Published:Updated:

``ஃபேக் ஐடி, அந்த கட்சி, போலீஸ் புகார்!" - அனிதா சம்பத்

அனிதா சம்பத்
அனிதா சம்பத்

` `திரெளபதி' படத்தை நான் பார்க்கவே இல்ல. ஆனா, இந்தப் படத்தைப் பத்திப் பாராட்டி எழுதி போஸ்ட் போட்டிருக்காங்க.

டிஜிட்டல் இந்தியாவில் சமூகவலைதளங்களோட வளர்ச்சி அபாரமானது. ஒரு செய்தியைப் பரப்புவதற்கு சமூகவலைதளம் முக்கியமான காரணியா இருக்கு. ஆனா, இது வழியாக நல்லதைவிட கெட்டதுதான் அதிகம் பரவுது. குறிப்பா, இந்த சமூகவலை தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் வழியாக சினிமா பிரபலங்கள்தான் அதிகமா பாதிப்புக்குள்ளாகுறாங்க. அவர்கள் பெயரில் உலாவரும் பேக் ஐடிக்களின் மூலமாகத் தவறான, அவதூறான செய்திகள் வேகமா பரவ ஆரம்பிச்சிடுது. இதைக் கண்டிக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்தையும் அதே சமூகவலைதளங்கள் வாயிலாகத்தான் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கு. தற்போது ஃபேக் ஐடி மூலமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இவரிடம் பேசியதிலிருந்து,

``ஃபேக் ஐடிக்களுடைய தொல்லை தாங்கவே முடியல. அவங்களோட சொந்தக் கருத்துகளை எல்லாம் என்னோட பெயர்கொண்ட ஃபேக் ஐடியில எழுதிட்டுப் போயிடுறாங்க. வெளியில இருந்து படிக்கிறவங்க அதை என்னோட சொந்தக் கருத்துனு நினைச்சிக்குறாங்க. இதனால நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கேன். பல ஃபேக் ஐடிக்களை ப்ளாக் பண்ணி வெச்சிருக்கேன். சில தவறான செய்திகளை அவங்க பரப்புறப்ப என்னோட நண்பர்கள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்புவாங்க. அதுக்கு நானும் எதாவது ரியாக்ட் பண்ணுவேன். அப்படி ரியாக்ட் பண்ணியே நான் சோர்ந்து போயிடுவேன். `திரௌபதி' படத்துக்குக் கூட என்னோட பெயர்ல சில கருத்துகள் உலா வந்தது."

அனிதா சம்பத்
அனிதா சம்பத்

``Anitha Sampath பெயர்லே ஒரு ஃபேக் ஐடி ட்விட்டர்ல இருக்கு. அது என்னோட ஒரிஜினல் ஐடி இல்ல. அந்த ஐடியைப் பயன்படுத்துற நபருக்குத் தனிப்பட்ட முறையிலே, `தவறான செய்திகளை என் பெயர்ல பரப்ப வேண்டாம்'னு மெசேஜ் பண்ணிட்டேன். இருந்தும் அந்த நபர் கேட்காம எதாவது எழுதிட்டே இருக்கார். ஆரம்பத்துல என்னோட ஃபேன் பேஜ்ஜா இருந்த அந்த ஐடியில், போகப் போகத் தவறான செய்திகளைப் பரப்ப ஆரம்பிச்சிட்டாங்க. இதனால எனக்குத்தான் கெட்ட பெயர்."

` 'திரெளபதி' படத்தை நான் பார்க்கவே இல்ல. ஆனா, இந்தப் படத்தைப் பத்திப் பாராட்டி எழுதி போஸ்ட் போட்டிருக்காங்க. இதை உண்மைனு நினைச்சிட்டுப் படத்தோட இயக்குநர் மோகன் நன்றி சொல்லியிருந்தார். இது எனக்குத் தப்பா இருந்தது. அதனால ட்விட்டர்ல என்னோட ஒரிஜினல் ஐடில இருந்து மோகன் சாரை டேக் பண்ணி, `அந்தக் கருத்து என்னோடது இல்லை'னு சொல்லியிருந்தேன். பொதுவா, எனக்கு எந்தப் படம் பத்தியும் விமர்சனம் பண்றதுல விருப்பம் இல்ல. இன்ஸ்டாவுல, ட்விட்டரில என் பெயர்ல இருக்குற இந்த ஐடி போலினு எழுதுனேன்."

Twitter
Twitter

``சொல்லப்போனா அந்த ஃபேக் ஐடிக்கு 50,000 ஃபாலோயர்கள் இருக்காங்க. என்னோட ட்விட்டர் பக்கத்துக்கு வெறும் 12,000 பேர் மட்டும்தான் இருக்காங்க. இந்த ஃபேக் ஐடி, குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்னு நினைக்கிறேன். ஏன்னா, அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஆதரவான போஸ்ட்டுகளைப் போட்டுட்டு வர்றார். கூடிய சீக்கிரம் போலீஸ்கிட்ட இது சம்பந்தமான புகாரைக் கொடுக்கலாம்னு இருக்கேன்'' என்றார் அனிதா சம்பத்.

அடுத்த கட்டுரைக்கு