Published:Updated:

`கீழடியின் தொடர்ச்சியான இலந்தைக்கரையிலும் ஆய்வு வேண்டும்!' - வலியுறுத்தும் தொல்லியல் ஆர்வலர்கள்

`கீழடியில் கிடைத்துள்ளது ஒரு வாலின் அளவுதான்' என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இலந்தக்கரையில் கிடைத்தவை
இலந்தக்கரையில் கிடைத்தவை

கீழடியைப் போல் சிவகங்கையில் பல்வேறு இடங்களில் பழைமையான பொருள்கள் கிடைத்துவருவதால் அந்தப் பகுதிகளிலும் அகழாய்வு செய்ய வேண்டும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இலந்தக்கரை
இலந்தக்கரை

அதேபோல் வழக்கறிஞர் கனிமொழி, ``கீழடியைச் சுற்றி 100 கி.மீ., அளவிற்குத் தேவையான இடங்களில் அகழாய்வு செய்தால்தான் ஓரளவிற்குக் கீழடியின் அடையாளங்களைப் புரிந்துகொள்ள முடியும்'' எனத் தெரிவித்துள்ளார். இவற்றை உறுதிப்படுத்தும் வண்ணம் கீழடியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பழைமையான பொருள்கள் கிடைத்துள்ளன. இதனையும் ஆய்வுக்கு உட்படுத்தும் போது கீழடி போல பழைமையான சான்றுகள் கண்டறிய முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் கூறுகையில், ``கீழடியில் கிடைத்த பொருள்கள் 2,600 ஆண்டுகள் பழைமையானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அகழாய்வு செய்யாமல் இருந்திருந்தால் தமிழரின் அடையாளங்கள் மண்ணிலேயே புதைந்து கிடந்திருக்கும். கீழடியைப் போல பல்வேறு இடங்களில் பழைமையான பொருள்கள் கிடைத்துவருவது உண்மை.

தொழிற்கூடம் இருந்தசான்றுகள்
தொழிற்கூடம் இருந்தசான்றுகள்

கீழடியிலிருந்து 70 கி.மீ., கொண்ட இலந்தக்கரை, கண்டனிக்கரை, நாகமுகுந்தன்குடி, முடிக்கரை, கொல்லங்குடி, மல்லல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துவருகின்றன. எனவே, காளையார்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை மேற்கொண்டால் கீழடியின் தொடர்ச்சியைக் கண்டறிய முடியும். குறிப்பாக இலந்தக்கரையில் பொருந்தல், கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் கிடைத்ததுபோல் பெரும்பாலான பொருள்கள் கிடைத்துள்ளன.

அங்கு குறிப்பிட்ட சில நிறப் பாசிகள்தான் கிடைத்தன. ஆனால், இலந்தக்கரையில் கறுப்பு, சிவப்பு, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறப் பாசிகள் கிடைத்துள்ளன. கீழடியில் அகழாய்வு செய்து கிடைத்தவை இலந்தக்கரையில் சில அடிகளிலேயே கிடைக்கின்றன. கீழடியில் நூற்பாலை இருந்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. அதேபோல, இலந்தக்கரையில் பாசிகள், பவளங்கள் தயார் செய்யப்படும் தொழிற்கூடம் இருந்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது. அந்த அளவிற்கு இலந்தக்கரையில் பாசிகள் கிடைத்துவருகின்றன. கீழடியில் எப்படி சமய, மத அடையாளப் பொருள்கள் கிடைக்கவில்லையோ, அதைப்போல் இலந்தக்கரையிலும் கிடைக்கவில்லை.

இலந்தக்கரை
இலந்தக்கரை

இலந்தக்கரை கீழடியைப் பல்வேறு கோணத்தில் ஒத்துப்போகிறது. எனவே காளையார்கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளை அரசு விரைவில் அகழாய்வு செய்யவேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இலந்தக்கரையில் வைகை நதியின் கிளை ஆறுகள் ஓடியதற்குச் சான்றுகள் கிடைத்திருப்பதால் இலந்தக்கரை கீழடியின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, கீழடியைப் போல் இன்னும் பல இடங்களை அகழாய்வு ஆய்வு செய்தால் தமிழரின் முழுமையான நாகரிகம் வெளிப்படும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.