Published:Updated:

`வீட்டுக்கு அனுப்பிய 30 பேரில் 28 பேருக்கு கொரோனா!’- டிராக் செய்ய முயலும் அரியலூர் மாவட்ட நிர்வாகம்

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

அதிகாரிகளின் அலட்சியத்தால் 30 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இப்போது அவர்களை இரவு பகலாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் மாவட்ட நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாகக் கொரானோ பாதிப்பு அரியலூரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கொரானோ இல்லையென்று வீட்டுக்கு அனுப்பிய 30 பேரில் 28 பேருக்குக் கொரானோ பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் அவர்களை இரவு பகலாக அதிகாரிகள் தேடிக்கொண்டிருக்கும் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் கொரானோ வைரஸ் காய்கறிச் சந்தையிலிருந்து பரவியதைத் தொடர்ந்து சந்தை மூடப்பட்டது. தொழிலாளர்கள் லாரிகள் மற்றும் டூவீலரின் மூலமாகக் காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சொந்த ஊருக்கு அதிகளவில் வந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் லாரி மூலமாக வந்த ஒரு பெண் உட்பட 42 பேரை ஜெயங்கொண்டம் போலீஸார் பிடித்து, அதிகாரிகளின் உதவியுடன் மகிமைபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் சளி மற்றும் ரத்தம் மாதிரிகளை எடுத்துச் சிறப்புப் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்துப் பாதுகாத்துக் கண்காணித்து வந்தனர்.

அரியலூர்
அரியலூர்

இந்நிலையில், படிப்படியாகப் பரிசோதனை முடிவுகள் வந்து வைரஸ் தொற்று இல்லாதவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்தனர். இந்நிலையில் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவையடுத்து ஜெயங்கொண்டம் மலங்கள் குடியிருப்பு, கீழகுடியிருப்பு, சின்னவளையம், குருவாலப்பர் கோவில், கல்லாத்தூர், மறுகால்குறித்து, கங்கைகொண்ட சோழபுரம், கோடாலி கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாமிலிருந்த 30 பேரை இரண்டு நாள்கள் முன்பு ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் அழைத்து வந்து அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

முகாமிலிருந்து வந்த 30 பேரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தேவையான பொருள்களை ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கடைகளில் வாங்கிக்கொண்டு தங்களது கிராமங்களுக்குச் சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று இரவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 30 பேரில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.

அரியலூர் அரசு மருத்துவமனையில் போலீஸார்
அரியலூர் அரசு மருத்துவமனையில் போலீஸார்

அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் காவல்துறையினர், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 28 பேரையும் எங்கு உள்ளனர் என்று இரவு முழுவதும் தேடி அலைந்து வருகின்றனர். (7-ம் தேதி) இன்றைய நிலவரப்படி அரியலூரில் 246 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ``அதிகாரிகளின் அலட்சியத்தால் 30 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இப்போது அவர்களை இரவு பகலாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் மாவட்ட நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

இன்று மட்டும் (7-ம் தேதி) 24 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தமாக 246 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இம்மாவட்டத்தில் அதிகம் பேர் கொரானோவால் பாதிக்கப்படுவதால் இவர்களைப் பராமரிக்க முடியாமல் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள். இவர்களால் எத்தனை பேர்களுக்கு வைரஸ் தொற்று இருக்குமோ என அச்சப்படுகிறார்கள். அத்தோடு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் அரசும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாகப் பார்க்க வேண்டும்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு