Published:Updated:

`55 இடங்கள்... 2 மணி நேரம்... சிக்கிய 500 வாகனங்கள்' - அதிரடிகாட்டிய அரியலூர் போலீஸ்

தேவையின்றி பைக்கில் வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்.
தேவையின்றி பைக்கில் வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்.

வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்திருந்தும். இளைஞர்கள் வெட்டியாகச் சுற்றித் திரிகிறார்கள்.

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ், தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதிலும் இளைஞர்கள் சுற்றித் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்தில் 500 வாகனங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ராபிடோ வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ராபிடோ வாகனங்கள்

கொரோனோவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் நிலைகுலைந்து நிற்கிறார்கள். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனைகள் கொடுப்பது போன்ற வீடியோக்களும் வரலாகி வருகின்றன. மேலும், காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காலை 6 மணி முதல் 1 மணி வரைதான் அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அரியலூர் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 55 இடங்களில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

இதுகுறித்து மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ``அரியலூர் மாவட்டத்தில் கொரானோவால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். 38 பேருக்கும் மேல் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் அரியலூர் ஆட்சியர் ரத்னா உத்தரவின்படி 201 கிராமப் பஞ்சாயத்துகளில் வசிக்கும் 1,97,614 குடும்பங்களுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காகச் செல்வோருக்கு நீலம், பச்சை, ரோஸ் என மூன்று நிறங்களில் கிராமப் பஞ்சாயத்து அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பச்சை வண்ண அட்டை வைத்துள்ளவர்கள், திங்கள், வியாழன் அன்றும், நீலவண்ண அட்டை வைத்துள்ளவர்கள் செவ்வாய், வெள்ளி அன்றும், ரோஸ் வண்ண அட்டை வைத்திருப்பவர்கள் புதன், சனிக்கிழமைகளில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே வந்து அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும்.

தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்
தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்

அப்படி வீட்டுக்குப் போகாமல் வெளியில் சும்மா சுற்றித்திரிபவர்கள் மீது போலீஸாரின் உதவியோடு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெளியில் வரும்போது இந்த அட்டையைக் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்று கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்திருந்தும். அப்படியிருந்து இளைஞர்கள் வெட்டியாகச் சுற்றித் திரிகிறார்கள். இரண்டு மணிநேரத்தில் 500 வாகனங்களைப் பறிமுதல் செய்கிறார்கள் என்றால் மாவட்டத்தோடு நிலையைப் பாருங்கள். எவ்வளவு வேதனையாக இருக்கிறது. அதிகாரிகள் சிறப்பாகத்தான் செயல்படுகிறார்கள் ஆனால், மக்கள்தான் அலட்சியப்படுத்துகிறார்கள். கடுமையான தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே அரியலூர் மாவட்டத்தில் கொரானோ பரவாமல் தடுக்க முடியும். இல்லையேல் கேள்விக்குறிதான்" என முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு