Published:Updated:

`பீர்க்கங்காய் தோட்டத்தில் பீதியைக் கிளப்பிய ராணுவ குண்டு!' -மீண்டும் அச்சத்தில் அனுமந்தபுரம்

ராணுவ வெடிகுண்டு
ராணுவ வெடிகுண்டு

ஊருக்குள் யாரும் மீடியாவுக்குத் தகவல் சொல்லக் கூடாது. இங்கு நடப்பவற்றைப் புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் காவல்துறையினர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கடுமைகாட்டியதாகச் சொல்கிறார்கள்.

செங்கல்பட்டை அடுத்துள்ள அனுமந்தபுரத்தில் மீண்டும் விவசாய நிலங்களில் 3 ராணுவ குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் இருந்த வெடிகுண்டை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது வெடித்துச் சிதறியது. அந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மீண்டும் அப்பகுதியில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனுமந்தபுரம் கிராமம்
அனுமந்தபுரம் கிராமம்

செங்கல்பட்டு, அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவப் பயிற்சி மையம் உள்ளது. அதிநவீனத் துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதப் பயிற்சி இங்கு நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் ராணுவப் பயிற்சிகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் திருப்போரூர் பகுதியில் குளத்தில் கிடந்த ராணுவத்திற்குச் சொந்தமான வெடிகுண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.

அடுத்த சில மாதங்களிலேயே அனுமந்தபுரத்தில் ராமகிருஷ்ணன் என்ற விவசாயி, தன்னுடைய நிலத்தில் இருந்த வெடிகுண்டை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது வெடித்துச் சிதறியது. இதில் ராமகிருஷ்ணன் மற்றும் கோவிந்தம்மாள் ஆகியோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் ராமகிருஷ்ணன் வீட்டில் வெடித்தும் வெடிக்காமலும் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. வெடிக்காத குண்டுகள் முருகமங்களம் வெடிகுண்டு கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன.

விவசாயி ராமகிருஷ்ணன் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்
விவசாயி ராமகிருஷ்ணன் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்

விவசாய நிலத்தில் உள்ள வெடிக்காத குண்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என அனுமந்தபுரம் கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு அப்பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் நடைபெற்று வந்தன. அப்போது விவசாய நிலத்தில் விழுந்த சில ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் வெடிக்காமல் இருந்தன. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைமலைநகர் காவல் நிலையத்திற்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாகத் தகவல் தெரிவித்தனர்.

புகார் கொடுத்த ஐந்து நாள் கழித்து இன்று ராணுவத்தினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் அனுமந்தபுரம் கிராமத்திலிருந்து மூன்று வெடிகுண்டுகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

ராணுவப் பயிற்சி மையம், அனுமந்தபுரம்
ராணுவப் பயிற்சி மையம், அனுமந்தபுரம்

கருணாகரன் என்பவருக்குச் சொந்தமான பீர்க்கங்காய் தோட்டத்தில் ஒரு குண்டும் மற்றொரு விவசாயி நிலத்தில் ஒரு குண்டும், செல்லியம்மன் கோயிலுக்கு அருகில் ஒரு குண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், `ஊருக்குள் யாரும் மீடியாவுக்குத் தகவல் சொல்லக் கூடாது. இங்கு நடப்பவற்றைப் புகைப்படம் எடுக்கக் கூடாது' எனவும் காவல்துறையினர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கடுமைகாட்டியதாகச் சொல்கிறார்கள்.

விவசாய நிலத்தில் ராணுவ குண்டு! - வீட்டுக்கு எடுத்துச் சென்றபோது ஏற்பட்ட விபரீதம்

இது குறித்து அனுமந்தபுரம் வனக்குழுத் தலைவர் தசரதனிடம் பேசினோம். ``அனுமந்தபுரத்தில் வெடிக்காமல் இருந்த வெடிகுண்டுகளை எடுக்கும்போது, நான் செல்போனில் படம் எடுத்தேன். அப்போது காவல்துறையினர் என்னுடைய செல்போனை வாங்கி அந்தப் படங்களை அழித்துவிட்டனர். காவல்துறையினரும் ராணுவமும் சரியான முறையில் நடந்து கொள்வதில்லை. முன்பெல்லாம் மிதசக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிப்பார்கள். ஆனால், இப்போது அதிகசக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கிறார்கள்.

தசரதன், அனுமந்தபுரம் வனக்குழுத் தலைவர்
தசரதன், அனுமந்தபுரம் வனக்குழுத் தலைவர்

இதனால் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதிக வெடிசத்தம் காரணமாக வீடுகள் அதிர்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வெடிசத்தம் காரணமாக வனவிலங்குகளும் இப்பகுதிக்கு வருவதில்லை.

முன்பெல்லாம் ராணுவப் பயிற்சி நடைபெறுவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று தமுக்கம் போட்டு ஊரில் அறிவிப்பு செய்வார்கள். ஆனால் இப்போது முறையான அறிவிப்புகள் செய்வதில்லை” என்கிறார்.

ராணுவ வெடிகுண்டு
ராணுவ வெடிகுண்டு

மறைமலைநகர் காவல்நிலைய வட்டாரத்தில் பேசினோம். ``கடந்த பத்து நாள்களாக ராணுவப் பயிற்சி நடைபெற்று வந்தது. நேற்று பயிற்சி முடிந்த நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள வெடிக்காத குண்டுகளை ராணுவத்தினர் கைப்பற்றியிருக்கிறார்கள்'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு