Published:Updated:

`13 பேருக்கு நினைவு மண்டபம்; 2 ஆண்டு கோரிக்கை!' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர்

மே 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஆலை மூடி சீல் வைக்கப்பட்டதுதான் இப்போராட்டத்தில் ரத்தம் சிந்தியவர்களின் வெற்றி.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் நினைவாக நினைவு மண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம், நீர், காற்று, ஆகாயம், செடிகள் என அனைத்தையும் நஞ்சாக்கிய நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ல் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த 13 பேர்
உயிரிழந்த 13 பேர்

அப்போராட்டங்களின் 100-வது நாளான மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக போராளிகளுடன் குழந்தைகள், பெண்கள் பேரணியாகச் சென்றோம். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏவல்துறையான காவல்துறையின் மனிதாபிமானமற்ற இப்படுபாதகச் செயலை எவரும் மறந்துவிட முடியாது. மே 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஆலை மூடி சீல் வைக்கப்பட்டதுதான் இப்போராட்டத்தில் ரத்தம் சிந்தியவர்களின் வெற்றி.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

நீதிமன்ற விவாதங்களில் கூட தூத்துக்குடியில் நிலம், காற்று என அனைத்து உயிர்ச்சூழல்களும் ஸ்டெர்லைட் ஆலையால் நஞ்சாகிப் போனதையும் ஸ்டெர்லைட் ஆலையின் சட்ட விதிமுறை மீறல்களையும் உரிய ஆவணங்களுடன் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்தே, இந்த ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் நியாயமனது என்பது தெளிவாகிறது.

உயிர்ச்சூழல் காக்க உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடியின் மையப்பகுதியில் நினைவு மண்டபம் அமைத்திட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் ஆணை பிறப்பித்திட வேண்டும். எங்களின் இக்கோரிக்கையை கடந்த 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இல்லாவிட்டால் நினைவு மண்டபம் அமைத்திட குறைந்தபட்சம் நிலத்தையாவது ஒதுக்கித் தர வேண்டும். எங்களின் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தால் மிகப்பெரிய அளவில் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர்
ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர்

தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்கள், விழாக்கள் என்ற பெயரில் தூத்துக்குடி கிராமப்புற மக்களின் ஏழ்மைநிலையைப் பயன்படுத்தி பணத்தாலும், பொருளாலும் ஊழல்மயப்படுத்தும் சட்டவிரோத செயல்பாட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு