Published:Updated:

`வீட்டு சுவர் விழுந்தா எல்லாம் நிவாரணம் கிடையாது!' ஆதரவற்ற பாட்டியிடம் அதிகாரிகள் அலட்சியம்

"'இதுக்கெல்லாம் நிவாரணம் தரமாட்டாங்க. சுவர் இடிஞ்சு விழுந்து இறந்திருந்தா, நிவாரணம் கிடைச்சுருக்கும்'னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியா போயிட்டு. 'இப்படிப் பேசுறீங்களே. இருக்கிறதுக்குதான் வீடு வேணும். செத்தப் பிறகு நிவாரணத்த நான் எப்படி வாங்குவேன்?"னு கேட்டேன்.

இடிந்த சுவருடன் ஜெபமாலை
இடிந்த சுவருடன் ஜெபமாலை ( நா.ராஜமுருகன் )

தொடர்மழை காரணமாக மூதாட்டி ஒருவரின் வீட்டுச்சுவர் இடிந்துவிழ, அதற்கு நிவாரணம் கேட்ட மூதாட்டியிடம், "சுவர் விழுந்ததுக்கெல்லாம் நிவாரணம் தரமுடியாது. சுவர் இடிஞ்சு விழுந்ததால யாராவது இறந்துவிட்டால்தான் அரசு நிவாரணம் தரும்" என்று வருவாய்த்துறை அதிகாரிகள் பொறுப்பற்று பதில் சொன்ன விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஜெபமாலை வீட்டுமுன்பு
ஜெபமாலை வீட்டுமுன்பு
நா.ராஜமுருகன்
Vikatan

கரூர் மாவட்டம், குளித்தலை பாரா தெருவைச் சேர்ந்தவர், செபஸ்டியான். இவரின் மனைவி, ஜெபமாலை. இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை. செபஸ்டியான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, அரவணைக்க உறவுகள் இல்லாது தனியாக வாழ்ந்து வருகிறார் ஜெபமாலை. மிகச் சாதாரணமான கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர்
நா.ராஜமுருகன்

சுவர்கள் அனைத்தும் வெறும் மண் சுவர்கள். அங்கங்கே வெடித்து, 'எப்போது வேண்டுமானாலும் மேலே விழலாம்' என்று பயம்காட்டின விரிசல் கண்ட சுவர்கள். அதில் பயந்தபடியே வாழ்ந்து வந்தார் ஜெபமாலை. இந்நிலையில், கடந்த ஒருமாதகாலமாகத் தொடர் கனமழை பெய்ய, ஒரு நள்ளிரவில் அவ்வீட்டின் சுவரின் ஒருபகுதி விழுந்தது. நல்ல வேலையாக, வீட்டின் உள்பக்கமாக விழாமல் வெளிப்பக்கமாக விழுந்ததால், ஜெபமாலை உயிர் தப்பியிருக்கிறார்.

சோகம் கப்பிய குரலோடு பேசிய ஜெபமாலை, "எங்களுக்கு குழந்தை இல்லை. கூலி வேலை பார்த்து, அதுல கிடைக்கிற காசுல கூழோ, கஞ்சியோ குடிச்சிகிட்டு, வாழ்ந்துகிட்டிருந்தோம். 30 வருஷத்துக்கு முன்னாடி அவர் எங்களுக்காகக் கட்டிய மண்குடிசை இது. வெறும் மண்ணால் ஆன சுவர்களைக் கொண்ட வீடு. இந்த வீட்டை தவிர, எங்களுக்கு வேறு சொத்தில்லை. 10 வருஷத்துக்கு முன்னாடி என்னைத் தனியா தவிக்கவிட்டுட்டு, அவர்பாட்டுக்கும் போய் சேர்ந்துட்டாரு. அதுக்கப்புறம், கூலி வேலைக்குப் போய் கிடைக்கிற வருமானத்தை வச்சு காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

ஜெபமாலை
ஜெபமாலை
நா.ராஜமுருகன்

ஆனா, வயசாகிகிட்டே இருக்குல்ல... அதனால முன்புபோல தெனமும் வேலைக்குப் போகமுடியல. ரேஷன் அரிசியை வெச்சுதான் சாப்பிட்டு வர்றேன்.

என் வீட்டுச் சுவர்கள் நாலு பக்கமும் விரிசல் விழுந்து கெடந்துச்சு. பயத்தோடத்தான் இருந்தேன். 'நாதியில்லாமல் இருக்கும் என்னோட வீட்டை சரிபண்ணி தாங்க. இல்லைன்னா, வேறு வீடு கட்டித்தாங்க'னு அரசாங்கத்துக்கிட்ட கோரிக்கை வெச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா, எனக்காக யாரும் இரக்கம் காட்டலை.

"ஏழையா பொறந்தா, எல்லாத்துக்கும் பயந்து பயந்தே சாவணும் போல தம்பி."
ஜெபமாலை

சில நாளைக்கு முன்னாடி நடுராத்திரியில ஒருபக்க சுவர் இடிஞ்சு விழுந்துட்டு. நல்லவேலையாக வெளிப்பக்கமாக விழுந்தது. உள்பக்கமா விழுந்திருந்தா, இந்நேரம் என் கணவர் போன இடத்துக்கே நானும் போய் சேர்ந்திருப்பேன். உடனே, வருவாய்த்துறை அதிகாரிகளைப் பார்த்து, 'வீட்டுச்சுவர் இடிஞ்சு விழுந்துட்டு. நிவாரணம் வாங்கிக் கொடுங்க. அப்பதான் விழுந்த சுவரைச் சரி செய்ய முடியும். எனக்கு வேற வருமானம் ஏதுமில்ல'னு கேட்டேன். அவங்களும் என் வீட்டை வந்து பார்த்துட்டு, 'இதுக்கெல்லாம் நிவாரணம் தரமாட்டாங்க. சுவர் இடிஞ்சு விழுந்து இறந்துவிட்டால், நிவாரணம் கொடுப்பதுதான் வழக்கம்'னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியா போயிட்டு. 'இப்படி பேசுறீங்களே. இருக்கிறதுக்குதான் வீடு வேணும். செத்தப் பிறகு நிவாரணத்த நான் எப்படி வாங்குவேன்? மத்த சுவர்களும் விரிசல் கண்டு விழுற நிலைமையில இருக்கு. புதுசா வீடு கட்டவாச்சும் ஏற்பாடு பண்ணுங்க'னு கேட்டேன். அதுக்கும் சரியாப் பதில் சொல்லல.

இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர்
நா.ராஜமுருகன்

'நிவாரணத்துக்கோ, புதுவீட்டுக்கோ ஏற்பாடு பண்ணுங்க'னு குளித்தலை துணை ஆட்சியரிடமும் மனுக்கொடுத்திருக்கிறேன். ஏழையா பொறந்தா, எல்லாத்துக்கும் பயந்து பயந்து சாவணும்போல தம்பி. ஆனா, இந்தப் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் உள்ளிட்ட சில பிள்ளைங்க உடனே வந்து என்னைப்பார்த்து ஆறுதல் சொல்லி, கொஞ்சம் பணஉதவி செஞ்சாங்க. 'அரசாங்கத்துக்கிட்ட உங்களுக்குத் தேவையான உதவிகளை வாங்கித் தர்றோம்'னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. எனக்காகப் பரிவுகாட்ட சிலர் இருக்காங்களேனு மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. விரிசல் கண்ட என் வீட்டு சுவர்களால என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தா, அந்த அதிகாரிங்கதான் பொறுப்பு" என்று கண்ணீரோடு முடித்தார்.

பாட்டிக்கு உதவிய முத்துச்செல்வனிடம் பேசினோம். "கோயமுத்தூர்ல சுவர் இழுந்துவிழுந்து அப்பாவிகள் செத்துப்போனாங்க. அதுபோல், இந்தச் சுவர் இடிஞ்சு விழுந்து, பாட்டி இறந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்? ஆனா, அதிகாரிகள் பொறுப்பில்லாமல் பதில் சொல்லியிருக்காங்க. 'சுவர் இடிஞ்சு விழுந்து செத்தாதான் நிவாரணம் தருவாங்கன்னா, அதை யார் வாங்குவா? உயிர் போனாதான் உதவின்னு ஓர் அரசு சொல்லுதுன்னா, ஏழைகள்மீது இந்த அரசு எந்த அளவுக்கு கருணை காட்டுதுங்கிறது தெரியுது. தவிர, வருமுன் காப்போம்ங்கிற முன்னெச்சரிக்கை எண்ணம் சுத்தமா இல்லை என்பதையும் காட்டுது. அந்தப் பாட்டியின் வீட்டு மத்த சுவர்களும் விரிசல்விட்டு, இடிஞ்சு விழுற நிலைமையில் இருக்கு.

முத்துச்செல்வன்
முத்துச்செல்வன்
நா.ராஜமுருகன்

என்ன ஆனாலும்சரி, பாட்டிக்கு உரிய உதவிகளை அரசு தரப்பில் பெற்றே தீருவோம்" என்றார் உறுதியாக.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். "சுவர் விழுந்ததுக்கெல்லாம் நிவாரணம் அரசு தருவதில்லை. அதைத்தான் சொன்னோம். நாங்களா சொந்த காசைப் போட்டு, அவங்களுக்கு தர முடியும்? வீடு கட்டுவதில் நிறைய நடைமுறைகள் உள்ளன.

ஆறுதல் சொல்லும் இளைஞர்கள்
ஆறுதல் சொல்லும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்
`உரிமையாளர்கள் வாக்குவாதம்.. கடும் பாதுகாப்பு!’- மேட்டுப்பாளையம் விதிமீறல் சுற்றுச்சுவர்கள் இடிப்பு

அதை அவங்களாகத்தான் முயற்சி பண்ணி, ஒவ்வொரு நிலையா கடந்து, அரசு கதவைத் தட்டி, வீடு கட்டிக்க முயற்சி செய்யணும்" என்று பட்டும்படாமலேயே பதில் சொன்னார்கள்.