Election bannerElection banner
Published:Updated:

ஒரு மாத களப்பணியில் வாக்கு வித்தியாசத்தைக் குறைத்த திமுக-தொண்டாமுத்தூர் முடிவுகள் உணர்த்துவது என்ன?

வேலுமணி
வேலுமணி

41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது எப்படிக் கடுமையான போட்டியாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். ஆனால்...

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் மாநிலத்திலேயே 3-வது பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அமைச்சர், எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று கட்சியிலும் ஆட்சியிலும் பவர்ஃபுல்லாக இருந்தாலும், இந்த சட்டசபைத் தேர்தல் அவருக்கு எளிதாக அமைந்துவிடவில்லை.

வேலுமணி
வேலுமணி

வேலுமணிக்கும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நடக்கும் அரசியல் மல்லுக்கட்டு அனைவரும் அறிந்ததே. அதற்காக, வேலுமணியை வீழ்த்த சிறப்பு வியூகம் அமைத்து, காங்கேயத்திலிருந்து கார்த்திகேய சிவசேனாபதியை, தொண்டாமுத்தூரில் இறக்கினார்.

வேலுமணி ஸ்கெட்ச்.. கோவை மீண்டும் அதிமுக வசமானது எப்படி?

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க நேரடியாகக் களமிறங்குவது இதுதான் முதன்முறை. தேர்தல் அறிவித்த வேகத்தில் தி.மு.க-வினரும், கார்த்திகேய சிவசேனாபதியும் வேலுமணியை `ஊழல்மணி’ என விமர்சித்து இறங்கியடித்துக்கொண்டிருந்தனர். எளிதில் வென்றுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த வேலுமணிக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.

வேலுமணி
வேலுமணி

தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணி 1,23,538 வாக்குகளும், கார்த்திகேய சிவசேனாபதி 81,829 வாக்குகளும் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 41,709 வாக்குகள் வித்தியாசத்தில் வேலுமணி வென்றுள்ளார்.

41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது எப்படிக் கடுமையான போட்டியாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். ஆனால், கடந்த தேர்தல்களையும், அரசியல் சூழ்நிலையும் வைத்து கணக்கிட்டால், இது தி.மு.க-வுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொடுத்திருப்பது தெரியவரும். 2011 சட்டசபைத் தேர்தலில் வேலுமணி 53,203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

வேலுமணி
வேலுமணி

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 46,683 வாக்குகள் மட்டுமே பெற்றார். 2016 சட்டசபைத் தேர்தலில் வேலுமணி 64,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ம.ம.க வேட்பாளர் சையது 45,478 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஆனால். நேரடியாகப் போட்டியிட்ட பிறகு தி.மு.க-வின் வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இங்கிருக்கும் தி.மு.க-வினர் ஆற்றிய களப்பணியே இதற்குக் காரணம் என்று சொன்னால் உடன்பிறப்புகளே நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தி.மு.க இங்கு பலவீனமாக இருப்பதே உண்மை. தேர்தல் நேரத்தில் ஆற்றிய களப்பணிதான் இதற்கு முக்கியக் காரணம்.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

மக்களுக்கும், தி.மு.க-வுக்குமான இடைவெளி என்பது, இங்கு மக்களுக்கும் அ.தி.மு.க-வுக்குமான இடைவெளியைவிட அதிகம். இங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் வேலுமணியாலும், அ.தி.மு.க-வினராலும் ஏதாவது வகையில் பயனடைந்தவர்கள் ஏராளம்.

``என்னதான் ஊழல் பண்ணிருந்தாலும், வேலுமணி தொகுதியை நல்லாதான் வெச்சுருக்கார்” எனப் பெரும்பாலான உடன்பிறப்புகளே அவரது பணிகளுக்கு சான்றிதழ் கொடுப்பார்கள். வடிவேலம்பாளையம் பகுதியிலுள்ள, 1 ரூபாய் இட்லி கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமம் வீடு கட்டிக் கொடுக்கிறது. அதே பகுதியில் வேலுமணியின் நல்லறம் அறக்கட்டளை, சமீபத்தில் கமலா பாட்டிக்கு இடம் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

மகளுடன் வேலுமணி
மகளுடன் வேலுமணி

``நம்ம தொகுதியில யாரும் ஸ்கோர் பண்ணக் கூடாது” என்பதில் வேலுமணி மிகவும் உறுதியாகவே இருப்பார். தேவராயபுரம் பகுதியில் ஸ்டாலின் கலந்துகொண்ட கிராமசபைக் கூட்டமே அதற்கு உதாரணம்.

உண்மையில், வேலுமணியை எதிர்த்து போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாபதியின் பெயர் கிராமப்புறங்களில் பலருக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில் தி.மு.க தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் பூச்சி முருகன், டாக்டர் கோகுல் ஆகியோர் புதுப்பாய்ச்சல் கொடுத்தனர். கார்த்திகேய சிவசேனாபதியின் தைரியமான பேச்சும் ஊக்கம் கொடுத்தது.

வேலுமணி
வேலுமணி

அதனால், களப்பணிகளில் தி.மு.க-வினர் ஓரளவுக்கு வேகம் காட்டினர். இதையடுத்து, சிறுபான்மை வாக்குக்காக பா.ஜ.க-வினரை புறக்கணித்தது, வாரிசுகளை இறக்கி பிரசாரம் செய்தது என இதுவரை கண்டிராத வேலுமணியைப் பார்க்க முடிந்தது.

வேலுமணியை எதிர்த்து ஒரு மாதக் களப் பணியில் 81,000 வாக்குகள் பெற முடியும் என்றால், மக்களுடன் மக்களாக இருந்து ஆண்டுக்கணக்கில் களப்பணியாற்றினால் வெற்றியை இன்னும் நெருங்க முடியும் என்பதையே தொண்டாமுத்தூர் கள யதார்த்தம் உணர்த்துகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு