Published:Updated:

`குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்!’ - நாற்று நட்ட அரக்கோணம் மக்கள்

அரக்கோணத்தில், குண்டும் குழியுமாக மாறிய சாலைகளையும் வீதிகளையும் சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நட்ட அரக்கோணம் மக்கள்
நாற்று நட்ட அரக்கோணம் மக்கள்

அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள், மெதுவாக நடைபெற்றுவருகின்றன. குடியிருப்புப் பகுதிகள் பலவற்றில் பைப் லைன் பதிக்கத் தோண்டிய பள்ளங்களை அரைகுறையாக மூடியிருக்கிறார்கள்.

குண்டும் குழியுமாக மாறிய சாலை
குண்டும் குழியுமாக மாறிய சாலை

இதனால், அந்தப் பகுதி குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியிருக்கின்றன. தற்போது, பெய்துவரும் மழைக்குப் பள்ளமான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மூடப்படாத பள்ளங்களில் மழை நீர் நிரம்பியிருப்பதே தெரியவில்லை. புதைகுழியைப் போல் அபாயகரமாக மாறியிருக்கின்றன.

நடந்துசெல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அந்தப் பள்ளங்களில் விழுந்து காயமடைகிறார்கள். தெருக்களில் குழந்தைகளை விடுவதற்கே பெற்றோர் அச்சப்படுகிறார்கள். இந்தப் பள்ளங்களை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

தண்ணீரை அப்புறப்படுத்தி, விரைவில் சிமென்ட் சாலை போட்டுத்தரப்படும்.
நகராட்சி ஆணையர் முருகேசன்

இந்த நிலையில், நேருஜி நகர் 8-வது தெருவில் வசிக்கும் பொதுமக்கள் சாலையைச் சீரமைக்கக்கோரி சகதி தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த நகராட்சி ஆணையர் முருகேசன், தாசில்தார் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பொதுமக்களை சமரசம் செய்தனர். 

அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். ``பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டப்பட்ட ஒவ்வொரு தெருவிலும் படிப்படியாக சிமெண்ட் சாலை போடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் நேருஜி நகருக்கும் சிமெண்ட் சாலை போட்டுத்தரப்படும். 

நாற்று நட்ட மக்கள்
நாற்று நட்ட மக்கள்

தற்போது, தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்துசென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.