Published:Updated:

`அவங்களுக்கு உணவு கொடுக்க முடியலைங்கிற வருத்தம் இருந்துச்சு!’ - பிறந்தநாளில் நெகிழவைத்த சிறுவன்

 பிறந்தநாளில் பிஸ்கட் கொடுத்த சிறுவன்
பிறந்தநாளில் பிஸ்கட் கொடுத்த சிறுவன்

``என்னைத் தெரியுமா? நான் அறந்தாங்கி டிஎஸ்பின்னு சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டு டிஎஸ்பி சார் என்கிட்ட பிஸ்கட்டை வாங்கிக்கிட்டு வாழ்த்திட்டு பிறந்த நாள் பரிசாகப் பணம் வச்சுக்கொடுத்தாரு, ரொம்ப மகிழ்ச்சியோட வாங்கிக்கிட்டேன்''

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள், அரசுப்பணியாளர்கள் எனப் பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலரும் சரியான நேரத்திற்கு உணவின்றித் தங்களது பணிகளை விடாமல் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களுடன் தனது இந்தப் பிறந்த நாளைக் கொண்டாட நினைத்த புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியைச் சேர்ந்த வர்கீஸ் என்ற சிறுவன், முகக் கவசம் அணிந்து பாதுகாப்புடன் அறந்தாங்கியில் தடுப்புப் பணி மேற்கொள்ளும் அனைவரையும் நேரடியாகப் பார்த்து பிஸ்கட், வாட்டர் பாட்டில்கள் கொடுத்து அசத்தினார்.

 பிறந்தநாளில் பிஸ்கட் கொடுத்த சிறுவன்
பிறந்தநாளில் பிஸ்கட் கொடுத்த சிறுவன்

அதோடு, சாலையோரத்தில், ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கும் பிஸ்கட்களைக் கொடுத்து அவர்களையும் நெகிழ வைத்தார். சிறுவனின் இந்தச் செயலை அங்கிருந்தவர்கள் பலரும் பாராட்டினர்.

இதுபற்றிச் சிறுவன் வர்கீஸிடம் கேட்டபோது, ``ரொம்ப வருஷத்துக்கு அப்புறம்தான் நான் பொறந்ததாகவும், தவமிருந்து என்னைப் பெத்ததாகவும் அம்மா சொல்லுவாங்க. அதனால,ரெண்டு பேருமே நான் என்ன கேட்டாலும், மறுப்பே சொல்லாம வாங்கிக் கொடுத்திடுவாங்க. எதிர்பார்த்ததை விட ரொம்பவே செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் என்னோட பிறந்தநாள் அன்னைக்கு ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் காப்பகத்திற்குப் போய் என் கையால உணவு கொடுக்க வச்சிடுவாரு அப்பா.

இந்த வருஷம் காப்பகத்தில் யாரும் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்குக் கொடுக்கமுடியலைங்கிற வருத்தம் இருந்துச்சு. அப்பதான், போலீஸ்காரங்க, ரோட்டைச் சுத்தப்படுத்திறவங்க, டிவியில கொரோனாவைத் தடுக்கிறதுக்குப் போராடுவதைப் பார்த்தேன். இந்த வருஷம் அவங்களுக்கு நம்மால் முடிஞ்சதைக் கொடுக்கலாம்னு அப்பாக்கிட்ட சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டாரு. சாப்பாடு கொடுக்கலாம்னுதான் நெனச்சோம். இந்த நேரத்துல செஞ்சு எல்லார்கிட்டயும் சேர்க்கிறது கஷ்டம்னு தெரிஞ்சிச்சு. உடனே எல்லாருக்கும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்திடலாம்னு முடிவு பணி பிஸ்கட் பண்டல்களை வாங்கிக்கிட்டு, அறந்தாங்கி பகுதியில் இருந்த போலீஸ்காரங்க, ஆபீசர்ங்க, தூய்மைப் பணியாளருங்க, ஆதரவற்றவங்க என எல்லாருக்கும் கொடுத்தேன்.

 பிறந்தநாளில் பிஸ்கட் கொடுத்த சிறுவன்
பிறந்தநாளில் பிஸ்கட் கொடுத்த சிறுவன்

அவங்களும் பிஸ்கட் வாங்கிக்கிட்டு என்னை ரொம்பவே பாராட்டினாங்க. சிலர் வாழ்த்தினாங்க. `என்னைத் தெரியுமா? நான் அறந்தாங்கி டிஎஸ்பி’ன்னு சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டு டிஎஸ்பி சார் என்கிட்ட பிஸ்கட்டை வாங்கிக்கிட்டு வாழ்த்திட்டு பிறந்த நாள் பரிசாகப் பணம் வச்சுக்கொடுத்தாரு, ரொம்ப மகிழ்ச்சியோட வாங்கிக்கிட்டேன். இந்த வருஷம் ஆதரவற்றோர்களுக்குச் சாப்பாடு கொடுக்க முடியலைங்கிற கவலை நேத்து வரைக்கும் இருந்துச்சு. இன்னைக்கு அந்தக் கவலை எல்லாம் பறந்து போயிருச்சு" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு