள்?' என அவர் கேட்டதற்கு, `அவ்வளவுதான்’ என அனுப்பியிருக்கிறார். சம்பளம் குறித்துக் கேட்பதற்காக மற்ற டிரைவர்களை ஒருங்கிணைத்த எனக்கு போன் செய்த முத்துக்குமார், `என்னைப் பத்தி உனக்குத் தெரியும். நீ கலெக்டர்கிட்டதான போவே... நான் பார்த்துக்கிறேன்' என்றார். என் மனைவி பிரசவத்துக்காகத் தனியார் நிதி நிறுவனத்தில் எங்கள் வீட்டை அடமானம் வைத்திருந்தேன். அந்தப் பணத்தைக் கட்ட முடியாததால் வீட்டை ஜப்தி செய்வதற்கு வந்துவிட்டார்கள். எனக்கு வரவேண்டிய பணத்தைப் பெற்றுத்தர வேண்டும் என முதல்வருக்கும் மனு அளித்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து முத்துக்குமாரிடம் பேசினோம். ``என்னிடம் முன்கூட்டியே அந்தோணிராஜ் பணம் வாங்கியிருந்தார். செக் வந்ததுமே என்னிடம் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்றேன். நான் செய்த உதவியை மறந்துவிட்டுப் பணம் தரவில்லை எனப் புகார் கூறிவருகிறார். கலெக்டர்கிட்ட போனாலும் உனக்குச் சேரவேண்டிய பணம் போக, மீதிப் பணத்தை ரெட் கிராஸில் வரவுவைத்துவிடுவேன் எனச் சொன்னேன். அதை மிரட்டினேன் எனக் கூறிவருகிறார். மற்ற ஆறு டிரைவர்களுக்கும் பணம் கொடுத்துவிட்டேன். சிலரின் தூண்டுதலின்பேரில் அந்தோணிராஜ் மட்டும் என்மீது புகார் கூறிவருகிறார்" என்றார்.