Published:Updated:

`எங்க நாலி மலையைக் காப்பாத்துங்க!' - கண்ணீர்விடும் ஆண்டிபட்டி கிராம மக்கள்

நாலி மலையில் வெடி வைக்கும் காட்சி.
நாலி மலையில் வெடி வைக்கும் காட்சி.

`நாங்க சாமியா பாத்த மலையை கல் குவாரிக்காக டெண்டர் விட்டாங்க'.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, நாலி மலை. சிறிய குன்றாகக் காட்சியளிக்கும் நாலி மலையின் ஒரு பகுதியை கல்குவாரிக்கு டெண்டர் விட்டது மாவட்ட நிர்வாகம். தொடர்ந்து, வெடி மருந்துகளைப் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்பட்டன. இதனால், சுற்றியுள்ள கிராம மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் நாலி மலை தண்ணீர்ச்சுனை வற்றியது. அதன் விளைவாக நிலத்தடி நீர் குறைந்துபோனது.

ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி

விவசாயத்திற்கும் குடிநீருக்கும் சிரமப்படும் டி.சுப்புலாபுரம் கிராம மக்கள், கல்குவாரியை மூட வலியுறுத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் டெண்டர் விடப்பட்டு, நாலி மலையின் மற்றொரு பகுதி வெடிமருந்துகளால் உடைத்து எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

`2 வருஷமா இல்லை; இப்போ வரப்போகுதாம்!' - டாஸ்மாக் கடைக்கு எதிராகக் கொதிக்கும் ஆண்டிபட்டி மக்கள்

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராதா, ``நாலி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எங்கள் கிராமத்தில் சுமார் 5,000 பேர் வசிக்கிறோம். மலை உச்சியில் இருக்கும் மல்லேஸ்வரர் சுவாமி கோயில்தான் எங்களுக்கு குலசாமி. நல்லது கெட்டது எதுனாலும், அங்கதான் முடிவு எடுப்போம். திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, அணைக்கரைப்பட்டி, பெருமாள்பட்டி, மூணாண்டிபட்டி, புலிமான்கோம்பை, ராஜகோபாலன்பட்டி ஆகிய ஊர் மக்கள் சேர்ந்து, வருஷா வருஷம் நாலி மலை சாமிக்கு பெரிய திருவிழா எடுப்போம். நாங்க சாமியா பாத்த மலையை கல் குவாரிக்காக டெண்டர் விட்டுட்டாங்க. மலையோட ஒரு பகுதியை வெட்டி எடுத்த மாதிரி, வெடிவச்சு உடைச்சு எடுத்துட்டாங்க. இதனால, மலையில் இருந்த சுயம்புசுனையில் நீர் வற்றிப்போச்சு.

நாலி மலை வெடி வைத்து உடைக்கப்படும் காட்சியும்.
நாலி மலை வெடி வைத்து உடைக்கப்படும் காட்சியும்.

அதேபோல, அடிவார கிராமங்களில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் போனது. குடிக்கவும் விவசாயத்துக்கும், ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் இல்லை. இப்போ ஒரு மாதமா மீண்டும் வெடிவச்சு மலையை உடைக்கிறாங்க. இதனால, காற்று மாசுபாடு ஏற்படுவது மட்டுமில்லாமல், மலையிலிருந்து பாறைகள் உருண்டு கிராமத்திற்குள் வர வாய்ப்புள்ளது. மலை அடிவாரத்தில்தான் அரசுப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் எல்லாம் இருக்கு. எனவே, நாலி மலையில் இனியும் கல் உடைக்கக் கூடாது. அப்போதான் நாங்க இங்க பிழைக்க முடியும். எங்களையும் நாலி மலையையும் காப்பாத்துங்க'' என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

`மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் தடுத்துநிறுத்தப்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள்!'-தேனி மலைக்கிராம சர்ச்சை

இதுகுறித்து தேனி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ``இதுதொடர்பாக கலெக்டரிடம் ஊர் பொதுமக்கள் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். விரைவில், நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு