Published:Updated:

5 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம்! - குஷியில் மலைக் கிராம மக்கள்

எம்.வடிவேல்

விகடன் செய்தி எதிரொலியால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்திநத்தம் மலைக் கிராம குழந்தைகளுக்குப் பாதுகாப்பான அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையம்
அங்கன்வாடி மையம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், அதிகளவு மலைக் கிராமங்களைக் கொண்ட பகுதி. இங்கு வாழும் மக்கள் வனத்தையும், விவசாயத்தையுமே சார்ந்து வாழ்கின்றனர். இங்குள்ள அத்திநத்தம் மலைக் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்ச ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, அங்கன்வாடி மையமும் முடிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் இதுநாள் வரை பூட்டியே கிடந்தது. இது குறித்த செய்தி ஆகஸ்ட் 15-ம் தேதி விகடன் இணையதளத்தில் `பில் இன்னும் பாஸ் ஆகல' - 5 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி.. இது கிருஷ்ணகிரி அவலம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம்
திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம்

இது தொடர்பாக, தளி ஒன்றிய ஆணையாளர் சோபாராணியிடம் பேசியபோது, ``அந்த மலைப் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டியதே நல்ல விஷயம். ஒப்பந்த தாரருக்குக் கொடுக்க வேண்டிய பில் தொகையில் பிரச்னை ஏற்பட்டு பில் நிலுவையில் இருக்கு. அதை இதற்கு முன்பு இருந்த அதிகாரிகள் சரி செய்து கொடுத்திருக்கவேண்டும். ஆனால் அதை அவர்கள் ஏனோ செய்யவில்லை. இன்னும் ஒரே வாரத்தில், ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை கொடுத்துவிட்டு கட்டடத்தை சமூக நலத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம்'' என உறுதி அளித்து இருந்தார்.

அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் உள்ள தகவல் மாவட்ட கலெக்டர் பிரபாகரின் கவனத்திற்கும் சென்றதும், அங்கன்வாடி கட்டடத்திலிருந்த பிரச்னையை உடனடியாக முடித்து உடனே திறக்கும்படி தளி பி.டி.ஓ சோபாராணிக்கு உத்தரவிடவே, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சமூக நலத்துறை மூலமாக, பிடிஓ சோபாராணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தின் சாவியை அத்திநத்தம் அங்கன்வாடி அமைப்பாளர் சிவரத்தினம்மாவிடம் வழங்கியுள்ளனர்.

`பில் இன்னும் பாஸ் ஆகல' - 5 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி.. இது கிருஷ்ணகிரி அவலம்!

விகடன் செய்தி எதிரொலியால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்திநத்தம் மலைக் கிராம குழந்தைகளுக்குப் பாதுகாப்பான அங்கன்வாடி மையம் கிடைத்துள்ளதாக அத்திநத்தம் கிராம மக்கள், தங்கள் மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.