தமிழ்நாடு முழுவதும் பல முக்கியப் பகுதிகளில் அம்மா உணவகங்கள் இயங்கிவருகின்றன. ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில், மூன்று நேரமும் அம்மா உணவகங்களில் உணவு உட்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் சுகாதாரமற்ற நிலையில், அம்மா உணவகங்கள் இயங்கிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன. அவை மக்கள் சுகம் சுளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் அவை காணப்படுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

அம்மா உணவகங்களில் காலை உணவாக இட்லி, பொங்கல், மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களும் வழங்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலும் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து வேலை செய்யும் பேச்சிலர்கள், வட மாநிலத் தொழிலாளர்கள் எனப் பலரும் அம்மா உணவகத்தை நாடிவருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சியின் மாதாந்தர மாமன்றக் கூட்டத்தில் கணக்கு நிலைக்குழுத் தலைவர் தனசேகரன் , ``அம்மா உணவகம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுவருகிறது. இதனால் நாளொன்றுக்கு ரூ.500-க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும்'' எனத் தெரிவித்தார். இந்த நிலையில், சென்னை மேயர் பிரியா,`` அம்மா உணவகம் தொடங்கியதிலிருந்து எப்படிச் செயல்பட்டுவருகிறதோ, அதே போன்று அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்'' என்றார்.
இந்த நிலையில் சென்னை, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் இயங்கிவரும் அம்மா உணவகம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழவே, அங்கு நேரடியாக விசிட் செய்தோம். உணவகத்தின் நுழைவுவாயில் முன்பே கழிவுநீர் குளம்போலத் தேங்கி நிற்கிறது. இதன் மேல் பல பிளாஸ்டிக் காகிதங்கள், கொசுக்கள், காய்கறிக் கழிவுத்தோல் போன்றவையும் மிதந்துகொண்டிருக்கின்றன.
அதன் அருகிலேயே வட மாநிலத் தொழிலாளர்கள் உட்பட பலரும் அமர்ந்து உணவு உட்கொண்டுவருகின்றனர். உணவகத்தைச் சுற்றி மது பாட்டில்களும் காணப்படுகின்றன. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

மேலும் அங்கு பெரும்பாலும் உணவு வகைகள் சுகாதாரமற்றதாகவும், சுவையற்று இருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது.
அங்கு உணவு அருந்தும் சிலரிடம் பேசியபோது, ``வேறு வழியின்றி, பொருளாதார நிலை காரணமாக இங்கு உணவு உட்கொள்கிறோம். சுகாதாரம், உணவுத் தரம் முதலியவை மிக மோசமாக இருக்கின்றன” என்கிறார்கள்.
அம்மா உணவகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும், இது எளிய மக்களுக்கு உதவும் திட்டம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!