Published:Updated:

`வரி கட்டலைன்னா இதுதான் கதி! ' - அதிர்ச்சி கொடுத்த அரக்கோணம் நகராட்சி

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

சொத்துவரி பாக்கி வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள், கட்டடங்களின் முன்பு அரக்கோணம் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளைக் கொட்டி வரிவசூலில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமண மண்டபம் முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி
திருமண மண்டபம் முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி

தமிழகத்தில் 2016 அக்டோபரில் நடத்தியிருக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறித் தேர்தல் ஆணையம் தள்ளிப்போட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பில் கடிவாளம்போடுவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாததால், அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். 

அரக்கோணம் நகராட்சி
அரக்கோணம் நகராட்சி

அனைத்து வரிகளும் நூறு சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான சொத்துவரியை இரு மடங்காக உயர்த்தி, மக்கள் தலையில் பெரிய பாரத்தை ஏற்றிவைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். தவிர, நகராட்சி கடைகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

`ஓனரே வந்தாலும் காரைக் கண்டுபிடிக்க முடியாது!' - மெக்கானிக் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

இதனால், கட்டட உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலர், சில ஆண்டுகளாக சொத்துவரியை பாக்கி வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் சில நாள்கள் கெடுவும் விதித்தனர். `வரி கட்டத் தவறினால், குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்; கட்டடம் சீல் வைக்கப்படும்' என்றும் எச்சரிக்கை விடுத்தனர். வேறு வழியில்லாமல் பலரும் வரி செலுத்தினார்கள். 

இது வழக்கமான ஒன்றுதான். பெரிதாக்கவேண்டாம். குப்பைத் தொட்டிகளை எடுத்துவிட்டோம்.
நகராட்சி ஆணையாளர் முருகேசன்

சிலர் வரி செலுத்தாமல் காலதாமதம் செய்துவருகிறார்கள். இந்த நிலையில், ரூ.50,000-லிருந்து லட்சக்கணக்கில் வரிபாக்கி வைத்துள்ள வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் முன்பு குப்பைத் தொட்டிகளை வைத்து அரக்கோணம் நகராட்சி ஊழியர்கள் அதிரடி வரிவசூலில் இறங்கியிருக்கிறார்கள்.

வணிக நிறுவனங்களுக்கு முன்பு குப்பைகளைக் கொட்டுவதோடு, `வரி பாக்கியை உடனடியாக செலுத்தாவிட்டால் குப்பைத் தொட்டியை நிரந்தரமாக இங்கேயே வைத்துவிடுவோம்' என்று கட்டட உரிமையாளர்களை மிரட்டும் தொனியில் அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியிலும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

வணிக நிறுவனம் முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி
வணிக நிறுவனம் முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி

அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் முருகேசனிடம் பேசினோம். ``சார், இது வழக்கமான ஒன்றுதான். பெரிதாக்கவேண்டாம். வரிபாக்கியை கொடுப்பதாகக் கட்டட உரிமையாளர்கள் கூறிவிட்டதால் நாங்கள் எங்கெங்கெல்லாம் குப்பைத் தொட்டிகளை வைத்தோமோ, அவற்றையெல்லாம் உடனடியாக எடுத்துவிட்டோம்'' என்றார் இயல்பாக.