Published:Updated:

`பெத்த புள்ளைக்கு எந்தத் தாயாவது கொல்லி வைப்பாளா?' - சாதிக் கொடுமையால் கலங்கும் அரியலூர் பெண்

அம்சவள்ளி
அம்சவள்ளி

`சாவுலயும் புகுந்த சாதியால் அங்க என் மகன் செத்தும் நிம்மதியில்லாம கிடக்கிறான்'ன்னு உதறிட்டு ஓடிய நான் அழுதுகொண்டே என் மகனோட உடலை எரிச்சேன்.

அரியலூர் அருகே உள்ள ஒரு கிராமம் ஒன்றில் விபத்தில் இறந்த இளைஞர் ஒருவரின் உடலை அரசு சுடுகாட்டில் எரிப்பதற்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் தடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த கற்பககுமார்
இறந்த கற்பககுமார்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருப்பெயர் என்ற கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 5 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தச் சமூகத்தைச் சேர்ந்த கற்பககுமார் என்ற இளைஞர் விபத்தில் இறந்துவிட மாற்று சமூகத்தினர் அவரின் உடலை பொது சுடுகாட்டு தகன மேடையில் வைத்து எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரச்னை காவல்துறை வரை சென்ற பிறகும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை. இதையடுத்து, வேறு வழியில்லாமல் சுடுகாட்டு மேடையில் எரிக்காமல் அவசரகதியில் கீழே வைத்து எரித்ததால் சடலம் பாதி மட்டுமே எரிந்த நிலையில் இருக்க, பின்னர் அந்த இளைஞரின் அம்மாவே கதறியபடி மகனின் உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரச்னைக்குரிய சுடுகாடு
பிரச்னைக்குரிய சுடுகாடு

இதுகுறித்து, கற்பககுமாரின் அம்மா அம்சவள்ளியிடம் பேசினோம், ``எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. என் கணவர் கர்ணன் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த நாங்க பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்துகிட்டு வர்றோம். என் மகன் கற்பககுமார் தஞ்சாவூரில் சலூன் கடை நடத்தி வந்தான். கொரோனாவால் ஒரு மாசத்துக்கு மேலே கடை மூடியே கிடக்குன்னு பார்க்கப் போனவன் விபத்தில் அடிபட்டு கடந்த 9-ம் தேதி இறந்துவிட்டான்.

இறப்பவர்களை எரிக்காமல் புதைப்பது எங்க வழக்கம். ஆனால், ஊர்க்காரங்க இறந்தவன் இளவயசுப் பையன் என்பதால் புதைக்கக் கூடாதுனு எரித்துவிடச் சொன்னாங்க. சரி என உறவுக்காரவங்க ஊரில் உள்ள பொது சுடுகாட்டில் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்து எரிப்பதற்கான ஏற்பாட்டை செய்து என் மகனின் உடலைத் தூக்கிச் சென்றனர். சுடுகாட்டில் இருந்த மாற்றுசமூகத்தைச் சேர்ந்தவர்கள் `சுடுகாட்டு மேடையில் உங்களுக்கு என்னடா வேலை' என அடுக்கி வைத்திருந்த விறகுக் கட்டைகளை கீழே தூக்கி வீசினர்.

அம்சவள்ளி
அம்சவள்ளி

`ஏன் இது அரசு சுடுகாடுதானே, இதில் எரிக்க எங்களுக்கு உரிமையில்லையா' என எங்க ஆட்கள் ஆதங்கத்துடன் கேட்டதற்கு, `சின்ன சாதி பயலுக நீங்க எங்களை எதிர்த்து பேசுறீங்களா' என தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கீழே கிடந்த கட்டைகளை எடுத்து அடிக்க முயன்றுள்ளனர். உடனே நாங்க கீழபளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

சுடுகாட்டுக்கு வந்த போலீஸார் மாற்று சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசியதுடன், ``வீண் சண்டை எதற்கு.. கீழே வைத்தே எரித்துவிடுங்க அப்புறம் பேசி தீர்த்துக்கலாம்'' என்றனர். மேலும், பிரச்னையை வெளியே தெரியாமல் முடிப்பதற்காக கொல்லி வைப்பவரின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று அவசர அவசரமாக எரிக்க வைத்தனர்.

அடுத்தநாள் என் மகன் உடல் பாதி எரிந்த நிலையில் கிடக்கிறது எனச் சொல்ல பதறித் துடித்து எரித்த இடத்துக்கு நான் ஓடினேன். `நாம சுடுகாட்டுக்குப் போகக் கூடாது' என என்னை சில பெண்கள் தடுத்தனர். `சாவுலையும் புகுந்த சாதியால அங்க என் மகன் செத்தும் நிம்மதியில்லாம கிடக்கிறான்' என அவர்களை உதறிவிட்டு ஓடி, அழுதுகொண்டே என் மகனின் உடலை எரித்தேன்.

கற்பககுமார்
கற்பககுமார்

இதுபோன்ற கொடுமை வேறு எங்கேயாவது நடந்திருக்கா. பெத்த புள்ளைக்கு எந்தத் தாயாவது கொல்லி வைப்பாளா. வாழும்போது கஷ்டப்பட்ட அவனை சாவிலும் நிம்மதியில்லாம செய்து விட்டனர். பார்த்துப் பார்த்து வளர்த்த என் ஒத்த புள்ளைய என் கையாலேயே எரிக்கிற நிலையை இந்த சாதி உண்டாக்கிருச்சு.

வாழ வேண்டிய வயசில் என் பையன் இறந்துவிட்டான். அவன் முகத்தைக் கடைசியாகப் பார்க்கக் கூட அவன் அப்பாவால் வரமுடியவில்லை. இந்த வலிகளுக்கு இடையிலேயும் பெரும் துயரத்தை இந்த சாதி தந்துவிட்டது. நாங்களும் மனுஷங்கதானே.. ஒத்த உசுரை எரிக்கிறதனால சாதி அந்தஸ்து குறைஞ்சிடுமா" என கதறினார்.

இதையடுத்து, கற்பககுமாரின் உறவினரான கணேசன் என்பவரிடம் பேசினோம், ``இன்னைக்கு உங்கள எரிக்க விட்டா நாளைக்கு வேறு யாராவது வருவாங்க. அப்புறம் என்ன வித்தியாசம் இருக்கு எனச் சொல்லி எங்களை தடுத்தனர். அடுத்தநாள் போலீஸார், `உங்களுக்கு வேறு இடத்தில் சுடுகாடு கட்டித்தருவதற்கு ஏற்பாடு செய்கிறோம். இதைப் பெருசுபடுத்தாதீங்க. வெளியூர்காரவங்க யாரும் இதில் பேசக் கூடாது' என எங்க வாயை அடைத்தனர். இந்தப் பிரச்னைக்குப் பிறகு நாங்க பால் வாங்கிக்கொண்டிருந்த வீட்டில் எங்களுக்குப் பால் தர முடியாது எனச் சொல்லிவிட்டனர்.

உறவினர் கணேசன்
உறவினர் கணேசன்

எங்க சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர் மளிகைக் கடை வைத்திருக்கிறார். அவரிடம் மாற்று சமூகத்தைச் சேர்ந்த யாரும் பொருள்கள் வாங்குவதில்லை. எதிர்த்துக் கேட்டதால் திட்டமிட்டு எங்களை ஒதுக்கி வைக்கின்றனர். சுடுகாட்டு மேடையிலேயே எரிப்பதற்கு அரசு அனுமதி வாங்கித் தந்திருந்தால் இந்தப் பிரிவினை ஏற்பட்டிருக்குமா. சாதிப் பிரிவினையால உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டு வாழ்ந்த எங்களுக்கு சாவிலும் நிம்மதியில்லாமல் போய்விட்டது" என்றார்.

திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``சம்பந்தப்பட்ட அந்தக் குடும்பம் ஊரைவிட்டுச் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அது தவிர கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தால் எரிப்பதை சிலர் தடுத்தனர். மற்றபடி எங்க ஊரில் எந்த சாதிபாகுபாடும் கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்" என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட எஸ்.பி சீனிவாசனிடம் பேசினோம், ``இதுகுறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிடுகிறேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு