Published:Updated:

`மெசபடோமியா நாகரிகத்துடன் தமிழுக்குத் தொடர்பு!’ - சேலத்தில் விவரித்த ஆய்வாளர்கள்

உலகத்தில் இஸ்ரேல் மக்கள் தொல்லியல் அடையாளங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். தொல்லியல் ஆய்வுகள் மூலமே வரலாற்றைப் படைக்க முடியும்.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகள் சொல்லும் வாழ்வும் வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சேலம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த, இந்நிகழ்ச்சியில் மூத்த தொல்லியல் ஆய்வறிஞர் பூங்குன்றன், தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், ஆவணப்பட இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்டோர் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கீழடி
கீழடி

கூட்டத்தில், ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டுப் பேசிய இயக்குநர் சீனிவாசன், ``கீழடி அகழ்வாராய்ச்சியைத் தாண்டி 1.70 லட்சம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொல்லியல் எச்சங்கள் அத்திரம்பாக்கத்தில் இருக்கின்றன. பத்தாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த சிவகளை, சாயர்புரம் இருக்கின்றது.

3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதிச்சநல்லூர் இருக்கிறது. இதை முழுவதையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் தமிழர்கள் நாகரிகமே உலகத்தில் தொன்மையான நாகரிகமாக இருக்கும்'' என்றார்.

கீழடி
கீழடி

தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் பேசுகையில், ``நாங்கெல்லாம் வாடகை வீட்டில் இருந்து அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருப்போம். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். கீழடி ஆய்வுக்குப் பிறகு மக்கள் மத்தியில் அகழ்வாராய்ச்சி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கீழடி திராவிட நாகரிகமா தமிழ் நாகரிகமா என்று குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது திராவிட நாகரிகமே. திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒன்றே.

திராவிட நாட்டை உள்ளடக்கிய கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில மொழிகளுக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இல்லை. தமிழர்களுக்கு மட்டுமே தொல்லியல் வரலாறு உண்டு. இந்தியாவில் தொன்மையான குடிகள் தமிழர்கள். அசோகர் கல்வெட்டுகளில் உள்ள பிராகிரத மொழிக்கு முந்தைய மொழியாக தமிழ் தனித்துவமாக விளங்கி இருக்கிறது.

தமிழகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் தமிழர்கள் மதம் சார்ந்த உருவ வழிபாடு செய்ததற்கான அடையாளங்கள் இல்லை. தமிழர்கள் வீரர்கள், தாய், முதியோர் ஆகிய வழிபாடுகளைச் செய்திருக்கிறார்கள். கீழடியில் மதம் சார்ந்த அடையாளங்கள் இல்லை” என்றார்

தொல்லியல் ஆய்வு
தொல்லியல் ஆய்வு

கூட்டத்தில் இறுதியில் பேசிய மூத்த தொல்லியல் ஆய்வறிஞர் பூங்குன்றன், ``ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் ஒன்றிணைந்த தமிழர்கள் தற்போது கீழடி ஆய்வால் ஒன்றிணைந்திருக்கிறோம். மெசபடோமியா நாகரிகத்துக்கும் தமிழுக்கும் நேரடி தொடர்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 50 சதவிகித தொல்லியல் எச்சங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மீதம் இருக்கும் 50 சதவிகித எச்சங்களையாவது பாதுகாக்க வேண்டும். உலகத்தில் இஸ்ரேல் மக்கள் தொல்லியல் அடையாளங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். தொல்லியல் ஆய்வுகள் மூலமே வரலாற்றைப் படைக்க முடியும்” என்றார் உறுதியான குரலில்.