Published:Updated:

`பிரேக் பிடிக்க காலில்லை; கற்றுக்கொடுக்க ஆளில்லை!' - மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவரின் 13 ஆண்டு சவால்

சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை நடத்திவருகிறார் மாற்றுத்திறனாளி சர்தார் கான்.

ஆட்டோ டிரைவர் சர்தார்கான்
ஆட்டோ டிரைவர் சர்தார்கான்

கைகளில் ஊன்றுகோல்கள், காக்கிச்சட்டை, சிரித்த முகம் இதுதான் ஆட்டோ டிரைவர் சர்தார் கானின் அடையாளம். பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதியில் சர்தார் கான் ஆட்டோவுக்கென வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான சர்தார் கான், ஆட்டோ ஓட்டி தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.

காலை வேளையில் ஆட்டோ ஸ்டாண்டில் வாடிக்கையாளருக்காகக் காத்திருந்த சர்தார் கானைச் சந்தித்துப் பேசினோம்.

ஆட்டோ டிரைவர் சர்தார் கான்
ஆட்டோ டிரைவர் சர்தார் கான்

மாற்றுத்திறனாளியான நீங்கள் எப்படி ஆட்டோ ஓட்டுகிறீர்கள்?

ஆட்டோ டிரைவர் சர்தார் கான்
ஆட்டோ டிரைவர் சர்தார் கான்

``வழக்கமாக என்னைப் பார்க்கும் அனைவரும் கேட்கும் கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கு நம்பிக்கை என்பதுதான் என் பதில். ஆட்டோ ஓட்டும்போது பிரேக் பிடிக்க கால் கண்டிப்பாக தேவைப்படும். போலியோ பாதிப்பால் என் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. அதனால் ஆட்டோ ஓட்டும்போது பிரேக் பிடிக்க முடியாத சூழல் ஒருகாலத்தில் இருந்தது. மேலும், என்னுடைய வலது காலில் அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பிறகும் அந்தக் காலைக் கொண்டு பிரேக் பிடிக்க முடியாது. இதனால் இடது காலைக் கொண்டுதான் பிரேக் பிடிப்பேன். ஆரம்பத்தில் அது கஷ்டமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது."

எத்தனை ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிவருகிறீர்கள்?

சர்தார் கான்
சர்தார் கான்

`` நான் 6-வது வரை படித்துள்ளேன். சின்ன வயதில் எனக்கு காய்ச்சல் வந்தது. அதன் பிறகு போலியோவால் பாதிக்கப்பட்டேன். மணிபர்ஸ், பெல்ட்களை தயாரித்து விற்பேன். அந்தத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதனால் வேறு தொழில் செய்ய முடிவு செய்தேன். ஆட்டோ ஓட்டலாம் என முடிவெடுத்தபோது எனக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

பலரிடம், `ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுங்கள்' எனக் கண்ணீர்மல்க கேட்டுள்ளேன். ஆனால், அவர்களில் சிலர் என்னை நம்பி ஆட்டோ கொடுக்கவில்லை. அதோடு அவர்கள் பேசிய வார்த்தைகளும் வேதனையடைய வைத்தன. ஆனாலும், அந்த வார்த்தைகள்தான் எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தது. தங்க நகைகளை அடகு வைத்து சொந்தமாக 30,000 ரூபாய்க்கு ஆட்டோ வாங்கினேன். அந்த ஆட்டோவை நானே எடுத்துக்கொண்டு திரு.வி.க.நகரில் உள்ள மைதானத்துக்கு இரவில் செல்வேன். மெதுவாக ஓட்டப்பழகினேன். நான் ஆட்டோ ஓட்டத் தொடங்கி 13 ஆண்டுகளாகிவிட்டன."

ஆட்டோ ஓட்டும் அனுபவம் எப்படியிருக்கிறது?

சர்தார் கான்
சர்தார் கான்

``அது ஒரு புதுவிதமான அனுபவம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்ட சமயத்தில் எனக்கு ஆட்டோவின் பிரேக்கைப் பிடிக்க முடியாது. மேலும், ஆட்டோவின் சீட்டில் உட்கார்ந்திருக்க முடியாது. அதனால் சீட்டின் உயரத்தை அதிகரிக்க செங்கலை வைத்திருப்பேன். அப்போதுதான் என்னால் ஆட்டோ ஓட்ட முடியும். அதைப்பார்த்து பலர் ஏளனம் செய்தனர். அதனால் என் மனம் தளரவில்லை. தற்போது, என்னைப்போல யாரும் ஆட்டோவை ஓட்ட முடியாது என்று பலர் சொல்கிறார்கள்.

ஆட்டோவில் சீட்டின் உயரத்தையும் அதிகரித்துவிட்டேன். வலது புறத்திலிருக்கும் பிரேக்கை இடது காலால் பிடிக்கவும் பழகிக் கொண்டேன். ஆட்டோவில் ஊன்றுகோலாடு என்னைப்பார்க்கும் 90 சதவிகிதம் பேர் நம்பிக்கையுடன் பயணிப்பார்கள். ஆனால், 10 சதவிகிதம் பேர் ஏறாமல் சென்றுவிடுவார்கள். எனக்கு என்னை நம்பும் 90 சதவிகிதம் பேர்தான் முக்கியம். அவர்களைப் பத்திரமாகக் கொண்டு செல்வதுதான் என் நோக்கம்."

தினமும் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?

ஆட்டோ டிரைவர் சர்தார் கான்
ஆட்டோ டிரைவர் சர்தார் கான்

``இவ்வளவு ரூபாய் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில், ஒருநாள் நிறைய சவாரி கிடைக்கும். இன்னொரு நாள் சவாரி குறைவாகக் கிடைக்கும். நிறைய சவாரி கிடைத்தால் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன். குறைவான சவாரி கிடைக்கும் போது 200 ரூபாய்தான் வரும். சராசரியாக பார்த்தால் தினசரி 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைதான் எனக்கு வருமானம் கிடைக்கும். அந்தப் பணத்தில் என் குடும்பத்தை சந்தோஷமாக நடத்திவருகிறேன், இருப்பினும் தொழில்ரீதியாக எனக்குச் சில சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சமாளித்துத்தான் ஆட்டோ ஓட்டி வருகிறேன்".

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

குடும்பத்தினருடன் சர்தார் கான்
குடும்பத்தினருடன் சர்தார் கான்

``என் மனைவி பெயர் ரொகையா பானு. மூன்று குழந்தைகள். மூத்தவன் சல்மான் கானுக்கு வயது 12. அவன், 6-ம் வகுப்பு படிக்கிறான். இரண்டாவது மகள். அட்சயா பாத்திமா. அவளுக்கு 6 வயதாகுகிறது. 1-ம் வகுப்பு படிக்கிறாள். மூன்றாவது முபாரக் கான், 2 வயதாகுகிறது. மனைவி ரொகையா பானுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் உறவினர்கள் இல்லை.

எனக்கு சொந்தக்காரப் பொண்ணுதான். அவரைச் சின்ன வயதிலிருந்து எனக்குத் தெரியும். எங்களுக்குத் திருமணம் நடந்து 13 ஆண்டுகளாகின்றன. பானுவையும் குழந்தைகளையும் கண் கலங்காமல் காப்பாற்றி வருகிறேன். எனக்கு அன்று உதவி செய்ய முன்வராதவர்கள் தற்போது உதவி செய்யவதாகச் சொல்கிறார்கள். அந்த உதவியை நான் ஏற்றுக்கொள்ளவில்லை."

முதல் சவாரி எங்கிருந்து எங்கு சென்றீர்கள்?

சர்தார் கான்
சர்தார் கான்

``என்னுடைய முதல் சவாரியே ஒரு திருமணம்தான். மணமகனையும் மணமகளையும் கோயிலுக்கு அழைத்துச் சென்றேன். பின்னர் தாலிகட்டிய பிறகு இருவரையும் வீட்டுக்கு அழைத்துவந்தேன். அந்தக் குடும்பத்தினர் என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர். முதல் சவாரி திருமண வீடு என்பதால் கவனமாகவும் மெதுவாகவும் ஆட்டோவை ஓட்டினேன்."

மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

`என்னுடைய தம்பி போல் மாறிவிட்டான்'- மாற்றுத்திறனாளி இளைஞருக்குக் கைகொடுத்த பெண்!
சர்தார் கான்
சர்தார் கான்

`` உண்மையாக உழையுங்கள். சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். உழைப்புக்கேற்ற வெற்றி உங்களைத் தேடிவரும்" என்றவர் இறுதியாக, `` நான் ஓட்டும் ஆட்டோ பழைய மாடல். புதிய மாடல் ஆட்டோ ஒன்று வாங்க வேண்டும். மனைவியையும் குழந்தைகளையும் கடைசி வரை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்."