Published:Updated:

கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த வெண்கல சாமி சிலை! - அதிர்ச்சியில் கும்பகோணம்

சாமி சிலை, கழிவுநீர் வாய்க்காலுக்குள் கிடந்ததை அறிந்து, இப்பகுதியில் உள்ள ஆன்மிகவாதிகள் கவலை அடைந்தார்கள். இதன் மர்ம பின்னணி குறித்து, மேற்கு காவல்நிலைய போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

வெண்கல சிலை
வெண்கல சிலை

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் கழிவுநீர் வாய்க்காலுக்குள் வெண்கல அம்மன் சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மர்ம பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

வெண்கல அம்மன் சிலை
வெண்கல அம்மன் சிலை

கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் நகரில் அமைந்துள்ள ஓலைப்பட்டினம் கழிவுநீர் வாய்க்காலை, கும்பகோணம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்போது நன்கு கட்டப்பட்ட நிலையில் ஒரு சாக்குப் பை இருப்பதை துப்புரவு பணியாளர்களான பாக்கியராஜ், ஆறுமுகம் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அதை வெளியில் எடுத்து பிரித்து பார்த்தபோது 2 அடி உயரமுள்ள வெண்கல அம்மன் சிலை இருந்துள்ளது. இது ஆண்டாள் சிலையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

`116 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலைகள்!’ - தஞ்சையில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்

இது தொடர்பாக, காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. சாமி சிலை, கழிவுநீர் வாய்க்காலுக்குள் கிடந்ததை அறிந்து, இப்பகுதியில் உள்ள ஆன்மிகவாதிகள் கவலை அடைந்தார்கள். இதன் மர்ம பின்னணி குறித்து, மேற்கு காவல்நிலைய போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

கும்பகோணம் - வெண்கல அம்மன் சிலை
கும்பகோணம் - வெண்கல அம்மன் சிலை

இந்த வெண்கல சிலை எங்கிருந்து திருடப்பட்டது? இதை இங்கு மறைத்து வைத்தது யாராக இருக்கும்? என்ற கோணத்தில் புலனாய்வு தொடங்கப்பட்டது. ``இது பாலீஸ் செய்யப்படாத வெண்கல சிலை. இது ஏதேனும் கோயிலில் இருந்து திருடப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம் பாலீஸ் செய்யப்படாத சிலைகள் பெரும்பாலும் கோயிலில் வைக்கப்படுவதில்லை. ஏதோ ஒரு பட்டறையில் இந்த சிலை வார்ப்பு செய்யப்பட்ட நிலையில், பாலீஸ் போடுவதற்கு முன்பாக, யாரோ இதைத் திருடி, கழிவுநீர் வாய்க்கால் ரகசியமாக மறைத்து வைத்திருக்கக்கூடும்” எனச் சந்தேகிக்கிறார்கள் காவல்துறையினர்.

கும்பகோணம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிலை செய்யும் பட்டறைகளில் இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.