Published:Updated:

அம்மா உணவகப் பணி: "மாதாமாதம் ரூ.5000 கேட்டு மிரட்டுறாரு!" - திமுக கவுன்சிலர்மீது கலெக்டரிடம் புகார்

அம்மா உணவக ஊழியர்கள்

`அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணி செய்யவேண்டுமென்றால் மாதம் 5000 ரூபாய் வழங்க வேண்டும்', என்று மிரட்டிவரும் தி.மு.க., கவுன்சிலர், மண்டல குழுத் தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

அம்மா உணவகப் பணி: "மாதாமாதம் ரூ.5000 கேட்டு மிரட்டுறாரு!" - திமுக கவுன்சிலர்மீது கலெக்டரிடம் புகார்

`அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணி செய்யவேண்டுமென்றால் மாதம் 5000 ரூபாய் வழங்க வேண்டும்', என்று மிரட்டிவரும் தி.மு.க., கவுன்சிலர், மண்டல குழுத் தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Published:Updated:
அம்மா உணவக ஊழியர்கள்

சேலம் மாநகரின் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு அம்மா உணவகத்திலும், இரண்டு சிப்ட்டுகள் வீதம் 12 பேர் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில், சேலம் 50-வது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் இயங்கிவரும் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த ஆறு பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், ”நாங்கள் 50-வது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் அம்மா உணவகத்தில் பணியாற்றிவருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்துவரும் நிலையில், தற்போது திடீரென ஆறு பேரை நீக்குவதாக தி.மு.க 50-வது வார்டு கவுன்சிலர் பழனிசாமியும், கொண்டலாம்பட்டி மண்டல குழுத் தலைவர் அசோகனும் தெரிவிக்கிறார்கள்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்
மாதிரிப் படம்

நாங்கள் மக்களுக்காக சேவை செய்துவருகிறோம். ஒருசில மாதங்களில் அம்மா உணவகத்தில் எங்கள் குழுவிலுள்ள 12 பேரும் சேர்ந்து பணம் போட்டு, மக்களுக்காக உணவு வழங்கி வந்திருக்கிறோம். தற்போது பணியில் நீடிக்க மாதம் 5000 ரூபாய் கேட்டால் எவ்வாறு வழங்க முடியும். இந்த சம்பளத்தை வைத்துதான் குடும்பம் வாழ்ந்துவரும் நிலையில், பணம் கொடுக்கவேண்டுமென மிரட்டுவது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும், இது குறித்து மண்டல குழுத் தலைவர் அசோகனிடம் நாங்கள் சென்று கேட்டபோது, எங்களை மிரட்டும்விதமாக, `தொடர்ந்து பணியில் அமர்த்த வேண்டுமென்றால் மாதம் 5000 ரூபாய் வீதம் தனக்கும், 50- வார்டு கவுன்சிலர் பழனிசாமிக்கும் வழங்க வேண்டும். இல்லையென்றால் வேலையில் நீடிக்க முடியாது' என அடாவடியாக மிரட்டினார்” என்றனர்.

இது தொடர்பாக கொண்டலாம்பட்டி மண்டல குழுத் தலைவர் அசோகனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட அம்மா உணவகத்தில் வேலை பார்க்கக்கூடிய சிலர் அங்கு இருக்கக்கூடிய பொருள்களை தங்களது சொந்த தேவைக்காக எடுத்துச் செல்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 19 லட்சம் செலவானதாக பொய்யான கணக்குகள் காண்பித்திருக்கின்றனர். நான் ஏற்கெனவே மாநகராட்சி மேயர், ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன்.

மண்டலகுழு தலைவர் அசோகன்
மண்டலகுழு தலைவர் அசோகன்

இந்த நிலையில், நான் அவர்களிடம் பணம் கேட்பதாக பொய்யான புகாரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கின்றனர்'' என்றார்.

மேலும், `ஊழல் செய்திருந்தால் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்குமா, அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்தார்களா' என்று கேட்டபோது, அவர் ``அதெல்லாம் எனக்குத் தெரியாது. அதிகாரிகள் விசாரணை செய்துதான் சம்பந்தப்பட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக அவர்களைப் பணியைவிட்டு எடுத்திருக்கின்றனர்” என்றார்.

மேலும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தெரிவித்த புகார் குறித்து 50-வது வார்டு கவுன்சிலர் பழனிசாமியிடம் பேசியபோது, “கொண்டலாம்பட்டி மணியனூரில் இயங்கிவரும் அம்மா உணவகம் மிகவும் சிதிலமடைந்திருக்கிறது. இதனால் நாங்கள் அதைப் புதிதாகக் கட்ட திட்டமிட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அங்கு வேலை பார்ப்பவர்களைக் கட்டடம் கட்டி முடிக்கும் வரைக்கும் வேறு வேலைகளைப் பார்க்கக் கூறியிருந்தோம். அவர்கள் அதற்கு சம்மதிக்காமல் இருந்ததால், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை மூடுவதற்கு முடிவுசெய்திருக்கின்றனர்'' என்றார். அவரிடம், `வேலையைவிட்டு நிறுத்த வேண்டும் என்றால் அங்கு வேலை பார்க்கும் 12 பேரையும்தானே நிறுத்த வேண்டும்' என்று கேட்டதற்கு, அவர் அதற்கு பதிலளிக்காமல், `அங்கு வேலை பார்க்கும் பெண்களுக்குள் பிரச்னை, நாங்கள் என்ன செய்வது' என்று கூறினார்.

 பழனிசாமி
பழனிசாமி

மேலும், பணம் கேட்டதாக எழும்பிய குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது அவர் ``அதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு. நான் அப்படி யாரிடமும் கேட்கவில்லை, அதற்கான அவசியம் எனக்கு இல்லை” என்றார்.

இதுகுறித்து மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட அம்மா உணவகம் பாழடைந்திருப்பதாகவும், அதைப் புதிதாகக் கட்டிக்கொடுக்க வேண்டுமென என்னிடம் மண்டல குழுத் தலைவர் அசோகன் மனு அளித்திருந்தார். மற்றப்படி ஊழியர்கள் விவகாரம் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை” என்றார்.