Published:Updated:

`மக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது!’ - கிராம மக்களை நெகிழ வைத்த ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள் உதவி
ராணுவ வீரர்கள் உதவி

ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் இணைந்து பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி நெகிழ வைத்திருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பு மற்றும் பரவல் நடவடிக்கைகள் உலக அளவில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தேசிய அளவில் பொதுமுடக்கம் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. மூன்றாம்கட்ட பொதுமுடக்கம் மே 17-ம் தேதி வரை இருக்கும் நிலையில், புதிய விதிமுறைகளோடு இது நான்காம் கட்டமாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இதுதொடர்பான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்கள் உதவி
ராணுவ வீரர்கள் உதவி

பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, தினக்கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருமானமின்றி அன்றாடச் செலவுகளுக்கே தடுமாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி அசாதாரண சூழலில் அரசுகள் மட்டுமல்லாது தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

அப்படி, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மதுரை மாவட்டம் சாப்டூர் கிராமத்தில் ராணுவ வீரர்கள் இணைந்து பொதுமக்களுக்கு உதவிக் கரம் நீட்டியிருக்கிறார்கள். 5 கிலோ அரிசி, பருப்பு, 10 வகையான காய்கறிகள் என 200 பேருக்கு நிவாரண உதவிகளை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

ராணுவ வீரர்கள் உதவி
ராணுவ வீரர்கள் உதவி

இதுகுறித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சுபேதார் மேஜர் அய்யாத்துரை, மேஜர் ராஜவேல் ஆகியோரிடம் பேசினோம். ``பொதுமுடக்கத்தால எல்லாத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுருக்காங்க. அன்றாடம் கூலி வேலைக்குப் போய் பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நிலைமை வந்துருச்சு. இப்படி இருக்கும் சூழ்நிலைல அவங்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிட்டு வர்றதைப் பார்த்தோம்.

`காதல் திருமணம்; 10 மாதங்களில் கணவர் வீரமரணம்!' - ராணுவத்தில் இணையும் ராணுவ மேஜரின் மனைவி

அதையெல்லாம் பார்க்கும்போது, நம்மளும் நம்மால் முடிஞ்சதைச் செய்யணும்னு யோசிச்சோம். பொதுமுடக்கம் அறிவிக்கப்படுறதுக்கு முன்னாடியே ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர்களை ஒன்றிணைச்சோம். அப்படி ஒன்றிணைச்சு `சாப்டூர் ராணுவப் படை’னு ஒரு வாட்ஸ் அப் குரூப்பைத் தொடங்கினோம். லீவுல இருக்குறவுங்க, நாட்டின் பல மூலைகளில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கவுங்கனு ராணுவம் மட்டுமல்லாது துணை ராணுவப்படைனு 100 பேருக்கு மேல அந்த குரூப்ல இணைஞ்சாங்க. `மக்களுக்கு உதவி செய்யப்போறோம். முடிஞ்ச பங்களிப்பைச் செய்யலாம்’னு சொன்னதும், ஒவ்வொருவரும் தங்களால் முடிஞ்சதைக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இரண்டே நாள்ல ஒரு லட்ச ரூபாய் சேர்ந்துடுச்சு.

ராணுவ வீரர்கள் உதவி
ராணுவ வீரர்கள் உதவி

அதை வைச்சு கஷ்டப்படுற மக்களுக்கு உதவலாம்னு நினைச்சு, அரசு தரப்புல அனுமதி கேட்டோம். ஊராட்சி நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர், போலீஸ்னு நாங்க கேட்ட உடனே எல்லோரும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. மதுரை மார்க்கெட் போய் தேவையான பொருள்களை வாங்கி அதை மக்களுக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணோம். நிவாரண உதவிகளோட மாஸ்க், சானிடைசர் கொடுக்கலாம்னு ஐடியா பண்ணோம். இன்னிக்கு காலைல எங்க ஊர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்க சமுதாய நலக் கூடத்துக்கு மக்களை வரச் சொல்லி நிவாரணப் பொருள்களை வழங்கினோம்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் ராமுத்தாய், கிராம நிர்வாக அலுவலர் அமுதா மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன் கலந்துக்கிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாங்க. முறையான சமூக இடைவெளியைக் கடைப்பிடிச்சு மாஸ்க் அணிந்து மக்களுக்கு இந்தப் பொருள்களை வழங்கினோம். நம்ம மக்கள் கஷ்டப்படுவதை சும்மா பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுல்ல..?’’ என்றனர் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு