Published:Updated:

`கழுத்தளவு தண்ணீர்; உயிருக்கு உத்தரவாதமில்லை!'- ஏரியைக் கடந்து எடுத்துச் செல்லப்படும் உடல்கள்

உயிரிழந்த ஒருவரின் உடலை இந்த ஏரியின் வழியாக எடுத்துச் சென்றபோது மதகு உடைந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார்.

ஆபத்தான பயணம்
ஆபத்தான பயணம்

``சுடுகாட்டுக்கு உடலை எடுத்துச்செல்ல வழியில்லாமல் குளத்துக்கு நடுவே எடுத்துச்செல்கிறோம். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. அதிகாரிகளிடம் சொன்னால் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இருக்கிறார்கள். இறந்தவரின் உடலைக் கழுத்தளவு நீரில் எடுத்துச்செல்லும் அவலம் அரியலூரில் அரங்கேறியுள்ளது.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.
அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்களில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களைப் புதைக்கவோ அல்லது எரிக்கவோ அப்பகுதியில் உள்ள நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்கின்றனர். இந்த நிலையில், வெயில் காலத்தில் உயிரிழப்பவரின் உடலை அப்பகுதி பொதுமக்கள் நயினார் ஏரியில் இறங்கி எளிதில் எடுத்துச் சென்று அடக்கம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த கோசலை என்ற மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய கழுவந்தோண்டி நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டுக்கு உறவினர்கள், பொதுமக்கள் கொண்டுசென்றனர்.

ஆபத்தான முறையில் பிரேதத்தை அடக்கம் செய்யும் மக்கள்
ஆபத்தான முறையில் பிரேதத்தை அடக்கம் செய்யும் மக்கள்

அப்போது கடந்த சில நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. சுடுகாட்டுக்குச் செல்ல மாற்றுப்பாதை இல்லாததால் உறவினர்கள் ஏரியில் இறங்கி கழுத்தளவு மற்றும் மார்பளவு தண்ணீரில் மிதந்தவாறே பிரேதத்தை சுமந்துகொண்டு, சுடுகாட்டுக்குச் சென்று அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் பேசினோம். ``மழைக்காலத்தில் உயிரிழப்பவர்களின் உடலை இந்த நயினார் ஏரி வழியாகக் கொண்டுசென்று அடக்கம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒருவரின் உடலை இந்த ஏரியின் வழியாக எடுத்துச் சென்றபோது மதகு உடைந்து ஆற்றில் பிரேதம் அடித்துச்செல்லப்பட்டது. பின்பு பிரேதத்தை எடுத்து வந்தவர்களில் இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டனர். அதே ஐந்து வருடத்துக்கு முன்பு ஒருவர் மதகிலிருந்து தவறி விழுந்து மீட்கப்பட்டார்.

அரியலூர்
அரியலூர்

இதேநிலை நீடித்துவருவதால் இறந்தவரின் உடலைக் கொண்டுசெல்லும் ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாகப் பலமுறை ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார்மனு கொடுத்துவிட்டோம். இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நயினார் ஏரிக்கரையைப் பலப்படுத்தி சுடுகாட்டுக்குச் செல்லும் வகையில் பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.