Published:Updated:

``நிலத்தடி நீர்மட்டம் ரொம்ப கீழபோயிடுச்சு!’’ - அறந்தாங்கி விவசாயியின் மனமாற்றம் #MyVikatan

``இதுவரை நான் தெரியாமல் இந்தத் தவற்றைச் செய்துட்டேன்னு அதிகாரிகளிடமும் ஊர்க்காரர்களிடமும் சொன்னேன்’’

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் பாஸ்கரன்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் பாஸ்கரன்

ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஒரு சென்ட் நிலத்தைக்கூட மீண்டும் மீட்டெடுப்பது என்பது அரசுக்கும் மக்களுக்கும் பெரும் சவால் நிறைந்த பணி. ஆனால், 15 ஆண்டுக்காலமாகக் கண்மாய்க்குள் ஆக்கிரமிப்பு செய்திருந்த ஏழு ஏக்கர் நிலத்தை எவ்வித எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவிக்காமல் தானாகவே முன்வந்து ஒப்படைத்து இருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராம விவசாயி ஆர்.எம்.பாஸ்கரன்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் பாஸ்கரன்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் பாஸ்கரன்

இவரின் மனமாற்றம் விவசாயிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகவல் அறிந்து அவரிடம் பேசினேன். அப்போது அவர், ``நான் தெரிஞ்சோ தெரியாமலோ எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்கிற வேம்பங்குடி கண்மாயில் 7 ஏக்கர் நிலம் என்னோட ஆக்கிரமிப்புல இருந்துச்சு. அதுலே 15 வருஷமா நெல், கரும்பு, மல்லிகைப் பூ விவசாயம் சாகுபடி பண்ணியிருக்கேன். என்னை மாதிரி இன்னும் கொஞ்சபேர் சேர்த்து மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாயை ஆக்கிரமிச்சு விவசாயம் செஞ்சு வந்தோம். குடிமராமத்து மூலமா கண்மாயைத் தூர்வாரணும்னு அளவைப் பணிக்கு வந்தாங்க. நான் உடனே முன்வந்து என்னோட ஆக்கிரமிப்பில 7 ஏக்கர் இருக்கு. அதைத் தாரளமா எடுத்துக்குங்க. இதுவரை நான் தெரியாமல் இந்தத் தவற்றைச் செய்துட்டேன்னு அதிகாரிகளிடமும் ஊர்க்காரர்களிடமும் சொன்னேன்.

இதுக்குப் பிறகுதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு. நீர்நிலைகளை ஆக்கிரமிக்கிறது பெரும் தவறுனு புரிஞ்சுக்கிட்டேன். இந்த மாதிரி தவறுகளால்தான் எங்கள் பகுதியிலே நிலத்தடி நீர்மட்டம் 80 அடியிலே இருந்து 250 அடிக்கு கீழே போயிடுச்சு. இந்தக் கொடுமை இனி தொடரக் கூடாது. அதுக்கு நானும் ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துட்டேன். இவ்வளவு வருசமா இந்த தவற்றை செஞ்சிருக்கிறோமே அப்படிங்கிற குற்ற உணர்ச்சி இன்னும் என்கிட்டே இருக்கு. இதேமாதிரி நீர் நிலைகளை யார் ஆக்கிரமிச்சிருந்தாலும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட விவசாயிகளும் கேட்கிறதுக்கு முன்னாடியே ஒப்படைச்சிடுங்க. நம்ம விவசாயத்தையும் நீர்நிலைகளையும் நாமதான் காப்பாத்தணும். அதுக்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் ரொம்ப அவசியம்.

என்னைப் பார்த்துட்டு ஆக்கிரமிப்பு செஞ்ச மத்த விவசாயிகளும் ஒப்படைக்க முன்வந்துட்டாங்க... விவசாயத்தை நாமதான் காப்பத்தணும்.

கண்மாய்கள் நிரம்பி நீர்மட்டம் உயர்ந்தாலே விவசாயம் செழிப்பாகிடும். எனக்கு என்னோட சொந்தக் கிராமத்துலே இருக்கிற விவசாய நிலங்களே போதும். அது நல்லபடியா விளைஞ்சு வீடு வந்து சேர்ந்தாலே எனக்குப் போதுமானது. என்னைப் பார்த்துட்டு ஆக்கிரமிப்பு செஞ்ச மத்த விவசாயிகளும் ஒப்படைக்க முன்வந்துட்டாங்க... விவசாயத்தை நாமதான் காப்பத்தணும்..." என்று மனம் உருகிப் பேசுகிறார் பாஸ்கரன்.

குடிமாரத்து மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் வேம்பங்குடி கிராம விவசாயியும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான எம். சுகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது... ``வேம்பங்குடி கிழக்கு கண்மாய் என்று சொல்லக்கூடிய பெரிய ஏரியின் மொத்தப் பரப்பு 78 ஏக்கர். இந்தக் கண்மாய் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறக்கூடியது. இந்தக் கண்மாய்க்கு மொத்தம் 153 ஆயக்கட்டுதாரர்கள் உள்ளனர். இந்தக் கண்மாய் தூர்வாரி கிட்டத்தட்ட 15 வருஷம் ஆச்சு. இப்போதான் குடிமராமத்து மூலமா 28 லட்ச ரூபாயில தூர்வார வேலை ஒதுக்கி இருக்காங்க.

இந்தத் தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கிய உடனேயே கண்மாய்க்குள் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களில் முதல் நபராக பாஸ்கரன் எனும் விவசாயி தன் வசமிருந்த 7 ஏக்கர் நிலத்தையும் ஒப்படைச்சிட்டார்.

அதே மாதிரி 3 ஏக்கர், 4 ஏக்கர், 2 ஏக்கர்னு மொத்தம் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்க முன்வந்துட்டாங்க. ஆக்கிரமிப்பை அகற்றும்போது பல இடங்களில் பலவித அசம்பாவிதங்களும் எதிர்ப்புகளும் நடக்கும். ஆனால், இங்கு எந்த விரோதப்போக்கும் இல்லாமல் அன்போடும் நட்போடும் அவங்க அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைச்சிட்டாங்க. எப்பவும்போல தாயா புள்ளைகளா இருக்கோம். இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் பாஸ்கரன்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் பாஸ்கரன்

குடிமராமத்துப் பணிக்கு நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிச்ச செய்தி கிடைச்ச உடனேயே எங்க ஊரே சந்தோஷமாயிடுச்சு. அடுத்து ஆக்கிரமிப்பும் தானாகவே முன்வந்து அகற்றி அந்த நிலங்களை ஒப்படைச்சது இன்னும் ரெட்டிப்பு சந்தோஷம். இப்போ வேலை தொடங்கிடுச்சு. மடைகள் கட்டும் பணி மும்முரமா நடக்குது. மற்ற வேலைகளும் நல்லபடியா நடக்குது. கண்மாயைத் தூர்வாரி மழை பெஞ்சு நீர் நிரம்பினாலே போதும். எங்களோட தொலைஞ்சுபோன வாழ்க்கை மறுபடியும் கிடைச்சிடும். எங்க விவசாயம் செழிச்சிடும். அதுக்கான முதல் வேலைதான் இந்த மடைகள் கட்டி கண்மாயைத் தூர்வாரும் வேலை. இந்தப் பணி ஒழுங்கா நடக்குதுனா கண்காணிக்க தினமும் அதிகாரிகள் வர்றாங்க... அதுமட்டுமல்லாம எங்க கிராமம் சார்பாகவும் 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை நியமனம் செஞ்சிருக்கோம். நான் இந்தக் குழுவின் துணைத் தலைவரா இருக்கேன். இந்தக் குழு தினமும் பணி நடைபெறும் இடங்களைக் கண்காணிக்குது. ஊர் மக்களிடம் கூட்டம் போட்டு இதபத்தி சொல்றோம். நடக்குற வேலைகள் நல்ல திருப்திகரமா இருக்கு. இனி இந்தக் கண்மாய் முழுக்க நாங்க தண்ணீயைக் கண்டுட்டா எங்க வாழ்க்கை துளிர்த்திடும். மறுபடியும் செழிப்பான பூமியாய் எங்க ஊர் மாறிடும்..." என உற்சாகமும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடனும் பேசுகிறார் சுகுமார்.

கண்மாய் நிரம்பட்டும்... அக்கிராமத்தின் கனவுகள் பலிக்கட்டும்..!

- பழ.அசோக்குமார்

``நிலத்தடி நீர்மட்டம் ரொம்ப கீழபோயிடுச்சு!’’ - அறந்தாங்கி விவசாயியின் மனமாற்றம் #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/