Published:Updated:

`100 ரூபாய்க்கு சிலிண்டர்; சோலார் மூலம் மின்சாரம்!' -சாட்டை, மரக்கன்றுடன் அசத்தும் வேட்பாளர்

தேர்தல் வந்தால் மட்டும் மக்களைப் பற்றி யோசிக்கும் அரசியல் கட்சித்தலைவர்கள் போட்டியிடும் போது நான் ஏன் போட்டியிடக் கூடாது.

நூதனமான முறையில் பிரசாரம்
நூதனமான முறையில் பிரசாரம்

லஞ்சம் வாங்கினால் என்னைச் சவுக்கால் அடியுங்கள் என்று, பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சமூக ஆர்வலர் ஒருவர் கையில் சாட்டையோடு வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கும்விதம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்
வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே அமைந்துள்ளது கீழகாவட்டாங்குறிச்சி. பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சமூக ஆர்வலர் தங்க.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவருக்குக் கிணறு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் ஒரு கையில் மரக்கன்று மற்றொரு கையில் சாட்டை சகிதமாக கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், `நூறு ரூபாய்க்கு சிலிண்டர் தரப்போகிறேன். சோலார் மூலம் மின்சாரம் தயாரித்து அதை அரசுக்கு விற்பனை செய்யப்போகிறோம். நான் படித்தவன் என்னிடம் ஏகப்பட்ட ஐடியாக்கள் இருக்கின்றன. என்னைப் பயன்படுத்துங்கள் மக்களே..!' என்று வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

கோரிக்கைகள்
கோரிக்கைகள்

தங்க. சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ``நான் கடந்த இருபது வருடங்களாக மக்களின் அடிப்படை வசதிகளுக்காக வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறேன். அத்தோடு அரியலூர் முதல் டெல்லி வரையிலும் மக்கள் பிரசனைக்காகப் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.

காணாமல் போன ஏரிகள் மற்றும் அழிந்துவரும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டுவருகிறேன். எந்தநேரமும் மக்களுக்காக உழைக்கும்போது, நான் ஏன் தேர்தலில் போட்டியிடக் கூடாது. தேர்தல் வந்தால் மட்டும் மக்களைப் பற்றி யோசிக்கும் அரசியல் கட்சித்தலைவர்கள் போட்டியிடும் போது அவர்களோடு என்னை ஒப்பிட்டால் அவர்களைவிட எனக்கு நிறைய தகுதிகள் இருக்கின்றன.

மேலும், நான் வெற்றிபெற்றால் என்னுடைய பஞ்சாயத்தில் நூறு ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் கொடுக்கப்போகிறேன். அது எப்படி முடியும் என்று யோசிக்கிறீர்களா.. சாண எரிவாயு மூலமாக இதை நிறைவேற்றப்போகிறேன். இதற்கான வழிமுறைகளும் என்னிடம் இருக்கின்றன. அதேபோல் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரித்து அரசுக்கு விற்பனை செய்யப்போகிறோம்.

வேட்பாளர்
வேட்பாளர்

ஏரி, குளங்களை அபகரித்தவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராட்டமும் நடத்த இருக்கிறேன். கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன். லஞ்சம் வாங்கினால் என்னைச் சவுக்கால் அடியுங்கள். நான் படித்தவன் என்னைப் பயன்படுத்திக்கொண்டால் உங்களுக்கு நல்லது. எந்நேரமும் மக்களுக்காக யோசிக்கும் எனக்கு வாக்கு அளிக்கவில்லை என்றால் நான் என்ன செய்வேன் என்று பிறகு சொல்கிறேன்" என்று சவுக்கைக் காட்டியதோடு முடித்துக்கொண்டார்.