திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார். அந்த முதியவர் சீனிவாசா நகர் பகுதியில் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில், 'அன்பால் அறம் செய்வோம்' அறக்கட்டளைக் குழுவினருடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் வந்தவாசி தெற்குக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர். அந்த முதியவரை மீட்ட அறக்கட்டளைக் குழுவினரும், காவல்துறையினரும் அந்த முதியவருக்குப் பழச்சாறு, உணவு வாங்கிக் கொடுத்து ஆபத்தான நிலையில் இருந்து மீட்டுள்ளனர். பின், துணைக் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று, ஆரணியில் உள்ள அண்ணாமலையார் முதியோர் காப்பகத்தில் அந்த முதியவரைச் சேர்த்துள்ளனர் அன்பால் அறம் செய்வோம் குழுவினர்.

சில தினங்கள் கழித்து அந்த முதியவர் அளித்த தகவலின்படி, அக்குழுவினர் பலாந்தாங்கல் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்ததன் தொடர்ச்சியாகத்தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுதொடர்பாக, அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் அசாருதீன் ஷாஜகானிடம் பேசினோம். "சுமார் ஒரு வாரத்திற்கு முன்னாடி, ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் காவல்துறையின் மூலம் தகவல் கிடைத்தது. நண்பர்கள், கேசவராஜ், வசீகரனுடன் நேரில் சென்றோம். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு உணவளித்து, பேசுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் அவர் பேசுவது புரியவில்லை. ஆனால், அவருடைய பெயர் நடராஜன் என்று மட்டும் தெரிய வந்தது.

அதன்பின், காவல்துறை அதிகாரியின் உதவியோடு அந்த முதியவரை முதியோர் காப்பகத்தில் சேர்த்தோம். அதன்பின், இரண்டு தினங்கள் கழித்து அந்த முதியவரை நேரில் பார்த்துப் பேச்சுக் கொடுத்தோம். சற்று நினைவு திரும்பியவர், ஆரணி அடுத்துள்ள 'பலாந்தாங்கல் கிராமம்' என்று சொன்னார். உங்க குடும்பத்தைப் பத்திச் சொல்லுங்க என்றதற்கு, 'அந்தக் கிராமத்தில்தான் என் பங்காளி பாலகிருஷ்ணன் இருக்கிறார். எனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷத்திலேயே என் மனைவி இறந்துட்டா. எனக்குப் பசங்க ஏதுமில்லை' என்று சொல்லி அழுதார். அவரை, 'அழாதீங்க ஐயா' என்று தேற்றிவிட்டு, அவர் சொன்ன ஊருக்குச் சென்றோம். நீண்ட நேரத் தேடலுக்குப் பின்னர், அவர் சொன்ன பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டைக் கண்டுபிடித்தோம்.
நடராஜனின் போட்டோவை உறவினர்களிடத்தில் காட்டியபோது, 'அவரு இறந்துவிட்டாரே' எனக் கூறி மனம் விட்டு அழுதார்கள். 'அவர் நல்லாதான் இருக்கிறார்' என்று நாங்கள் சொல்ல, 'இல்லைங்க, ஆறு வருடத்திற்கு முன்னாடி ஆடு மேய்க்கிறதுக்காகச் சென்றவர் வீடே திரும்பவில்லை. நாங்களும் தேடித் தேடிப் பார்த்தோம், கிடைக்கவே இல்ல. அதனால மூணு வருஷத்துக்கு முன்னாடி அவருக்குச் செய்ய வேண்டிய கரும காரியங்களை எல்லாம் செஞ்சு முடிச்சிட்டோம்' என்று கூறி மீண்டும் அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி, 'நடராஜன் பத்திரமாகத்தான் இருக்கிறார். நேரில் வந்து அழைத்து போங்கள்' என்று சொல்லி அவர்களுக்கு கார் ஏற்பாடு செய்து முதியோர் இல்லத்திற்கு நேரில் அழைத்துச் சென்றோம். பின், முதியவர் நடராஜனை உறவினர்களுடன் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தோம்.

நாங்கள் இந்த அமைப்பை ஆரம்பித்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்களை இதுபோல மீட்டிருக்கிறோம். எல்லாவற்றையும்விட இந்த முதியவரை மீட்டு ஒப்படைத்ததுதான் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில், சுமார் ஆறு வருடத்திற்கு முன்பு காணாமல்போன ஒரு நபரை... அவர் இறந்து போயிருப்பார் என உறவினர்களும் சடங்குகளைச் செய்து முடித்திருந்த நிலையில்... 'அவர் உயிரோடுதான் இருக்கிறார்' என்று அவர்கள் முன் நிறுத்தும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி, மனத்திருப்தி. அந்த ஒரு தருணம் படத்தில் பார்ப்பதுபோல் இருந்தது" என்றார் நெகிழ்ச்சியாக.