Published:Updated:

`ஹெல்மெட்டும் திருக்குறள் புத்தகமும்!' - அறந்தாங்கி போலீஸாரின் பாசிடிவ் முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிவந்தவர்களைநிறுத்திய, போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர்.

திறக்குறள் புத்தகம் பரிசு கொடுத்த போலீஸார்
திறக்குறள் புத்தகம் பரிசு கொடுத்த போலீஸார்

தமிழகத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் உயர்ந்து, விபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகன விபத்துக்கள் தான் அதிகளவில் நடக்கிறது. இருசக்கர வாகன விபத்துக்களில் 90சதவீத இறப்புகள் தலைக்காயத்தால் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தான், விபத்துக்களைக் குறைக்கப் போக்குவரத்துக் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பெரும்பாலானோர் தலைக்கவசம் போடுவதில்லை. ஒரு சில போலீஸார், தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் பல்வேறு முயற்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திறக்குறள் புத்தகம் கொடுத்த போலீஸார்
திறக்குறள் புத்தகம் கொடுத்த போலீஸார்

இந்த நிலையில் தான், அறந்தாங்கி அண்ணா சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ திருவள்ளுவன் உள்ளிட்ட போலீஸார், தலைக்கவசம் போட்டுவந்த வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் என அனைவரையும் வரிசையாக நிறுத்தி வைத்தனர். தலைக்கவசம் போட்டு வந்த வாகன ஓட்டிகளோ நம்மை ஏன் நிறுத்தினார்கள் என்று தெரியாமல் குழம்பி நின்றனர். அப்போது, சிறப்பு எஸ்ஐ திருவள்ளுவன் தன் பையில் வைத்திருந்த திருக்குறள் புத்தகங்களை எடுத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகள் அனைவரிடமும் கொடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார்.

அங்கேயே தலைக்கவசம் போடாமல் வந்தவர்களைத் தனியாக நிறுத்தி வைத்து அவர்களுக்கு அவசியத்தை எடுத்துரைத்தார். திருக்குறள் புத்தகம் கொடுத்து வாகன ஓட்டிகளை ஊக்குவித்த சிறப்பு எஸ்ஐயை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். இதுபற்றி எஸ்.எஸ்.ஐ திருவள்ளுவன் கூறும்போது," உச்சநீதிமன்ற உத்தரவு என்பதற்காக மட்டுமில்லாமல், அவர்களின் உயிருக்கும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஒரு சகோதரனாக, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியக்கோரி நாங்கள் வலியுறுத்துகிறோம்.

திறக்குறள் புத்தகம் கொடுத்த போலீஸார்
திறக்குறள் புத்தகம் கொடுத்த போலீஸார்

ஒவ்வொரு முறை வாகன சோதனையின் போதும், ஹெல்மெட் போடாமல் வருபவர்களிடம் நோட்டீஸ் கொடுத்தது, அவர்களிடம் நீண்ட நேரம் பேசி புரிய வைப்பேன். தற்போது, பலரும் தானாக முன்வந்து ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்பதால், தான் ஐயன் திருவள்ளுவரின் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தோம். இங்குள்ளப் பகுதிகளில் 40சதவீதம் பேர் தற்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர். விரைவில் 100சதவீதமாக மாற்றிவிடுவோம்" என்கிறார் நம்பிக்கையுடன்.