Published:Updated:

` 200 மீனவர்களும் 13 படகுகளும் இன்னும் கரை திரும்பவில்லை!' - `கியார்' புயலால் கலங்கும் கன்னியாகுமரி

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த இந்தப் படகுகள் எங்கிருக்கின்றன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. அந்தப் படகுகளில் சுமார் 200 மீனவர்கள் இருக்கிறார்கள்.

மீனவர்களின் விசைப்படகு
மீனவர்களின் விசைப்படகு

கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம், கேரள மாநிலத்தின் கொச்சி, முனம்பம் துறைமுகங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இதற்கிடையில், புயல் எச்சரிக்கை விடப்பட்டதால் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பினர்.

விசைப்படகு
விசைப்படகு

அவசரத்தில் கரை திரும்பிய மீனவர்கள் கோவா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள துறைமுகங்களில் கரை சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யும்படி மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நடுக்கடலில் இருக்கும்போது புயல் எச்சரிக்கை..!- பிறமாநில துறைமுகங்களில் தஞ்சம்அடைந்த குமரி மீனவர்கள்

மேலும், அரபிக் கடலின் கிழக்குத் திசையில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கியார் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், கடலில் மின்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சர்ச்சில்
சர்ச்சில்

இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த பிளஸ்ஸிங், லூர்தாசன், வள்ளவிளையைச் சேர்ந்த கார்மல் மாதா, பசலிகா, லார்ட் மாதா, ஜெர்மியா, செயின்ட் மேரி, மேல்மிடாலத்தைச் சேர்ந்த சியோன் மேரி, இரவி புத்தன் துறையைச் சேர்ந்த லூர்து அன்னை, றோசா மைஸ்டிக்ஸ், ரெடிமீர், மோகன், தூத்துரைச் சேர்ந்த ஜேக்கப் ஆகிய 13 படகுகள் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மற்றும் கேரளத்தின் கொச்சி, முனம்பம் ஆகிய மீன்பிடித்துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்தன.

`2 நாள்களாகத் தொடர்பில் இல்லை!' - கோவா கடலில் தத்தளிக்கும் 32 குமரி மீனவர்கள்

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த இந்தப் படகுகள் எங்கிருக்கின்றன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. அந்தப் படகுகளில் சுமார் 200 மீனவர்கள் இருக்கிறார்கள். அந்த மீனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார் வேதனையுடன்.