Published:Updated:

`காற்றில் பறந்த ஊரடங்கு...மீன்பிடித் திருவிழாவுக்காகக் கூடிய நூற்றுக்கணக்கானோர்!’ அரியலூர் அதிர்ச்சி

மீன்பிடி திருவிழா
மீன்பிடி திருவிழா

ஊரடங்கு விதிமுறைகளை மீறி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி மீன்பிடிக்க ஏரியில் இறங்கினர். தடையையும் மீறி ஏரியில் இறங்கிய கிராம மக்களை போலீஸார் படாதபாடுபட்டு வெளியேற்றினர்.

அரியலூர் மாவட்டத்தில் கொரானோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு தடையை மீறி மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட கிராம மக்களைக் கலைக்க அரியலூர் போலீஸார் படாதபாடுபட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் மீன் பிடித்த மக்கள்
குளத்தில் மீன் பிடித்த மக்கள்

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நக்கம்பாடி கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் கோடையில் நீர் வற்றியவுடன் மீன்பிடி திருவிழா நடைபெறும். இதில், அருகிலுள்ள பெரும்பாண்டி, சொக்கநாதபுரம், செந்துறை, வஞ்சினபுரம் கிராம மக்கள் கலந்துகொண்டு மீன்களை அள்ளிச் செல்வார்கள்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகம்
அரியலூர் ஆட்சியர் அலுவலகம்

இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா 15 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. கொரானோ தொற்று ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மீன்பிடி திருவிழாவிற்குச் செந்துறை போலீஸார் தடைவிதித்திருந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி மீன்பிடிக்க ஏரியில் இறங்கினர். தடையையும் மீறி ஏரியில் இறங்கிய கிராம மக்களை போலீஸார் படாதபாடுபட்டு வெளியேற்றினர். அத்தோடு, ஊரடங்கு தடை உத்தரவு முடியும்வரை ஏரியில் யாரும் மீன் பிடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மீன்பிடி திருவிழா
மீன்பிடி திருவிழா

கொரானோ அச்சமின்றி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரியில் இறங்கி மீன் வலை, சேலை கொண்டு மீன் பிடித்தனர். காவல்துறையின் கெடுபிடியால் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு மீன் பிடித்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் வந்த கிராம மக்கள் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம்.``தமிழகத்தில் கொரானோ ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. சென்னை மிகக் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் சூழலில், அரியலூர் மாவட்டத்தில் 392 பேருக்கு மேல் கொரானோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவும் என்ற அச்சமின்றி ஊரடங்கு உத்தரவை மீறி நக்கம்பாடி ஏரியில் இறங்கி மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

தங்க.சண்முக சுந்தரம்
தங்க.சண்முக சுந்தரம்

அப்படியென்றால் அவர்களுக்கு கொரானோவின் பயம் கொஞ்சம்கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இம்மக்களைக் கலைக்க 3 மணிநேரத்திற்கு மேல் போலீஸார் போராடி இருக்கிறார்கள். இந்த நிகழ்வை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. முதலில் இந்நோயின் தீவிரத்தையும் அதன் பயத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சட்டத்தை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டால் மட்டும் இதற்குத் தீர்வு. இல்லையேல் கேள்விக்குறிதான்’’ என முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு