Published:Updated:

ஜல்லிக்கட்டு: `பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க?’ -அவனியாபுரம் டு அலங்காநல்லூர் கள அனுபவம் பகிரும் மாணவி

ஜல்லிக்கட்டு

பணியின் இடையில் பலமுறை நான் ஒரு பத்திரிகையாளராக இல்லாமல் பொதுமக்களில் ஒருவராக நினைத்து ஆட்டத்தை பார்த்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தேன்!

ஜல்லிக்கட்டு: `பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க?’ -அவனியாபுரம் டு அலங்காநல்லூர் கள அனுபவம் பகிரும் மாணவி

பணியின் இடையில் பலமுறை நான் ஒரு பத்திரிகையாளராக இல்லாமல் பொதுமக்களில் ஒருவராக நினைத்து ஆட்டத்தை பார்த்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தேன்!

Published:Updated:
ஜல்லிக்கட்டு

20 -ம் நூற்றாண்டுகளை கடந்துவிட்ட போதிலும், சமூகத்தில் பெண்கள் கூடுதலாக பல சவால்களை கடந்து தான் முன்னே வர முடிகிறது. பல துறைகளில் பெண்கள் சாதிக்க நினைத்தாலும், இங்கே ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் சிக்கல்களால் அவர்களின் கனவுகள் கனவாகவே முடிந்துவிடுகிறது. அதுவும் பத்திரிகைதுறையிலும் ஊடகத்துறையிலும் சாதிக்க நினைக்கும் பெண்களை சமூகம் ஆச்சர்யமாக பார்க்கும் நிலைதான் தொடர்கிறது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகை என்றால், பெயருக்கு ஏற்றது போல் வீட்டில் பொங்கல் செய்வார்கள்... புத்தாடை அணிந்து, கோவில் சென்று வந்து செய்த பொங்கலை உண்டு தொலைக்காட்சியில் புது படங்களை பார்ப்பது என்று தான் எனது இத்தனை வருடங்கள் கடந்தன. இரண்டு வருடங்களில் உலகமே கோவிட் நோய்த்தொற்றை எதிர்கொண்டு பல எதிர்பாராத மாற்றங்களை கண்டது, அதில் ஒரு சிறு புள்ளியான என் வாழ்விலும் சற்றும் எதிர்பாராத வரமாக கிடைத்தது தான் விகடன் மாணவப் பத்திரிகையாளர் என்ற அங்கீகாரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். ஆனால், ஒருமுறை கூட பொங்கல் பண்டிகை நாள்களில் நிகழும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நேரில் கண்டதில்லை. முதல்முறையாக விகடன் மாணவப் பத்திரிகையாளராக ஜல்லிக்கட்டின் கள நிகழ்வை பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பொங்கலன்று மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு, அவனியாபுரத்தில் நடக்கவிருந்தது. இதுவரை நேரில் பார்த்திராத உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வை பதிவு செய்ய போகிறோம் என்ற ஆர்வம் என்னை உறங்க விடவில்லை.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
மணிகண்டன்

காலை ஐந்து மணி இருக்கும். உற்சாக அலாரம் அடிக்க, வேகவேகமாக எழுந்து பரபரப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தினரும் பரபரப்பாகவே இருந்தனர். `மகள் ஜல்லிக்கட்டு களத்தை பதிவு செய்ய செல்ல போகிறாள்’ என்ற ஆர்வம் அவர்களுக்கும் இருந்திருக்கலாம்.

என் அப்பா தான் என்னை ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். என்னை இறக்கிவிட்டு செல்லும் போது சில அறிவுரைகளையும் கூறினார். `உன்ன நீதான் பாத்துக்கணும். உன்னை சுத்தி என்ன நடக்குதுனு கவனமா இருந்துகிட்டு, உன் வேலையையும் பார்க்கணும், பத்திரமாக வீடு வந்து சேரு’எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடங்கும் நேரத்தை முன்னதாகவே சரியாக அறிந்து கொள்ளாததால் தாமதமாகவே களத்திற்கு செல்ல முடிந்தது. வாடிவாசல் அமைந்துள்ள இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே காவல்துறையினர் தடுப்பு அமைத்திருந்தனர். அங்கிருந்து உள்ளே செல்ல அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். என்னை பார்த்ததும் பள்ளி மாணவி என்று நினைத்து கொண்டு, அங்கிருந்த காவலர், ``பாப்பா உள்ள எல்லாம் போக கூடாது” என்றார். பிறகு, விகடன் அடையாள அட்டையை அவரிடம் காட்டி, என்னை அறிமுகம் செய்து கொண்டபின் ஆச்சரியத்துடன், `விகடன் பத்திரிகையாளரா?’ என்றார். என்னை உள்ளே செல்லவும் அனுமதித்தார்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு தொடங்கிவிட்டதால் பதட்டம் கலந்த வேகத்துடன் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்த இடத்திற்கு சென்றேன்.

அங்கிருந்த காவல்துறையினரிடம் அனுமதி பெற்று எப்படி உள்ளே செல்வது என்று கேட்டு அருகிலிருந்த சந்து வழியாக வாடிவாசல் ஒட்டி அமைந்திருந்த தடுப்பை அடைந்தேன். ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நொடியும் புது அனுபவத்தை பெற போகிறேன் என்ற பயம் கலந்த மகிழ்ச்சியில் இருந்தேன்.

அங்கு தடுப்புக்காக கட்டப்பட்ட கட்டைகளுக்கு மேல் உயரத்தில் மேடை போன்ற அமைப்பு இருந்தது. அதன் மேல் ஏற முறையாக வழியில்லை. சற்று பயமாக இருந்தாலும் தட்டுத்தடுமாறி மேலே ஏறி நின்றேன். சிறிது நேரம் ஜல்லிக்கட்டை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். துளியும் அச்சம் இன்றி காளைகளை காளையர்கள் அடக்கிக்கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகளை நேரில் கண்டபோது வாயடைத்து போனேன். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பொருத்தவரை நிரந்தர வாடிவாசல் கிடையாது. வருடாவருடம் தற்காலிகமாக வாடிவாசல் அமைக்கப்படும். அத்தனை நேர்த்தியான பாதுகாப்பான அமைப்பு கட்டைகள், கம்பிகள் வைத்து இருபுறமும் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. களத்திலுள்ள காளையர்களுக்கு பெரிதும் அடிபடாமல் இருக்க தென்னை நார் கொண்டு போட்டி நடக்கும் இடம் சமன் செய்யப்பட்டிருந்தது.

தயாராக இருக்கும் காளை
தயாராக இருக்கும் காளை

நான் நின்ற இடத்தின் எதிர்புறத்தில் அனைத்து ஊடகங்களின் கேமராக்களும் நேரலை காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தன. என் அருகில் காவல்துறையைச் சார்ந்தவர்கள், மற்ற சில ஆண்களும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு தனி ஒரு பெண்ணாக அதுவும் பார்ப்பதற்கு பள்ளி மாணவி போல் இருப்பதால் என்னை சுற்றி இருந்தவர்கள் சற்று குழப்பத்துடன் பார்த்தனர். அதில் ஒரு காவலர், "பாப்பா இறங்கு இங்கலாம் நிக்க கூடாது" என்று கூறினார். என் கழுத்திலிருந்து விகடன் மாணவப் பத்திரிகையாளர் எனும் அடையாள அட்டையை காண்பித்த போது, நான் காட்சிகளை பதிவு செய்ய வந்து இருப்பதை உணர்ந்து அவர் நான் வீடியோ எடுக்க அனுமதி கொடுத்தார்.

என்னிடம் கேமரா இல்லாததால் எனது மொபைலில் தான் நான் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தேன். கேமரா அளவிற்கு தெளிவாக என்னால் காட்சிப்படுத்த முடியவில்லை, இருப்பினும் என்னால் இயன்றவரை தெளிவாக பதிவு செய்தேன். மேடையிலிருந்து கீழே இறங்குவதற்கு கடினமாக இருந்தது. பின்னர், ஒரே குதி தான் கீழே இறங்கிவிட்டேன். அதன் பிறகு இடைவெளி சற்று அதிகமாக இருந்த தடுப்பு கம்பிகளுக்கு பின் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்தேன்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
என்.ஜி மணிகண்டன்

அப்போது திடீரென சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று நான் நின்றிருந்த தடுப்புக் கம்பிக்கு மிக அருகில் வந்து விலகி சென்றது. சில வினாடிகளுக்கு என் இதயத் துடிப்பு வேகமெடுத்து தணிந்தது. பயத்தால் என் செல்போனை தவற விட்டு, பின்னால் நின்று ஜல்லிக்கட்டை பார்த்துக் கொண்டிருந்த பெண் காவலாளி ஒருவரின் பூட்ஸ் கால்களை என்னை அறியாமல் மிதித்து தடுமாறி விழப்போனேன். நான் விழுந்து விடாமல் என்னை அவர் பிடித்துக் கொண்டார். பின் அவரிடம் நன்றியையும், மன்னிப்பையும் ஒருசேர தெரிவித்தேன். சில சமயங்களில் இது போன்று மன்னிப்பும், நன்றியும் ஒருசேர தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை நம்மில் பலரின் வாழ்விலும் உண்டாகிறது.

சுட்டெரிக்கும் வெயில், எனது செல்போனும் என்னைப்போல் எனர்ஜி குறைந்து காணப்பட்டது. என்னிடம் பவர் பேங்க் இருந்ததால் செல்போன் தப்பித்தது. எனக்கு பசி எடுத்தது மணி 11-க்கு மேல் ஆகி விட்டது காலை சிற்றுண்டி கூட உண்ணாததால் சிறிது நேரத்தில் சோர்ந்து விட்டேன். ஆனால், களத்தில் நின்று ஆடிய காளைக்கும், காளையர்களுக்கும் எந்த சோர்வும் இல்லை.

மாடு பிடி வீரர்களுடன்
மாடு பிடி வீரர்களுடன்

காவல் துறையைச் சார்ந்தவர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு , மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என அனைவருக்கும் அங்கு உணவு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. எனக்கு பசித்தது. ஆனால் நான் யாரிடமும் என் பசியையும் தெரிவிக்கவில்லை, உணவு தரும் இடத்தையும் கேட்டு அறியவில்லை. எனது தயக்கம் தான் என் பட்டினிக்கு காரணம். நாம் வாய் திறந்து சொல்லாமல் யாருக்கும் நம் பசியோ வலியோ புரியாது, நம் தாயை தவிர. இதனை ஜல்லிக்கட்டை காணும் ஆர்வத்தில், இல்லை ஆர்வக்கோளாறு என்றே சொல்லலாம்.

பிறகு பசியையும் பொருட்படுத்தாமல் என்னுடைய வேலைக்காக பலமுறை அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த பலபேர் என்னை கவனித்து கொண்டிருந்ததையும் உணர்தேன். அதில் ஒருமுறை பேரி கேட்டிற்கு அடியில் உருண்டும் சென்றேன். அப்போது, ஒரு காவலர் ஒருவர் நான் ஏதோ விளையாடுகிறேன் என்று நினைத்து "பாப்பா பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க" என்று கேட்டார். மூச்சு இறைக்க நான் பத்திரிகையாளர் என்று என் ஐடியை காண்பித்தேன். ஒரு புன்முறுவலுடன் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார். வாடிவாசலில் இருந்து வீரர்களுடன் போட்டியிட்டு வெளியில் வரும் காளைகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தேன். காளை எகிறிக்குதித்து வெளியே வந்துவிடுமோ என்ற பயமும் இருந்தது. மறுபடியும் வாடிவாசலின் அருகே ஓடி போய் நின்று விட்டேன்.

ஜல்லிக்கட்டு: `பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க?’ -அவனியாபுரம் டு அலங்காநல்லூர் கள அனுபவம் பகிரும் மாணவி

காளைகள் களமிறங்க காளையர்கள் அடக்க என விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. அதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்படும் போது முதலுதவி சிகிச்சையாளர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

"தொட்டுப்பார் அடக்கிப்பார்" என்ற வசனங்கள் தீப்பொறியாக தெறித்தது. அவனியாபுரம் அதிரும் அளவிற்கு இருந்தது.

ஒவ்வொரு காளையின் கண்களும் "எத்தனை வீரர்கள் என் திமிலை பிடித்தாலும் உன் திமிரை அடக்கிவிட்டு செல்வேன்" என்று கூறுவது போல் இருந்தது.

இனி பாலமேடு...

முதல் நாள் இதே ஆர்வத்தோடையே முடிவடைஞ்சுருச்சு. முதல் நாள் அனுபவமும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் என்னை அடுத்த நாளை எதிர்பார்க்க வைத்துவிட்டன. காலை 4. 30 மணிக்கு எழுந்துருச்சு 5. 30 மணிக்கு கிளம்பிட்டேன். நானும் என் சக விகடன் மாணவ பத்திரிகை நண்பரும் பெரியாரிலிருந்து பாலமேடு பஸ் ஏறினோம். வரும் வழியில் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. தாமதமாகி விடுமோ என்கிற சிந்தனை தான். ஒரு வழியாக பாலமேடு பேருந்து நிலையத்தை பேருந்து வந்தடைந்தது. இறங்கியதும் ஆரவாரமாக மேளச்சத்தம். ஆனால் அங்கு வாடிவாசல் இல்லை. என்னவாக இருக்கும் கூட்டமாக இருக்கிறதே என்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன் சென்று பார்த்தேன். என் உயரத்திற்கு முன் நிற்கும் மனிதர்கள் தான் தெரிந்தார்கள். அந்த கூட்டத்திற்குள் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதிக வெள்ளை வேட்டி சட்டை கூட்டம். அதிக எடையுடன் கூடிய பெரிய கேமராக்கள், நான்கைந்து பேர் கண்ணில் பட்டனர்.

ஜல்லிக்கட்டு: `பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க?’ -அவனியாபுரம் டு அலங்காநல்லூர் கள அனுபவம் பகிரும் மாணவி

நிச்சயம் முக்கியமான ஆட்கள்தான் கூட்டத்திற்கு நடுவில் இருக்க வேண்டும் என்று புரிந்தது. என் உடன் வந்த நண்பர் சற்று உயரமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் வந்து இருக்கிறார்கள் என்றார். பிறகு அந்த கூட்டம் அவர்களுடன் சென்று விட்டது அங்கிருந்த காவல்துறையினரிடம் வாடி வாசலுக்கு செல்லும் வழி கேட்டு வந்தோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தடுப்பு கட்டைகள் காளைகள் செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டு: `பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க?’ -அவனியாபுரம் டு அலங்காநல்லூர் கள அனுபவம் பகிரும் மாணவி

அதன் வழியே சென்று வாடி வாசலுக்கு பின்புறம் இருந்த காளைகளை பரிசோதிக்கும் இடத்திலிருந்து வாடி வாசலுக்குள் காளைகளை கொண்டு செல்ல வரிசையில் நிற்கும் காளைகளை வீடியோ பதிவு எடுத்துக்கொண்டு ஒரு சிறிய முன்னோட்ட குறிப்பை நான் பேசினேன். முதல்முறையாக அவ்வளவு பேருக்கு மத்தியில், கேமரா முன் பேசுவதால் அத்தனை சொதப்பல்கள் எப்படியோ ஓடும் ரயிலை பிடிக்க போகும் வேகத்தில் பேசி முடித்து விட்டேன்.

பிறகு, அங்கிருந்த காளைகளில் ஏதேனும் வித்யாசமாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு ஜல்லிக்கட்டு களத்திற்குள் சென்றோம். பிறகு, வெளியில் நடப்பவைகளை கவர் செய்யலாம் என்று போட்டி நடக்கும் இடத்தை சுற்றிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட பத்து முறை சுற்றியிருப்போம். நாங்கள் களைப்பாக இருப்பதை கண்ட காவல் துறையினர் ஒருவர் "சாப்டீங்களா" என்று கேட்டார். இல்லை என்றதும் உணவும் அளித்தார். அதை சாப்பிட்டு விட்டு மீண்டும் ஏதேனும் செய்தி கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தோம்.

ஜல்லிக்கட்டு: `பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க?’ -அவனியாபுரம் டு அலங்காநல்லூர் கள அனுபவம் பகிரும் மாணவி

இதற்கு இடையில் பலமுறை நான் ஒரு பத்திரிகையாளராக இல்லாமல் பொதுமக்களில் ஒருவராக நினைத்து ஆட்டத்தை பார்த்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தேன். களமிறங்க காத்திருக்கும் வீரர்களிடமும் பேசி ஜல்லிக்கட்டின் விதிமுறைகளை அறிந்துகொண்டேன்.

அங்கிருந்த காவல் துறையினர் ஒருவர் எங்களை அழைத்து எங்களை பற்றியும் பத்திரிகைதுறை பற்றியும் அறிந்து கொண்டார். நான் பள்ளி மாணவி மாதிரி இருந்தாலும் நான் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் சில காவலர்கள் என்னை மேடம் என்றும் அழைத்தார்கள்.

போலீஸ் என்றாலே பயமாக இருக்கும். பல காவலர்களுக்கு மத்தியில் அமர்ந்து வீடியோ எடுப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. இதற்கு காரணம் நான் ஒரு மாணவ பத்திரிகையாளர் என்பது தான். அங்கிருந்த பலர் எங்களை பாராட்டி ஊக்குவித்தனர்.

ஊர் மக்களில் சிலர் என்னிடம் மிகுந்த அக்கறையாக நடந்து கொண்டார்கள். "உனக்கு ஏதாச்சு தேவ பட்டா என் வீட்டிற்கு வா... இதுவு உங்க வீடு மாதிரி தான் யோசிக்காத" என்றனர். அப்போது நான் தெருவில் இருந்த குழாயில் முகம் கழுவி கொண்டிருந்தேன். தோளில் இருந்த துண்டை எடுத்து என்னிடம் குடுத்து அவர்களின் அக்கறைகளை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

ஜல்லிக்கட்டு: `பாப்பா என்ன பண்ணீட்டு இருக்க?’ -அவனியாபுரம் டு அலங்காநல்லூர் கள அனுபவம் பகிரும் மாணவி

இதன் பிறகு ருத்ரா மற்றும் கறுப்பன் என்ற காளையின் உரிமையாளரிடம் பேசினோம்.

யுவராஜா என்கிறவர், ``இது ஜல்லிக்கட்டு பேரவை தலைவரின் மாடு பரம்பரை பரம்பரையா நாங்க மாடு வளக்குறோம். போட்டிக்கு இரண்டு மாதம் முன்னாடி நீச்சல் நடைபயிற்சி கொடுப்போம். சத்தான உணவுகள் கொடுப்போம். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாட்டுமாடு தான் நல்லா விளையாடும்” என்றார்,

முத்துபாண்டி என்கிறவர், ``காளைகள்ல 16, 17 வகை இருக்கு. அதுல நாட்டு மாடு தான் ஜல்லிக்கட்டுக்கு சிறந்தது. எங்க காளைக்கு பாய்ச்சல் குணமும் தூக்கி அடிக்கிற குணமும் அதிகமா இருக்கு. இது கன்றா இருக்கும் போது என்ன செய்தோ சாகுற வரைக்கு அதான் செய்யும்” என்று கூறினார்கள்.

காளைகளின் அருகில் சென்று தொட்டுப்பார்த்து விட்டு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு சென்றுவிட்டோம்.

ஜல்லிக்கட்டு காளை
ஜல்லிக்கட்டு காளை

இரண்டு நாள்களும் எதிர்பாராத பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அனுபவங்களும் கிடைத்தது. இன்றைக்கு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் ..! முதல்முறையாக ஒரு மாணவ பத்திரிகையாளராக ஜல்லிக்கட்டு களத்திற்குள் என் காலடியை பதித்திருக்கிறேன். பத்திரிகையாளராக என்னுடைய பயணம் தொடங்கியது ஜல்லிக்கட்டு களத்தில்... வரும் காலங்களில் பல புதுமையான அனுபவங்களை எதிர்பார்த்து, நான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism