Published:Updated:

அமெரிக்காவுக்குப் பார்சலான தமிழக ஆர்டர்; குழப்பும் அரசு - ரேபிட் டெஸ்ட் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

ரேபிட் டெஸ்ட் கிட்
ரேபிட் டெஸ்ட் கிட் ( Representational image )

`முதல்வர்களுடனான ஆலோசனையின்போது ரேபிட் டெஸ்ட் கிட்கள் இந்தியாவுக்குப் பெறும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். கூடுதலாக 50 ஆயிரம் கருவிகளை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம்’ - தமிழக அரசு

உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தி வரும் தாக்கம், அளவிடமுடியாதது. பொருளாதாரரீதியாக மக்களும் அரசுகளும் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அறிவுரை எல்லாம் தனிமைப்படுத்துதலும் தொடர்ச்சியான பரிசோதனையும்தான்.

கொரோனா
கொரோனா

ஒவ்வொரு அரசும் தங்களின் சக்திக்கு இயன்றவரை பரிசோதனைகளை விரிவுப்படுத்திக்கொண்டே செல்ல வேண்டும். அதில் பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களை முடிந்தவரை விரைவாகத் தனிமைப்படுத்த வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவர்கள் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும். இப்படி கொரோனா தடுப்பில் பல விஷயங்கள் இருக்கின்றன.

உதாரணமாக கேரளாவைச் சொல்லலாம்... கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறி உள்ளவர்கள் வசித்த பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொண்டு சோதனை மேற்கொண்டனர். இதன் மூலம் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பதை 30 நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும். அதில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு அடுத்தகட்ட பரிசோதனைகள் செய்யப்படும்.

`பத்து நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்!’ -சமூகப் பரவலைத் தடுக்க கேரளாவின் ரேபிட் டெஸ்ட் டெக்னிக்
கொரோனா
கொரோனா

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 19 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தப் பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 700 முதல் 900 பரிசோதனைகள்தான் செய்ய முடிகிறது. கூடுதல் பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்து பேச்சு அடிபட்டது. இதைத் தொடர்ந்து முதல்வரே நேரடியாக இது தொடர்பாகப் பேசினார்.

ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி:

முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் கொரோனா தொடர்பான நிலவரங்களை தெரிவித்தார். அப்போது அவர் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தொடர்பாகப் பேசினார், ``தமிழகத்தில் 21 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அந்த 21 இடங்களுக்கும் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். அனைத்தும் செயல்படத் தொடங்கினால் பரிசோதனை இன்னும் துரிதமாக நடக்கும்.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு இருக்கின்றன. மேலும் 2,500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு இன்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று துரிதப் பரிசோதனைக் கருவிகள் என்று சொல்லப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஒரு லட்சம் எண்ணிக்கையில் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனையின் வேகம் அதிகரிக்கும். வரும் 9 -ம் தேதி அந்தக் கருவிகள் கிடைக்கும் . சீனாவிலிருந்து கருவிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. 10 -ம் தேதி முதல் பரிசோதனைகள் தொடங்கும். முப்பது நிமிடங்களில் இந்தப் பரிசோதனை முடிவுகள் தெரிந்து விடும்.” என்றார் முதல்வர். இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அடுத்தகட்டத்துக்கு நகரும் எனப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

`1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள்; அறிகுறி இல்லாதவருக்கும் தொற்று!’ - பிரஸ்மீட்டில் முதல்வர் பழனிசாமி

பின்னர் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷும் ரேபிட் கிட் ஆர்டர் கொடுக்கப்பட்டது தொடர்பான தகவலைத் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 9 -ம் தேதி!

இந்த நிலையில் ரேபிட் கிட்கள் தமிழகம் வந்துவிடும் எனத் தெரிவித்த ஏப்ரல் 9 -ம் தேதி மதியம் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துவிட்டது என்ற தகவலை பகிர்வார் என எதிர்பார்த்த நிலையில், ``தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது” எனப் புதிய தகவலைச் சொன்னார். ஆனால் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆர்டருடன் சேர்த்து 4 லட்சமா, அல்லது தனியாக நான்கு லட்சமா என்ற விளக்கம் அப்போது கொடுக்கப்படவில்லை. எனினும் தொடர்ந்து பேசிய முதல்வர், ``இன்றிரவு(ஏப்ரல் 9 -ம் தேதி) 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வர உள்ளது” என்றார். இதனால் முதற்கட்டமாக 50,000 கருவிகள் வரும் என்றும் அதன் பின்னர் மொத்தமாக வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் இதே 9-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஒரு அறிக்கை பரவியது. ஏப்ரல் 2 என தேதியிடப்பட்ட அந்த அறிக்கையில் மாநில அரசுகள் தனியாக வென்டிலேட்டர்கள், என் 95 மாஸ்கள் உள்ளிட்ட எந்த மருத்துவ உபகரணங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்க வேண்டாம் எனவும், தேவையானவற்றை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

அமெரிக்காவுக்குப் பார்சலான தமிழக ஆர்டர்; குழப்பும் அரசு - ரேபிட் டெஸ்ட் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

10 -ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர், ரேபிட் டெஸ்ட் கிட் தாமதமாவதாகவும் இன்னும் 2 தினங்களில் வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

`தமிழகம் 3-ம் நிலைக்குச் செல்லும் வாய்ப்பு... 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்' - முதல்வர் பழனிசாமி

ஏப்ரல் 11 -ம் தேதி!

ஏப்ரல் மாதம் 11 -ம் தேதி மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் தலைமைச் செயலாளர் சண்முகம். அப்போது அவர், ``பரிசோதனையை வேகப்படுத்தவே ரேபிட் டெஸ்ட் கிட் தேவைப்படுகிறது, அது இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் நம்மிடம் போதுமான பி.சி.ஆர்., கிட் இருக்கிறது. அது போதுமான அளவு இருப்பதால் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். கொரோனா பரிசோதனை வேகப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தமிழக தலைமை செயலாளர் சண்முகம்
தமிழக தலைமை செயலாளர் சண்முகம்

தொடர்ந்து, ``ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை அனைத்து மாநிலங்களும் கொள்முதல் செய்ய வேண்டாம் மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு முன்பாகவே தமிழக அரசு 1 லட்சம் கிட்கள் வாங்க சீனாவிடம் ஆர்டர் செய்தது. முதல்வர்களுடனான ஆலோசனையின் போது ரேபிட் டெஸ்ட் கிட்கள் இந்தியாவுக்குப் பெறும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். கூடுதலாக 50 ஆயிரம் கருவிகளை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம். மொத்தமாக 4 லட்சம் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் குறைந்த அளவிலான நிறுவனங்கள் மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்களை தயாரிக்கின்றன. தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிவிட்டது. நாம் முன்னரே ஆர்டர்களைச் செய்துவிட்டதால் முதற்கட்டமாக 50 ஆயிரம் கருவிகளையும் அடுத்த கட்டமாக 50 ஆயிரம் கருவிகளையும் அனுப்புவதாக சீனா உறுதியளித்திருக்கிறது” என்றார்.

இன்று, தேதி ஏப்ரல் 13. இன்று வரையிலும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்த நேரத்தில் கொரோனா தடுப்புக்கு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த தீர்வை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.... ``டெஸ்ட்.. டெஸ்ட்... டெஸ்ட்!” என்பதே அது!

`டெஸ்ட், டெஸ்ட், டெஸ்ட்!' - உலக நாடுகளை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
அடுத்த கட்டுரைக்கு