Published:Updated:

அதிக விலைக்கு விற்பனை; லட்சக்கணக்கில் கொள்ளை.. திமுக புகாருக்கு அரியலூர் சிமென்ட் ஆலை சொல்வது என்ன?

சிமென்ட் ஆலை
சிமென்ட் ஆலை

தனியார் நிறுவன தொழிற்சாலைக்கு நிபந்தனை விதிக்கும் அரசு, ஏன் அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் கண்டுகொள்ளவில்லை. அரசை ஏமாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

``தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக எந்த ஆலைகளும் இயங்காத நிலையில், அரசு சிமென்ட் ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள், சிமென்ட்டை அதிக விலைக்கு விற்று லட்சக்கணக்கில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு லட்சக்கணக்கில் வருமானம் பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்'' என தி.மு.க மாவட்டச் செயலாளர் குற்றம் சாட்டியிருக்கும் சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிமென்ட் ஆலை
சிமென்ட் ஆலை

என்ன நடந்தது என்று அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கரிடம் பேசினோம். ”அரியலூர் மாவட்டம் கயர்லாபாத்திலும், விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திலும் அரசு சிமென்ட் ஆலைகள் இயங்கிவருகின்றன. கடந்த 24.03.2020-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்தது. அன்றிலிருந்தே தமிழ்நாட்டில் எந்த ஒரு சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இயங்காத நிலையில், அரசு சிமென்ட் ஆலைகள் மட்டும் இயங்கிவந்தன. இதை எதிர்த்ததும், அரியலூர் சிமென்ட் ஆலை தன் உற்பத்தியை நிறுத்திகொண்டு, உற்பத்தி செய்த சிமென்ட்டை மட்டும் 27-4-2020 அன்று வரை திருச்சி மண்டல டீலர்களுக்கு அதிக விலைக்கு விற்பனைசெய்துவந்தது.

ஒப்பந்த சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் பெயரில் அரியலூரில் உள்ள கிளிங்கரை ஆலங்குளத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதுவும் அத்தியாவசிய பொருள் என்று எழுதப்பட்டு, லாரிகள் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுவே முதல் குற்றம். இந்த கிளிங்கரைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் முதல் 600 மெட்ரிக் டன் வரை தினமும் விற்பனை செய்துவந்திருக்கிறார்கள்.

அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலளார் சிவசங்கர்
அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலளார் சிவசங்கர்

அரியலூர் தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் பொருட்டு உற்பத்திசெய்யும் இடத்தை அரியலூர் ஆலையிலிருந்து ஆலங்குளத்திற்கு கூடுதல் கிளிங்கர் அனுப்பத் திட்டமிட்டு, இதற்காகத் தொழிலாளர்கள், பில் போடுபவர்கள், லாரி எடை போடும் நிலைய ஊழியர்கள், வாகனங்கள் பயன்படுத்தப்படுவது என ஊரடங்கு உத்தரவை மீறி தொழிலாளர்களின் உயிரின் மீதும் நாட்டின் மீதும் அக்கறையில்லாமல் அவர்களை அனுப்பி, ஆலங்குளத்தில் சிமென்ட் உற்பத்தி செய்தனர்.

சிறு கட்டுமானப் பணிகள் மற்றும் சிமென்ட் விற்பனைக் கடைகள் அனைத்தும் ஊரடங்கில் மூடப்பட்ட நிலையில், சிமென்ட் கிடைக்காத சூழ்நிலையைப் பயன்படுத்தி (TANCEM) நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ஜாபர் சாதிக் அலி, ஊரடங்கைப் பயன்படுத்தி ஜிஎஸ்டி பில்லுடன் விற்பனை செய்வதோடு, மூட்டைக்கு ரூ.10 வீதம் அதிகம் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவருக்கும் சுமார் 2500 மெட்ரிக் டன் (50,000 மூடைகள்) வரை விற்பனை செய்துள்ளார்கள்.

ஜிஎஸ்டி பில்
ஜிஎஸ்டி பில்

இப்படியாக, அரியலூரிலிருந்து கொண்டுவரப்பட்ட கிளிங்கர் மூலம் இந்த ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 8000 மெட்ரிக் டன் வரை சிமென்ட் GST பில் உடன் விற்றுள்ளார்கள். சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில், அரசு சிமென்ட் மட்டும் எப்படி இயங்கியது.

ஊரடங்கிற்குப் பிறகும் அரியலூர் மாவட்ட ஆலையிலிருந்து கிளிங்கர் எடுத்துச்சென்று, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் ஆலையில் உற்பத்திசெய்து, திண்டுக்கல் மாவட்டம் வரை விற்பனை செய்திருக்கிறார்கள். தனியார் துறை நிறுவனங்களுக்கு, இந்த ஊரடங்கு காலத்தில் சம்பளத்துடன்கூடிய விடுப்பு கொடுக்கச் சொல்லும் அரசு, அரியலூர் ஆலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏன் சம்பளம் தரவில்லை.

ஜாபர் அலி
ஜாபர் அலி

தனியார் நிறுவனத் தொழிற்சாலைக்கு நிபந்தனை விதிக்கும் அரசு ஏன் பொதுத் துறை நிறுவனங்களைக் கண்டுகொள்ளவில்லை? அரசை ஏமாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறோம்" என்றார்.

இதுகுறித்து விற்பனைப் பிரிவு மேலாளர் ஜாபர் அலியிடம் பேசினோம். ``ஊரடங்கு காலத்தில் இதுபோன்று செயல்படமுடியாது. எனக்கு மேல் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் உத்தரவு இல்லாமல் நான் மட்டும் தனியாளாகச் செயல்படமுடியாது. அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் சிமென்ட்டை அதிக விலைக்கு விற்கமுடியாது. வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்" என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு