Published:Updated:

`வேதிப்பூச்சு கொண்ட பழங்காலப் பானைகள்!’ - தேனி அருகே விவசாய நிலத்தில் ஆச்சர்யம்

கண்டெடுக்கப்பட்ட பானைகள்
கண்டெடுக்கப்பட்ட பானைகள்

தேனி மாவட்டத்தில் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தில், விவசாய நிலத்தினை சமன் செய்த போது, பழங்கால பானைகள் கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குள்ளப்பகவுண்டன்பட்டி கிராம மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழில். அங்கு வசிக்கும் அம்மாவாசி என்பவர், இரண்டு தினங்களுக்கு முன்னர், தனது மகள் பிரவீணா மற்றும் உறவினர்கள் உதவியோடு விவசாய தன்னுடைய நிலத்தினை சரி செய்துள்ளார். அப்போது, நிலத்தின் அடியில் பானைகள் இருந்துள்ளன. அளவில் வித்தியாசமான பானைகளாக இருந்ததால், தேனியில் உள்ள வைகை தொல்லியல் கழக அமைப்பாளர் மோகன் குமாரமங்கலத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், இன்று நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

பழங்கால பானைகளுடன், நில உரிமையாளர்கள்.
பழங்கால பானைகளுடன், நில உரிமையாளர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மோகன் குமாரமங்கலம், ``பெருமாள்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள மட்டப்பாறை என்ற இடம் தான் அது. அங்கே முதுமக்கள் தாழியும், அதன் உள்ளே எலும்புகள், ஈமைக்காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் கிடைத்துள்ளன. அதில், சிறியது முதல் பெரியது வரையிலான பானைகளும் உள்ளன. இது, இறந்தவர்கள் பயன்படுத்திய பானைகள்.

இப்படி, சுமார் 10 ஏக்கருக்கு மேல் இந்த ஈமைக்காடு விரிந்து இருக்கலாம். இதில் ஆச்சர்யமான விசயம் என்னவென்றால், கிடைத்துள்ள பானைகள் வேதிப்பூச்சு கொண்டவையாக உள்ளன. இங்கிருந்து ஒரு கிலோமீட்டரில் முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் ஒத்தவீட்டுக் களம் என்ற இடத்தில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள் கிடைத்துள்ளன.

பிரசவத்திற்கு வந்த பெண்ணின் கருப்பையில் பஞ்சு... அரசு மருத்துவர்களின் அலட்சியம்?! -தேனி அதிர்ச்சி

அம்மக்களின் ஈமைக்காடாக இந்த இடம் இருக்கலாம். ஆய்வு செய்தால் கீழடியைப் போன்ற ஒரு சங்க கால நகரத்தினை கண்டுபிடிக்க முடியும். பாண்டிய நாட்டிற்கும், சேர நாட்டிற்குமான வணிகப் போக்குவரத்தின் மிக முக்கிய நகரமாக கூட அது இருக்கலாம். எனவே, தொல்லியல்துறை, இப்பகுதியினை ஆய்வு செய்ய வேண்டும்.” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு