Published:Updated:

``இந்தத் தொழிலை நம்பி எப்படி வாழுறது?’’ - தேசிய கைத்தறி தினத்தில் கலங்கும் தம்பதி!

தேசிய கைத்தறி தினத்தில் கலங்கும் தம்பதி!

விசைத்தறியின் வருகை, தாறுமாறாக ஏறிய விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், கடந்த 25 வருடங்களில் இந்த காலனியில் இருந்த பல நெசவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பர்யமான கைத்தறி நெசவுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டிருந்தார்கள்.

``இந்தத் தொழிலை நம்பி எப்படி வாழுறது?’’ - தேசிய கைத்தறி தினத்தில் கலங்கும் தம்பதி!

விசைத்தறியின் வருகை, தாறுமாறாக ஏறிய விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், கடந்த 25 வருடங்களில் இந்த காலனியில் இருந்த பல நெசவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பர்யமான கைத்தறி நெசவுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டிருந்தார்கள்.

Published:Updated:
தேசிய கைத்தறி தினத்தில் கலங்கும் தம்பதி!

கைத்தறிக்கு மூல வேர் ராட்டை. காந்தியின் அகிம்சைப் போராட்டத்தின் முக்கிய அடையாளம் அது. `நாடு முழுவதும் மக்கள் ராட்டையில் நூல் நூற்க வேண்டும்; அந்த நூலைக்கொண்டு கைத்தறியில் நமக்கான துணிகளை நாமே நெய்ய வேண்டும். அப்போதுதான் அந்நியத் துணி பகிஷ்கரிப்பு சாத்தியம்’ என்று கனவு கண்டார் காந்தி. அவர் பின்னால் அணி திரண்டவர்களில் பலரும் ராட்டையில் நூல் நூற்றார்கள்; கைத்தறி நெசவில் இறங்கினார்கள்.

1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7, கல்கத்தா... ஆங்கிலேய அரசுக்கு எதிராக நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், சுதேசி இயக்கத்தை அறிவித்த தினம். அதை நினைவுகூரும்விதமாக ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடிவருகிறோம். ஒருகாலத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட புடவை, வேட்டி, துண்டு உள்ளிட்ட உடைகளுக்கு அமோக ஆதரவு இருந்தது; கைத்தறித் தொழிலும் ஓஹோவென்று செழித்து வளர்ந்தது; இப்போது கைத்தறி நெசவு எங்கே நடக்கிறது என்று தேடவேண்டியதாக இருக்கிறது.

தறி
தறி

திருச்சியில் `நெசவாளர் காலனி’ என்றே ஒரு குடியிருப்பு உண்டு. இந்த ஆண்டு, தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7-ம் தேதியை ஒட்டி, அந்த நெசவாளர் காலனிக்கு ஒரு விசிட் அடித்தோம். பெயர்தான் `நெசவாளர் காலனி.’ தற்போது அங்கே ஒரே ஒரு குடும்பம் மட்டுமே கைத்தறி நெசவு செய்கின்றனர் என்கிற தகவல் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருச்சியில், இந்தப் பாரம்பர்யத் தொழிலை ஒரே ஒரு வீட்டில் மட்டுமே செய்கிறார்கள் என்பது எப்பேர்ப்பட்ட அவலம்!

கைத்தறி
கைத்தறி

விசைத்தறியின் வருகை, தாறுமாறாக ஏறிய விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், கடந்த 25 வருடங்களில் இந்த காலனியில் இருந்த பல நெசவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பர்யமான கைத்தறி நெசவுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டிருந்தார்கள். இப்போது இங்கே கைத்தறி நெசவில் ஈடுபட்டிருக்கும் ஒரே குடும்பம் தேவாங்கர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த சித்ரா-குமார் தம்பதிதான். ஒருகாலத்தில் இந்த காலனியிலுள்ள அத்தனை வீடுகளிலும் `தடக்... தடக்...’ எனத் தறிகள் இயங்கும் பேரொலி இப்போது கேட்கவில்லை. இருப்பது ஒரே ஒரு தறி. இந்த நெசவுத் தொழிலை முழு நேரமாகப் பார்க்கிறார் சித்ரா; பகுதி நேரமாகப் பார்க்கிறார் குமார். குமாருக்கு ஐம்பத்தியோரு வயது. கைத்தறி நெசவைப் பற்றி பேச்சை எடுத்ததுமே உணர்ச்சியில்லாமல் அவரிடமிருந்து உதிர ஆரம்பித்தன வார்த்தைகள்... ``எங்க குடும்பத் தொழிலே கைத்தறிதான். தாத்தா பாட்டி காலத்துலருந்து இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றோம். ஆனால எனக்குப் பின்னாடி இதைச் செய்ய யாருமே இல்லை’’ சொல்லும்போதே அவர் குரல் உடைகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சின்ன வயசுல முதல்ல நூல் சுத்தறதுக்கும், கண்டு சுத்தறதுக்கும் கத்துக்கிட்டேன். அப்புறம் பாவு நெய்யக் கத்துக்கிட்டேன். எனக்கு இன்னும் கொஞ்சம் வயசாயிடுச்சுன்னா இந்தக் கைத்தறித் தொழிலைச் செய்ய முடியுமான்னே தெரியலை. இப்போகூட இதை விட்டுடக் கூடாது; முடிஞ்ச வரைக்கும் செய்வோம்னுதான் செய்யறோம். பிள்ளைங்க படிக்கிறாங்க. அவங்களால இதைச் செய்ய முடியலை; இந்தக் காலத்துல அது சாத்தியமும் இல்லை’’ என்கிற குமார், பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிகிறார். காலை வேளைகளில் மட்டும் வீட்டில் கைத்தறி வேலையைச் செய்கிறார். ``என்னங்க பண்றது... இந்தத் தொழில் கொஞ்சம் கொஞ்சமா நலிஞ்சு போச்சு. அதனால இதை முழு நேரமாப் பார்க்க முடியலை’’ என்கிறார்.

கைத்தறி
கைத்தறி

``சொசைட்டியில மெம்பரா இருக்கோம்.நெய்யுற சேலைகளைக் கொண்டு போய் கோ-ஆப்டெக்ஸுல கொடுத்துடுவோம். கைத்தறிங்கறதால மூணு, நாலு நாள் உட்கார்ந்து நெய்தாத்தான், ஒரு சேலையை நெய்ய முடியும். மாசம் முழுக்க இந்த வேலையைப் பார்த்தாக்கூட, 4,500 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்காது. இதையே முழு நேரமாகச் செஞ்சா, பிள்ளைகளை எப்படிப் படிக்கவெக்குறது, நாங்க எப்படிச் சாப்பிடுறது, எப்படி வாழுறது? "என்கிறார் குமாரின் மனைவி சித்ரா. அரசாங்கத்திலிருந்து தறி போட இரும்பு ராடுகள் மட்டுமே கொடுப்பதாகவும், வேறு எந்த உதவியும் வருவதில்லை என்றும் கூறுகிறார்கள் இந்தத் தம்பதி.

``அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யணும். வீடுகட்டித் தரணும். நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கிட்டே போகுது. பிள்ளைகளைப் படிக்கவெக்க அரசாங்கம் உதவி செஞ்சாத்தான், இந்தத் தொழிலை வளர்க்க முடியும். ஒரு சேலை நெய்யுற நேரத்துல மெஷின் தறியில மூணு சேலை நெய்துடலாம். கைத்தறிங்கறது ரொம்ப நுணுக்கமான வேலை. அதனாலயே பலரும் இதைச் செய்ய முன்வர்றதில்லை. நாங்க இதை விட்டுட்டா, இந்தத் தொழில் சுத்தமா காணாமப் போயிடுமேன்னு இதைச் செஞ்சுக்கிட்டு இருக்கோம்’’ என்கிறார் குமார்.

குளித்தலை, ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களில் இன்றைக்கும் நிறைய கைத்தறிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. திருச்சியில் குமார் - சித்ரா தம்பதி மட்டுமே கைத்தறி நெசவு செய்கிறார்கள். ``இன்னும் பத்து வருஷத்துல நாங்களும் இதைவிட வேண்டியதுதான். அப்புறம் என்ன... இந்தத் தறியை அடுப்பு எரிக்கத்தான் பயன்படுத்தணும்." கண்களில் கண்ணீர்த்துளி மின்ன சொல்கிறார் குமார். ``நிறைய பேர் இங்கே வந்து பார்க்குறாங்க. கைத்தறி நெசவின் முக்கியத்துவத்தையும், எங்க நிலைமையையும் புரிஞ்சுக்குறாங்க. ஆனா எங்களுக்கான உதவிதான் யார்கிட்ட இருந்தும் வர மாட்டேங்குது’’ என்கிறார் சித்ரா.

கைத்தறி
கைத்தறி

75-வது சுதந்திர நிறைவு ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்துக்கு முக்கியக் காரணமாக இருந்த சுதேசி இயக்கம் தோன்றிய நாள் இன்று. அதன் நினைவைப் போற்றும் தேசிய கைத்தறி தினத்திலாவது இந்தத் தொழிலை மீட்டெடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து போதிய உதவிகள் கிடைத்தால், திருச்சி நெசவாளர் காலனியிலும் பல நூறு கைத்தறிகள் இயங்கும் பேரொலி உரக்கக் கேட்கும்! ஒலி கேட்க உதவுமா அரசு?

சவ்பாக்யதா சு உ (மாணவப் பத்திரிகையாளர்)