Published:Updated:

ஆரணி: காதலிக்குச் சிற்றரசன் கட்டிய கண்ணாடி மாளிகை... வனத்துறை பாதுகாக்க முடிவு!

கண்ணாடி மாளிகை
கண்ணாடி மாளிகை

ஆரணியில், 200 ஆண்டுகளுக்கு முன் தன் காதலிக்காக ஒரு சிற்றரசன் எழுப்பிய கண்ணாடி மாளிகையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது வனத்துறை.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது கண்ணாடி மாளிகை. 200 ஆண்டுகளுக்கு முன் ஆரணியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த ஜாகிர் திருமலை ராவ் என்ற ஜமீன் அல்லது குறுநில மன்னன், தன் காதலிக்காக ஐரோப்பிய கட்டட கலையில், இந்த மாளிகையை கலை நயத்துடன் கட்டியிருப்பதாகச் சொல்லி சிலிர்க்க வைக்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள்.

மாளிகையின் உறுதியான தூண்கள்
மாளிகையின் உறுதியான தூண்கள்

தற்போது, கண்ணாடி மாளிகை கட்டடம் சிதிலமடைந்து, நிசப்தமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, வாசற்கால்கள், கண்ணாடிகள், இரும்புச் சட்டங்கள் என மாளிகையிலிருந்து என்னனென்னவெல்லாம் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியுமோ, அவற்றையெல்லாம் திருடிச் சென்றிருக்கிறார்கள் மர்ம நபர்கள். இந்த நிலையில், கண்ணாடி மாளிகையை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது ஆரணி சரக வனத்துறை.

மாளிகையைச் சுற்றிலும் வேலி அமைத்து, பாதுகாக்கப்பட்ட இடமாகவும் அறிவித்திருக்கிறார்கள் வன அதிகாரிகள். இதோடு கடந்துவிடாமல், மாளிகையைப் புனரமைத்து அதன் வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள், அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய ஆரணியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் விஜயன், ‘‘மாளிகையைக் கட்டிய ஜாகிர்தாரின் வாரிசுகள் இன்றும் பெங்களூரு மற்றும் ஜார்க்கண்ட்டில் வசிக்கிறார்கள். மாளிகை உருவாக்கப்பட்ட விதம் சுவாரஸ்யமூட்டும்.

கண்ணாடி மாளிகை
கண்ணாடி மாளிகை

திருமலை ராவ் ஒருமுறை இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, பிரென்ச் நாட்டுப் பெண் ஒருவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியர், இங்கிலாந்திலிருந்து அவரை அழைத்து வந்து பெற்றோர் முன் நிறுத்தியிருக்கிறார். பெற்றோரின் சம்மதம் கிடைக்காததால், ஊருக்கு வெளியில் இந்த இடத்தில் ஐரோப்பிய நாட்டின் கட்டட கலையில் பிரமாண்ட மாளிகையை எழுப்பி காதலியுடன் வாழ்ந்திருக்கிறார் திருமலை ராவ். காலப்போக்கில், அவர்கள் மறைந்தப் பின் மாளிகையில் யாருமே வசிக்கவில்லை. தற்சமயம், வனத்துறை அதிகாரிகள்தான் கண்ணாடி மாளிகையைப் பாதுகாக்க முனைப்புக் காட்டியிருக்கிறார்கள்’’ என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு